செவ்வாய், 5 டிசம்பர், 2017

விஷால் மனு ஏற்கப்பட்டது .ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டி இடுவது உறுதி

மாலைமலர் :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும். ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு மாலை ஐந்தரை மணியளவில் விரைந்து வந்த நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.


இதை தொடர்ந்து தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார் பேட்டை சாலையில் அமர்ந்து விஷால் திடீர் மறியலில் ஈடுபட்டார். விரைந்துவந்த போலீசார் விஷாலிடம் சமரசம் பேசி தேர்தல் அலுவகத்துக்குள் அழைத்து சென்றனர். 

பின்னர் தேர்தல் அதிகாரியிடம், முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ ஆதாரத்தை காண்பித்திருக்கிறார். மேலும் தனக்காக முன்மொழிந்தவர்களை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாகவும், வாபஸ் பெற கையெழுத்து பெறப்பட்டதாகவும் விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த ஆடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி சில திருத்தங்கள் செய்த பின்னர் விஷாலின் வேட்பு மனு எற்கப்பட்டதாக இன்றிரவு 8.20 மணியளவில் அறிவித்தார். இதன் மூலம் இங்கு விஷால் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக