செவ்வாய், 26 டிசம்பர், 2017

சவுக்கு : பணமில்லாவிட்டால் வெற்றியின் கடைசி படிக்கட்டை தொட முடியாது

ஆர்கே நகர் – முடிவு சொல்லும் சேதி என்ன ? 

ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள், டிடிவி தினகரனைத் தவிர, போட்டியிட்ட இதர கட்சிகள் அனைத்தையுமே கலகலத்துப் போகத்தான் வைத்திருக்கிறது.   ஜெயலலிதா இறந்த பிறகு நடைபெறும் ஒரு தேர்தல் என்பதால் இந்த இடைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்று, இந்தியா முழுக்கவே கவனிக்கப்படும் தேர்தலாக உருமாறியிருந்தது.
டிடிவி தினகரனின் வெற்றியை மிக எளிதாக பணத்தால் கிடைத்த வெற்றி என்று புறந்தள்ளி விடலாம்.  ஆனால் உண்மை அது அல்ல.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், சசிகலா தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துக் கொண்டு, தமிழக முதல்வராகும் திட்டத்தில் இருந்தபோது, தமிழகம் முழுக்க பொங்கியெழுந்த சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் மீதான வெறுப்பு அலையை யாரும் மறந்திருக்க முடியாது.   வெளிப்படையாகவே மக்கள் சசிகலாவையும், மன்னார்குடி மாபியாவையும் சபித்தார்கள்.   ஆளுனர் வித்யாசாகர் ராவ், சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல், தலைமறைவாகியதும், அதன் பின் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.

அப்போது சசிகலா மீது இருந்த வெறுப்பு, டிடிவி தினகரனின் மீதும் இருந்தது.   ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பத்தின் மீதே இருந்தது.   ஆனால், கடந்த ஒரு வருடத்தில், நிலைமையை தலைகீழாக மாற்றி, தன் மீது இருந்த வெறுப்புணர்வை மறையச் செய்து,            திமுக போன்ற ஒரு பிரதான கட்சியையும், ஆளுங்கட்சியையும் மீறி மக்கள் ஆதரவை டிடிவி பெற்றுள்ளார்.
வெகு குறைந்த காலத்தில் அதிமுகவினரின் செல்வாக்கையும் டிடிவி தினகரனால் பெற முடிந்துள்ளது.   1995ம் ஆண்டிலேயே அந்நியச் செலாவணி மோசடியில் காபிபோசா சட்டத்தில் ஒரு ஆண்டு சிறையில் இருந்தவர்.    2000ம் ஆண்டில், லண்டனில் ஹோட்டல் வாங்கியதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஜெயலலிதா மற்றும் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது.   பின்னாளில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
1995ல், அந்நியச் செலாவணி மோசடிக்காக அமலாக்கத் துறை பதிவு செய்த இரண்டு வழக்குகளின் விசாரணை, 20 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் தொடங்கி நடைபெற்று வருகிறது.    இது தவிர, சமீபத்தில், டெல்லி காவல்துறை, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இரட்டை இலை பெறுவதற்காக லஞ்சம் தர முயற்சித்தார் என்று ஒரு வழக்கு பதிவு செய்து தினகரனை திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, டிடிவி தினகரன் மீது பெரும்பாலான மக்களுக்கு ஒரு ஏற்புணர்வு வந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
டிடிவி தினகரனின் இந்த குறுகிய கால வளர்ச்சி குறித்து பேசிய, மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, யார் அதிமுகவின் தலைமை என்ற ஒரு பெரும் பனிப்போர் தொடர்ந்து நடந்து வந்தது.  அந்த பனிப்போருக்கான விடையாக இந்த ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
ஆர்கே நகர் ஜெயலலிதாவின் தொகுதி.   அவர் விட்டுச் சென்ற இடம்.   இந்தத் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவதால், அவரால் தொகுதிக்கு பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாது என்பது தொகுதி மக்களுக்கு நன்றாகத் தெரியும்.   ஆனாலும் அவரைத்தான் தேர்ந்தெடுத்தனர்.  இதற்கு பிரதான காரணம், தற்பபோது உள்ள ஆளுங்கட்சி மீதான கடும் அதிருப்தி.   நாம் தமிழர் உட்பட, டிடிவி தினகரன் மற்றும் திமுகவுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தையுமே, இந்த ஆட்சிக்கு எதிரான ஒரு வாக்காத்தான் பார்க்க முடியும்.
கடந்த ஆறு மாதங்களாக அவரது நிதானமான நடவடிக்கைகளின் மூலமாக, மக்களின் நம்பிக்கையை டிடிவி தினகரன் வென்றெடுத்துள்ளார்.    திமுகவின் வாக்கு வங்கியிலிருந்தே  பல ஆயிரம் வாக்குகள் டிடிவி தினகரனுக்கு விழுந்துள்ளன.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி முழுநேர அரசியலில் இல்லாத இந்த சூழலில், மக்கள் டிடிவி தினகரனை தலைவராக ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டார்கள் என்பதையே இந்த முடிவு காட்டுகிறது.   டிடிவி தினகரனுக்கு பதிலாக, வேறு ஒருவர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்குமா என்பதை சொல்ல முடியாது.  ஆனால் டிடிவி தினகரன் போட்டியிட்டதால், கருணாநிதி, ஜெயலலிதா போட்டியிடுவதைப் போன்ற ஒரு விஐபி தொகுதியாக இது மாறிப் போனது.
அதிமுகவை தலைமையேற்று வழி நடத்தும் தகுதி உள்ளவர் டிடிவி தினகரன்தான் என்பதையே ஆர்கே நகர் முடிவுகள் உணர்த்துகின்றன.  தமிழகம் முழுக்க உள்ள அதிமுக தொண்டர்களின் மனநிலையும் இதுதான்.   ஒவ்வொரு தொகுதிக்கும் இந்த சதவிகிதம் மாறுபடும்.  ஆனால் நிலைமை இதுதான்”  என்றார்.
இது மட்டுமல்லாமல், மத்திய அரசு டிடிவி தினகரனுக்கு கொடுத்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.   இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற வழக்கில் கைது செய்தது முதல், 1800 அதிகாரிகளை வைத்து மன்னார்குடி குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட சோதனைகள் உட்பட பிஜேபி, அவருக்கு நேரடியாக அளித்த செய்தி, அரசியலை விட்டு விலகு.  இல்லையேல், ஒழித்துக் கட்டப் படுவாய் என்பதுதான்.
இது போக மறைமுகமாகவும் அவருக்கு பல மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.   இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாளே இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.   சின்னமும் இல்லாமல் கட்சியும் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.

இரட்டை இல்லை இல்லாததால், அவர் கடந்த முறை பெற்ற தொப்பி, கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்களை கேட்டார்.  ஆனால், மிக மிக தந்திரமாக ஆளுங்கட்சி, பதிவு செய்த கட்சிகளை இந்த தேர்தலில் போட்டியிட வைத்து, அவர்கள் தினகரன் கேட்ட தொப்பி,  விசில், கிரிக்கெட் பேட் போன்ற சின்னங்களை ஒதுக்கீடு பெறச் செய்யும் வேலையையும் அதிமுகவினர் செய்தனர்.
தற்போது நடக்கும் ஆட்சி எத்தகையது, அதில் முதல்வராகவும், துணை முதல்வராகவும் உள்ளவர்கள் எத்தகைய “மக்கள் செல்வாக்கு“ பெற்றவர்கள் என்பதும் ஆளுங்கட்சிக்கு நன்றாகவே தெரியும்.   ஆகையால் ஆளுங்கட்சி முழுக்க முழுக்க நம்பியிருந்தது பணம் மட்டுமே.    இந்த பணப் பட்டுவாடாவை தங்கு தடையில்லாமல் நடக்க முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தது காவல்துறையும், தேர்தல் ஆணையமுமே.
டிடிவி தினகரனின் பிரச்சாரத்தை தடுக்க வேண்டும், அவரை முடக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்டத்திலும் காவல்துறை முயற்சிகள் எடுத்தது.   பிரச்சாரம் தொடங்கிய உடனேயே டிடிவி ஆதரவாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.  பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார் தினகரன்.
ஆனால், மற்ற அனைவரையும் விட மிக மிக திறமையாக பிரச்சாரத்தை முன்னெடுத்து, தொய்வில்லாமல் பிரச்சாரத்தை முடித்ததும் தினகரன்தான்.     பிஜேபி மற்றும் அதிமுக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தினகரனுக்கு தொடர்ந்து அளித்த நெருக்கடிகள், மக்களுக்கு அவர் மீது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
வெகு சில இடங்களில் மட்டும், டிடிவி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.  அதுவும் முதல் நாள் இரவுதான்.    பெரிய அளவில் பண விநியோகத்தில் ஈடுபடாமல் டிடிவி தவிர்த்ததற்கான முக்கிய காரணம், கையும் களவுமாக பிடிக்க காத்திருக்கிறார்கள் என்பதும், பணம் விநியோகித்து பிடிபட்டால் தகுதிநீக்கம் செய்யப்படும் அளவுக்கு இது செல்லும் என்பதையும் அவர் உணர்ந்திருந்ததால்தான்.
வாக்காளர்களுக்கு கொடுக்கப்படவில்லையே தவிர, தேர்தல் பணியாற்றியவர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், தாராணமாக செலவழித்தார் தினகரன்.    டிடிவி தினகரன் பிரச்சாரத்தை அணுகும் முறையை ஆர்கே நகரில் இருந்து தொடர்ந்து கவனித்த  திமுகவை சேர்ந்த ஒருவர், “ஆலையில் சங்கு ஊதியதும் வேலைக்கு வரும் மில் தொழிலாளர்களைப் போல காலையிலேயே பிரச்சாரத்துக்காக டிடிவி அணியினர் கூடி விடுவார்கள்.  டிடிவியின் பிரச்சாரம் கொஞ்சம் கூட சுணக்கமில்லாமல் நடைபெற்றது”      என்றார்.
டிடிவியின் பிரச்சார குழுவில் இடம்பெற்ற ஒருவர், ஒவ்வொரு 200 ஓட்டுக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்திருந்தார் டிடிவி என்று கூறினார்.   அப்படி நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளர்களின் பணி, நாள் தவறாமல் வாக்காளர்களை சென்று சந்தித்து, குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்க கோருவதுதான்.   இந்த பொறுப்பாளர்களுக்கு தாராளமாக பணம் கொடுத்தார் தினகரன்.   இது அவர்களை உற்சாகமாக பணியாற்ற உதவியது.  பிரச்சாரப் பணிகள் துளியும் தொய்வில்லாமல் நடைபெற்றன.
ஆனால் தினகரனே இப்படியொரு பிரம்மாண்ட வெற்றியை எதிர்ப்பார்க்கவில்லை என்றே தெரிகிறது.   தமக்கு மக்கள் செல்வாக்கு ஓரளவு இருக்கிறது.  கணிசமான வாக்குகளை பெறுவோம் என்று எதிர்ப்பார்த்திருந்தாலும், இப்படி ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பதை அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.
இந்த வெற்றியின் காரணமாக, எடப்பாடி மற்றும் பன்னீரின் பின்னால் உள்ள அடிமைகள், டிடிவி தினகரன் பக்கம் சாயக்கூடும்.    ஆட்சியும் கவிழக் கூடும்.  அதன்பின் டிடிவி தினகரன் எப்படி அரசியல் நடத்துகிறார் என்பதும், அவரது பிஜேபி எதிர்ப்பு நிலைபாடு எப்படி இருக்கும் என்பதுமே அவர் ஒரு தற்காலிக பரபரப்பா, நீண்ட நாள் நிலைத்து இருக்கப் போகிறாரா என்பதையும் தெளிவுபடுத்தும்.
மேலும் சில வழக்களை காட்டி பயமுறுத்தவும், பழைய வழக்குகளில் நெருக்கடி தரவும் பிஜேபி அரசாங்கம் நிச்சயம் முயற்சி எடுக்கும்.  அதை எதிர்கொள்வதில்தான் தினகரனுக்கான உண்மையான சவால் அடங்கியிருக்கிறது.
அதே நேரம் தினகரன் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும்.    தற்போது ஆர்கே நகர் மக்கள் அளித்திருக்கும் வாக்குகள் அவருக்கானவை. அவரது தனிப்பட்ட செல்வாக்குக்கானவை.   இந்த செல்வாக்கை பயன்படுத்தி, இளம் தொழிலதிபர் விவேக் ஜெயராமனும், அவர் அக்கா கிருஷ்ணபிரியாவும், சசிகலா தம்பி திவாகரனும், அவர் மகன் ஜெய் ஆனந்தும் அரசியலில் கால் பதிக்க முயல்வார்கள்.    அதன் விளைவுகள் எப்படி அமையும் என்பதை தினகரனால் ஊகிக்க முடியும்.  தன் உறவினர்களை சமாளிப்பதும், டிடிவி தினகரன் முன்னால் உள்ள பெரிய சவால்.  ஏனென்றால் கடந்த 25 வருடங்களாக, கொள்ளையடித்தே பழக்கப்பட்ட ஒரு கூட்டத்துக்கு திடீரென்று அமைதியாக இருப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.

டிடிவி தினகரனின் பிரச்சாரம் சரியான திசையில் சென்றது என்றால், திமுகவின் பிரச்சாரம் அத்தனையும் தவறாக அமைந்தது.   கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தல் போல இல்லாமல், இம்முறை இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டோரின் ஆதரவு திமுகவுக்கு கிடைத்தது.  ஆனால், தொடக்கம் முதலே இந்த இடைத் தேர்தலை ஸ்டாலின் உரிய முக்கியத்துவத்தோடு அணுகவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
டிடிவி தினகரன் இந்தத் தேர்தலை வாழ்வா சாவா என்றே அணுகினார்.  ஸ்டாலினும் அப்படித்தான் அணுகியிருக்க வேண்டும்.  ஆனால், ஜெயலலிதா இல்லாத நிலையில், நமது வெற்றி எளிதானது என்று ஸ்டாலின் கருதி விட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
15 நாட்கள் ஆர்கே நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர் இது குறித்து பேசுகையில் “டிடிவி ஆளுங்க, காலையில 8 மணிக்கே வேலையை ஆரம்பிச்சிடுவாங்க.   எங்க ஆளுங்க 11 மணிக்கு வருவாங்க.   வந்தும், அரை மணி நேரத்துல கிளம்பி போயிடுவாங்க.
திமுக மாவட்டச் செயலாளர்கள் அத்தனை பேருக்கும் ஆர்கே நகர்லதான் வேலை.  ஆனா, அவங்க வருவாங்க.  வந்ததும், முரசொலி போட்டோகிராபரும், ரிப்போர்டரும் வந்துட்டாங்களான்னு பாப்பாங்க.  அவங்க வந்ததும் போட்டோ எடுத்துக்கிட்டு, அவங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு 1000 ரூபாய் குடுத்துட்டு போயிடுவாங்க.  அதுக்கு அப்புறம், கூட்டம் வந்தாத்தான் பிரச்சாரத்துக்கு போக முடியும்.
டிடிவி அணியில பிரச்சாரத்துக்கு வந்தவங்க எல்லாருக்கும் ஒரு நாளைக்கு 500 ரூபா குடுத்தாங்க. எங்களுக்கு ஒரு நாளு 300 ரூபா குடுத்தாங்க.  மறு நாள் காசு குடுக்க ஆளு இல்ல.   காசு வராதுன்னு தெரிஞ்சு பல பேரு பிரச்சாரத்துக்கு வராம தவிர்த்துட்டாங்க. “ என்றார்.
இதர திமுக வேட்பாளர்களைப் போல, மருது கணேஷ் வசதியான வேட்பாளர் கிடையாது.   அவரால் தனிப்பட்ட முறையில் செலவு செய்ய முடியாது.  மற்றவர்களும் செலவு செய்யத் தயாராக இல்லை.

பிரச்சாரத்துக்கு வந்திருந்த ஒரு மாவட்டச் செயலாளர், பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையோடு பேசினார்.  “கடந்த 7 வருஷமா நாங்க ஆட்சியில இல்லை.  இந்த ஏழு வருஷத்துல, ஆர்ப்பாட்டம், போராட்டம், ரெண்டு சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், பேரணி, மாநாடுன்னு நாங்க தொடர்ந்து செலவு பண்ணிக்கிட்டு இருக்கோம்.  தளபதி வந்தார்னா, குறைஞ்சது ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் 15ல இருந்து 20 லட்ச ரூபா வரைக்கும் செலவாகும்.  செலவு பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம்.
ஒவ்வொரு முறை மாநாடு, பேரணின்னா நாங்கதான் நிதி திரட்டித் தர்றோம்.   முரசொலி நிதி, முப்பெரும் விழா நிதின்னு வசூல் பண்ணி குடுத்துக்கிட்டே இருக்கோம்.  தனியா தேர்தல் நிதின்னே இருக்கு.  அந்த பணமெல்லாம் எங்க போச்சு ?
பிரச்சாரத்துக்கு வர்ற மாவட்டச் செயலாளர்கள், அன்னைக்கு பிரச்சாரத்துக்கு வர்றவங்க முழுக்க செலவு பண்ணணும்னு சொன்னா நாங்க எங்க போறது ?   இதனால, நான் உட்பட பல மாவட்டச் செயலாளர்கள், ஒரு நாளைக்கு மேல அங்க இல்லாம இடத்தை காலி பண்ணது உண்மைதான்.   எவ்வளவுதான் சார் நாங்க செலவு பண்றது ?” என்று புலம்பினார்.
எத்தனையோ தேர்தல்களை சந்தித்து நீண்ட அனுபவம் உள்ள ஸ்டாலின்,  ஆர்கே நகர் தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்தை தராமல் போனது வியப்பான ஒன்றே.   சில ஆண்டுகள் முன்னால் ஸ்டாலினோடு நெருக்கமாக பணியாற்றிய ஒருவர்  “ஸ்டாலினைப் போல கடுமையான உழைப்பாளியை பார்க்க முடியாது.   அவரது நோக்கங்கள் எதுவும் பிழையானது அல்ல.    ஆனால், கள நிலைமைகளின் கசப்பான உண்மைகளை அவர் கேட்க மறுக்கிறார்.  ஆர்கே நகரில் தோற்று விடுவோம் என்ற யதார்த்தம் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு கட்சி நிர்வாகிக்கு தெரிந்திருந்தாலும், அதை அவரால் ஸ்டாலினிடம் வெளிப்படையாக சொல்ல முடியாது.
ஸ்டாலினோடு எப்போதும் இருக்கும் துரை முருகன், பொன்முடி போன்றோர், அவருக்கு பிடித்தமான, மனதுக்கு இதமான செய்திகளை மட்டுமே அவர் காதுக்கு கொண்டு செல்கிறார்கள்.   துரைமுருகன், தம்பி, எப்போ தேர்தல் வரும், எப்போ நம்ப கையில மை வைப்பாங்கன்னு வாக்காளர்கள்லாம் திமுகவுக்கு ஓட்டு போடணும்னு விரலை நீட்டிக்கிட்டே தூங்கறாங்க தம்பி என்று கூறுவதை அப்பயே உண்மை என்று ஸ்டாலின் நம்புகிறார்.
ஆர்கே நகர் விவகாரத்திலும், உண்மையான கள நிலவரத்தை ஸ்டாலின் காதுக்கு கொண்டு சென்றிருக்க மாட்டார்கள்.  அவரும், மனதுக்கு இதமான கருத்துக்களை கூறுபவர்களையே அவர் அருகில் வைத்திருக்கிறார்.   உண்மையை சொல்லுங்கள்.  உண்மையில் என்ன நிலவரம் என்பதை ஸ்டாலின் கேட்டறிந்திருந்தால், இந்த மோசமான தோல்வியை தவிர்த்திருக்க முடியும்” என்றார்.
டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக போன்ற ஒரு பெரிய இயக்கம் தோல்வியை சந்தித்தது என்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.    ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை திமுக தலைமை உணரவில்லை என்றே தோன்றுகிறது.
எப்போதும் வரும் விமர்சனம் ஸ்டாலின் மீது தற்போதும் வைக்கப்படும்.  கலைஞர் இருந்திருந்தால் இப்படி விட்டிருப்பாரா என்ற விமர்சனம் வரத்தான் செய்யும்.   நம் எல்லோரையும் விட, கருணாநிதியின் தேர்தல் பிரயத்தனங்களை, முன்னேற்பாடுகளை அருகில் இருந்து பார்த்தவர் ஸ்டாலின்.   அவர் எப்படி செயல்பட்டிருப்பாரோ, அப்படி செயல்பட்டிருக்க வேண்டாமா ?    ஆர்கே நகரில் அவரும் பம்பரமாக சுழன்று, கட்சியினரையும் விரட்டி வேலை வாங்கியிருக்க வேண்டுமா, வேண்டாமா ?
மாறாக, பணம் வென்று விட்டது என்று அறிக்கை விடுவது எந்த வகையில் சரியாக இருக்கும் ?   மக்களை பணம் வாங்க பழக்கப்படுத்தியதில், திமுகவுக்கு சிறிதும் பங்கு இல்லையா என்ன ?  சாத்தான்குளத்தில் 2003ல் ஜெயலலிதா தொடங்கி வைத்தாலும், அதை நிறுவனமயப்படுத்தி மக்களை பணத்துக்கு அடிமையாக்கியதில் திமுகவுக்கு பங்கு இல்லையா ?
ஏறக்குறைய 90 சதவிகித வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவை அதிமுக கச்சிதமாக செய்து முடித்து விட்டது.   தலா 6000 ரூபாய்.  ஆனால், மக்கள் தினகரனைத்தான் வெற்றி பெறச் செய்தார்கள்.  ஒரு வகையில், ஆர்கே நகர் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடத்தை புகட்டும்.  பணத்தை பெறும் மக்கள், அப்படியே பணம் கொடுத்த வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்து விட மாட்டார்கள் என்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கிறது.  அதனால் பணம் வென்றது என்று மக்களை மொத்தமாக குறை சொல்வது, ஸ்டாலின் போன்ற மூத்த அரசியல்வாதிக்கு அழகல்ல.  மக்களை பணத்துக்கு பழக்கப்படுத்தியதில் ஒரு முக்கிய பங்கு வகித்த இயக்கம், இந்த குற்றச்சாட்டை மக்கள் மீது வைக்கலாமா ?
திமுக மாபெரும் இயக்கம்.  1991 தேர்தல் போன்ற மோசமான தோல்விகளை சந்தித்து, வீறு கொண்டு எழுந்து வந்திருக்கிறது.   அதை சரியான முறையில் வழி நடத்தி, வெற்றி கோட்டை தாண்டும் வரை, அதன் கரங்களை விடாமல் அழைத்து செல்வது, ஸ்டாலினின் வேலை.
ஆர்கே நகர் தேர்தல், போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்குமே ஒரு நல்ல பாடத்தைத்தான் புகட்டியிருக்கிறது.  உழைத்தால் வெற்றி என்பதை டிடிவி புரிந்து கொண்டார்.  பணமில்லாவிட்டால் வெற்றியின் கடைசி படிக்கட்டை தொட முடியாது என்பதையும் புரிந்து கொண்டிருப்பார்.
அலட்சியம் படுதோல்வியை தரும் என்பதை ஸ்டாலின் புரிந்து கொண்டார்.  வாக்காளர்களுக்கு லஞ்சமும் வெறும் இரட்டை இலையும் வெற்றியை தராது என்பதை எடப்பாடியும், பன்னீர்செல்வமும் புரிந்து கொண்டிருப்பார்கள்.   பிஜேபி மிக மிக மிக வேகமாக தமிழகத்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழிசை புரிந்து கொண்டிருப்பார்.
அடுத்து வரக்கூடிய காலங்களில், தமிழக அரசியலில் ப்ரேக்கிங் நியூசுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று உறுதியாக எதிர்ப்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக