புதன், 27 டிசம்பர், 2017

BBC : பெனாசிர் படுகொலையில் பின்னணியில் இருந்தது யார்?

ஒரு முஸ்லிம் நாட்டை வழிநடத்திய முதல் பெண்மணி பேனசீர் பூட்டோ. இவர் கொல்லப்பட்ட 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் எப்படி இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறதே தவிர, இவரது கொலைக்கு உத்தரவிட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பிலால் எனப்படும் 15 வயதான தற்கொலை குண்டுதாரியால், டிசம்பர் 27-ம் தேதி 2007-ம் ஆண்டு பூட்டோ கொல்லப்பட்டார்.
ராவல்பிண்டியில் நடந்த ஒரு தேர்தல் பேரணியைப் பூட்டோ முடித்துவிட்டுச் சென்றபோது பூட்டோவின் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற பிலால், பூட்டோவை துப்பாக்கியால் சுட்டும், தற்கொலை வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினார். இந்த தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தாலிபன்களால் பிலால் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரான சுல்பிக்கார் அலி பூட்டோவின் மகள்தான் பேனசீர் பூட்டோ. அலி பூட்டோவின் அரசியல் வாழ்க்கையும் விரைவிலே முடிந்தது. தளபதி ஜியா-உல் ஹக்கின் ராணுவ ஆட்சியின் போது அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

1990களில் பேனசீர் பூட்டோ இரண்டு முறை பிரதமரானார். அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு ஊழல் குற்றச்சாட்டுகளை பயன்படுத்திய ராணுவத்தைக் கண்டு அவர் எப்போதும் பயந்தார்.
பேனசீர் பூட்டோ இறந்தபோது, மூன்றாம் முறையாகப் பிரதமராவதற்கான முயற்சிகளில் இருந்தார். இந்த படுகொலை பாகிஸ்தானில் உள்நாட்டு அமைதியின்மையை ஏற்படுத்தியது. பூட்டோவின் அதரவளார்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். சாலைகளை மறித்தனர், தீ வைத்தனர், பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

போனில் மிரட்டிய தளபதி
அரசு அமைப்பில் உள்ளவர்கள் அவரது படுகொலையில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என ஒரு தசாப்தம் கழித்து அப்போதைய பாகிஸ்தான் தளபதி முஷாரஃப் கூறுகிறார்.
பூட்டோவை கொல்வதற்காக அரசு அமைப்புக்குள் இருந்த சில தீயசக்திகள் தாலிபன்களுடன் தொடர்பில் இருந்தார்களா என கேட்டபோது,''சாத்தியமிருக்கிறது. ஆம் உண்மை. ஏனெனில் சமுதாயம் மதக்கோடுகளால் பிரிந்துள்ளது'' என்கிறார் முஷாரஃப் .
அவரது மரணத்திற்குப் பின்னால் தீயசக்திகள் இருந்திருக்கலாம் என அவர் கூறுகிறார்.
இது முன்னாள் பாகிஸ்தான் தலைவரின் அதிர்ச்சியூட்டும் தகவலாகும். வன்முறை ஜிகாதி தாக்குதலுக்கு அரசு உடந்தையாக இருந்தது என கூறப்படுவதை வழக்கமாக முன்னாள் ராணுவத் தலைவர்கள் மறுப்பார்கள்.
பூட்டோவின் படுகொலையில், அரசு அமைப்பில் உள்ளவர்கள் சில தீயசக்திகள் ஈடுபட்டது குறித்து எதாவது குறிப்பிட்ட தகவல் இருக்கிறதா என கேட்டபோது, '' என்னிடம் எதுவும் இல்லை. ஆனால், என் மதிப்பீடு மிகவும் துல்லியமானது என நினைக்கிறேன். மேற்கத்திய சிந்தனை கொண்டவராக அறியப்படுகிறது. அவரை, அந்த தீய சக்திகள் சந்தேகத்துடனே பார்த்தார்கள்'' என்கிறார்.

பூட்டோ வழக்கு தொடர்பாக முஷாரஃப் மீதே கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன. எட்டு ஆண்டுகள் தானாக ஏற்றுக்கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வந்த பூட்டோ, தனது வெளிநாட்டு வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டு நாடு திரும்பவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு வாஷிங்டனில் இருந்த பூட்டோவுக்கு முஷாரஃப் பேசியதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
முஷாரஃப் தொலைபேசி அழைப்பு வந்தபோது தாங்கள் பூட்டோவுடன் இருந்ததாக, பூட்டோவின் நீண்ட கால உதவியாளர் மார்க் செகால் மற்றும் பத்திரிகையாளர் ரான் சுஸ்கின் ஆகிய இருவரும் கூறுகின்றனர்.
''அவர் என்னை மிரட்டினார். என்னை திரும்பி வரக்கூடாது என்று எச்சரித்தார்.'' என தொலைபேசி அழைப்பு வந்த உடனே பூட்டோ கூறினார் என்கிறார் செகால்.
பூட்டோ திரும்ப வந்தால், அவருக்கு ஏதேனும் நடந்தால் தான் பொறுப்பாக மாட்டேன் என முஷாரஃப் கூறினார்.
பூட்டோவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததை செய்ததை முஷாரஃப் கடுமையாக மறுக்கிறார். அவரை கொலை செய்ய உத்தரவிட்டதாகக் கூறப்படுவதையும் மறுக்கிறார். '' உண்மையில் நான் அதற்குச் சிரித்தேன். நான் ஏன் அவரை கொல்ல வேண்டும்'' என சமீபத்தில் அவர் பிபிசியிடம் கூறினார்.
பயங்கர சதி
முஷாரஃப் தற்போது துபாயில் இருப்பதால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. பூட்டோவின் மகனும் அவரது அரசியல் வாரிசுமான பிலாவல், முஷாரஃபின் மறுப்புகளை நிராகரிக்கிறார். ''என் தாயை கொல்வதற்கு இந்த முழு சூழ்நிலையையும் முஷாரஃப் பயன்படுத்திக்கொண்டார். என் தாய் படுகொலை செய்யப்படுவார் என்பதற்காக வேண்டுமென்றே என் தாய்க்கு பாதுகாப்பு தர முஷாரஃப் அரசு தவறிவிட்டது'' என்கிறார் பிலாவல்.
முஷாரஃப் வழக்கு தொடர்ந்தாலும், பூட்டோ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். பாகிஸ்தான் தாலிபன் மற்றும் அல் கய்தாவின் கட்டளைப்படி, பூட்டோவை கொல்வதற்கு 15 வயதான பிலாலுக்கு உதவியாக படுகொலை நடந்த ஒரு வாரத்திற்குள் ஐந்து சந்தேக நபர்களும் ஒப்புக்கொண்டனர்.
பூட்டோவை கொல்ல தற்கொலை குண்டுதாரியாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதாக அடிஜாஸ் ஷாவிடம் பாகிஸ்தான் தாலிபான்கள் கூறியுள்ளனர். இவர் போலீஸாரால் முதலில் கைது செய்யப்பட்டார், சதிக்கு ஏற்பாடு செய்ததாக மற்ற இருவர் ஒப்புக்கொண்டனர். படுகொலைக்கு முந்தைய இரவு பிலாலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஹசென் குல் மற்றும் ரபாகத் ஹுசைன் ஆகியோர் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். 


அவர்கள் பின்னர் வாக்குமூலத்தைத் திரும்ப பெற்றாலும், பூட்டோவின் படுகொலைக்கு முன்னர் சந்தேக நபர்களின் இருப்பிடங்களும், தகவல் தொடர்புகளும் தொலைபேசி பதிவுகளும் பார்க்கும்போது தொடர்பு இருப்பது போல தெரிகிறது.
பிலால் உடல் பாகங்களின் டி.என்.ஏ மாதிரி, அமெரிக்க ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. அது ஹுசைன் வீட்டில் இருந்த ஷூ, சால்வையுடனும் ஒத்துப்போனது.
சதிகாரர்கள் என கூறப்படும் இவர்களுக்குத் தண்டனை கிடைக்கும் என சில மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர்கள் நம்பினர். ஆனால், செப்டம்பர் மாதம் வழக்கு தகர்ந்தது. சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழங்கப்பட்டதில் செயல்முறை தவறுகள் இருப்பதாக நீதிபதி அறிவித்தார். இதன் பொருள் அவர் அவர்களை விடுவிக்க வேண்டியிருந்தது என்பதாகும்.
இவர்கள் ஐந்து பேரும் இன்னும் காவலில் உள்ளனர், மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. அதிபரான கணவர்

பூட்டோவின் படுகொலைக்கு அவரது கணவர் ஆசிஃப் அலி ஜர்தாரி ஏற்பாடு செய்தார் என மக்கள் குற்றச்சாட்டுவதை பாகிஸ்தானில் கேட்கலாம். பூட்டோவின் மரணத்திற்குப் பிறகு இவர் அதிபரானதால் இக்குற்றச்சாட்டு இயல்பாக வந்தது.
ஆனால், இது தொடர்பாக எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆசிஃப் ஜர்தாரியும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

அதிகாரம் இருந்தபோதும், அவரது மனைவியின் மரணம் குறித்து முறையாக விசாரிக்கத் தவறிவிட்டதாக ஆசிஃப் ஜர்தாரி மற்றொரு குற்றச்சாட்டினையும் எதிர்கொள்கிறார். இது தொடர்பான போலீஸ் விசாரணைகள் மிக மோசமாக நிர்வகிக்கப்பட்டன என்றும், கீழ் மட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு மேல் இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அவர்கள் விரும்பவில்லை என்பதை பிபிசி பெற்ற ரகசிய விசாரணை ஆவணங்கள் காட்டுகின்றன.
விசாரணை ராணுவத்தால் மட்டுமல்லாமல், ஜர்தாரியின் அமைச்சர்களாலும் தடுக்கப்பட்டது என ஐ.நா ஆணையத்தின் தலைவர் ஹெரால்டு முனோஸ் கூறுகிறார்.
சட்டத்தை மீறிய கொலை
பூட்டோவை படுகொலை செய்த பதின்ம வயது இளைஞர், பூட்டோ அருகில் செல்ல உதவிய இரண்டு பேர் ராணுவ சோதனை சாவடியில் 2008-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி கொல்லப்பட்டனர் என பிபிசி நடத்திய விசாரணையின் ஆதாரத்தில் கிடைத்தது.
ஜர்தாரி அரசின் ஒரு மூத்த உறுப்பினர் பிபிசியிடம் கூறுகையில்,'' இது ஒரு சட்டத்தை மீறிய கொலை'' என பிபிசியிடம் கூறினர்.
நதிர் மற்றும் நஸ்ருல்லா கான் ஆகியோர் வடகிழக்கு பாகிஸ்தானில் தலிபன் ஆதரவு மதராஸாவின் மாணவர்கள். இந்த சதியில் சம்பந்தப்பட்ட மற்ற மணவர்களும் கொல்லப்பட்டனர். பிபிசியால் பெறப்பட்ட மிகவும் விரிவான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஒன்று சிந்து மாகாண சபைக்கு அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பவர் பாயிண்ட் விளக்கக்காட்சி ஆகும்.
பெனாசீர் பூட்டோவைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட தற்கொலை ஜாக்கெட்டை வழங்க உதவியதாக, குண்டு தயாரிப்பாளரும் மதராஸாவின் முன்னாள் மாணவருமான அபத் உர் ரஹ்மான் பெயர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரும் 2010-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
 

தற்கொலை ஜாக்கெட்டை பூட்டோ கொலை செய்யப்பட்ட ராவல்பண்டிக்கு எடுத்து சென்ற அப்துல்லாவும் கொல்லப்பட்டார்.
படுகொலையுடன் தொடர்புடைய கொலைகளின் முக்கியமானதாக கருதப்படுவது காலித் ஷேன்ப்ஷாவின் மரணம். இவர் பூட்டோவின் பாதுகாவலர்களில் ஒருவர். பூட்டோ ராவல்பண்டியில் கடைசி உரையை வழங்கிக்கொண்டிருக்கும் போது அவர் சில அடி தொலைவில் இருந்தார்.
அவர் விசித்திரமான செய்கைகளை தொடர்ச்சியாகச் செய்வதை, மொபைல் போன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால், இது குறித்து எந்தவொரு நியாயமான விளக்கமும் வழங்கப்படவில்லை. 


அவர் விரல்களால் கழுத்தை தடவி கொண்டே, பூட்டோவை நோக்கி கண்களை உயர்த்தி சைகை செய்யும் படங்கள், ஜூலை மாதம் 2008-ம் ஆண்டு வைரலாக பரவிய நிலையில், கராச்சியில் அவரது வீட்டுக்கு வெளியே அவர் கொல்லப்பட்டார்.
அடுத்தது அரசு வழக்கறிஞர் சௌத்ரி ஜூல்பிகார். தகுதியும், மதிப்பும் கொண்ட வழக்கறிஞரான இவர், பூட்டோவின் விசாரணை குறித்து உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டுவருவதாக நண்பர்களிடம் கூறினார். 2013-ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக சட்ட விசாரணைக்காக சென்றுகொண்டிருந்தபோது அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உயிருடன் வந்த இறந்த நபர்
இறுதியில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட ஒரு நபர் இருந்தார். ஆனால், இன்னும் அவர் உயிருடன் உள்ளார். அவர்களது குற்ற ஒப்புதல்களில், கொலை நடந்த நாளன்று இரண்டாவது தற்கொலை தாக்குதல்தாரி இக்ராமுல்லா என்பவரும் பிலால் உடன் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறினர். பிலால் தனது காரியத்தை வெற்றிகரமாக முடித்தபின், இக்ராமுல்லாவின் உதவி அவருக்குத் தேவைப்படவில்லை என்பதால் அவர் பிரச்சினையின்றி விலகிச் சென்றார்.
இக்ரமுல்லா வான்வழித் தாக்குதலில் கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் பல ஆண்டுகளாகக் கூறி வந்தனர். பாகிஸ்தான் உளவு அமைப்புகள் திரட்டிய தகவல்களின்படி இக்ரமுல்லா இறந்துவிட்டார் என்று 2017-ல் கூறப்பட்டது.ஆகஸ்ட் 2017-இல் மிகவும் தேடப்படும் தீவிரவாதிகளின் 28 பக்க பட்டியலை பாகிஸ்தான் வெளியிட்டது. அதில் தெற்கு வஜிரிஸ்தானில் வாழும் இக்ரமுல்லாவின் பெயர் ஒன்பதாவதாக இடம் பெற்றிருந்தது. அவர் பேனசீர் பூட்டோ மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தார்.
அவர் தற்போது கிழக்கு ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக பிபிசி அறிகிறது. அங்கு அவர் பாகிஸ்தான் தாலிபனின் ஒரு இடை நிலைத்த தலைவராக உள்ளார். இதுவரை பேனசீர் புட்டோவின் கொலைக்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராவல்பிண்டியில் இருந்த கொலை நடந்த இடத்தை சுத்தப்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால் ராணுவத்தின் உத்தரவு இல்லாமல் அவர்கள் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் பொதுமக்கள் நினைக்கிறார்கள்.
பாகிஸ்தானின் முக்கியமான தேச நலன்கள் என்று தாங்கள் கருதும் சிலவற்றை நிலை நாட்ட, பாகிஸ்தானின் ரகசிய அரசாக இயங்கும் இந்நாள் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் மூடி மறைக்கப்படும் இன்னொரு விவகாரம் இது என்பதையே இவையனைத்தும் உணர வைக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக