பிரமிளா கிருஷ்ணன்-பிபிசி தமிழ்:
தமிழகம் முழுவதும் உள்ள நூறு பழமையான
போட்டோ ஸ்டூடியோகளில் உள்ள அறிய புகைப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின்
நிதியுதவியுடன் பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சு ஆய்வு நிறுவன
ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுத்துவருகின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் அறிமுகமான கேமரா தொழில்நுட்பம், இன்று
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பன்மடங்கு முன்னேறியுள்ள நிலையில், தற்போது
செயல்பட்டு வரும் சுமார் என்பது முதல் நூற்று முப்பது ஆண்டுகளாக
இயங்கிவரும் ஸ்டூடியோக்களில் 1880 முதல்1980 வரை எடுக்கப்பட்ட
கறுப்பு-வெள்ளை படங்களை ஆவணப்படுத்தும் வேலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த
ஆய்வாளர் ஜோயி ஹேட்லி மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ரமேஷ்குமார்
உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை சுமார் பத்தாயிரம் பழைய புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் படம் எடுத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
”தமிழகம் முழுவதும் எட்டு நகரங்களில் நூறு ஸ்டூடியோகளில் உள்ள புகைப்படங்களை ஆவணப்படுத்தும்போது பல இடங்களில் புகைப்படங்கள் மிகவும் சேதம் அடைந்த நிலையில்தான் கிடைத்தன. ஸ்டூடியோக்கள் மட்டுமல்லாது பலரின் வீடுகளில் கூட பழைய புகைப்படங்களை கவனமில்லாமல் தாழ்வாரத்தில் வைத்திருந்தார்கள். பழைய பொருட்கள் விற்கும் சந்தைகளில் அற்புதமான, கலாசார ரீதியாக முக்கியத்துவம் பெற்ற புகைப்படங்களை நாங்கள் வாங்கினோம். பழமையின் அருமையும், மதிப்பும் தெரியாமல் சிலர் புகைப்படங்களை விற்றுவிட்டதைப் பார்க்கமுடிந்தது,” என்றார் ஜோயி.
ஆய்வின் ஒரு பகுதியாக புகைப்படங்களை படம் எடுப்பது, பிலிம் நேகட்டிவ் அறிமுகமாகுவதற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கண்ணாடி நேகட்டிவ் துண்டுகளை சரிப்படுத்தும் முயற்சியும் எடுக்கப்பட்டுவருவதாக துணை ஆராய்ச்சியாளர் ரமேஷ் கூறினார்.
நான்காவது தலைமுறையாக நல்லாப்பிள்ளை ஸ்டூடியோவை நடத்திவரும் ரங்கநாதன், ”என்னுடைய கொள்ளுத்தாத்தா எடுத்த படங்களின் நகல்களை இப்போது டிஜிட்டல் முறையில் ஆராய்ச்சியாளர்கள் படமாக்கித் தந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கண்ணாடி நெகடிவ் துண்டுகளை சேகரித்துக் கொடுத்துள்ளேன். இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் ஸ்டூடியோ தொழில் இருக்குமா என்று தெரியாது ஆனால் இந்த ஆய்வின் மூலம் பாதுகாக்கப்படும் படங்கள் என்றென்றும் ஸ்டூடியோக்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்,” என்றார்.
1930ல் தொடங்கப்பட்டு சென்னை மைலாப்பூர் பகுதியில் ஒரு அடையாளமாக மாறிவிட்ட சத்தியம் ஸ்டூடியோவில், பழைய சென்னை நகரத்தில் இருந்த கட்டமைப்புவசதிகளை காட்டும் படங்கள் பத்திரப்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தலைகீழாக தெரியும் உருவத்தை பார்த்து, போக்கஸ் செய்து, துணியைக் கொண்டு தங்களது தலையை மூடி, நிமிடங்களை எண்ணி புகைப்படங்களை எடுக்க பயன்பட்ட கேமராதான் டாக்ரியோ கேமரா என்று விளக்கினார் ஆனந்த். ”டாக்ரியோ கேமரா இருந்த வரலாறு சில புகைப்படக்காரர்களுக்கு கூட தெரியாத நிலைஉள்ளது. படம் எடுக்க ஒளி அமைப்பு பற்றி எந்த புரிதலும் இல்லாமல் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் புகைப்படம் எடுக்கலாம் என்ற நிலை இப்போது உள்ளது,”என்கிறார் மூன்றாவது தலைமுறையாக சத்தியம் ஸ்டூடியோவை நடத்திவரும் ஆனந்த்.
ஜோயி மற்றும் ரமேஷ்குமார் பல நாட்கள் வந்து ஸ்டூடியோவில் உள்ள விலைமதிப்பற்ற புகைப்படங்களை தூசிதட்டி அவற்றின் மதிப்பை விளக்கியதாகக் கூறுகிறார் ஆனந்த்.
ஸ்டூடியோ தொழில் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள்
பெரும்புகழ் பெற்ற இதுபோன்ற ஸ்டூடியோக்கள் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை விவரித்த ரமேஷ்,”பல ஸ்டூடியோக்கள் வண்ணப்படங்கள் தொழில்நுட்பம் வந்ததும் மூடுவிழா கண்டன. வண்ணப்படங்களை பிரிண்ட் செய்வதற்கு பெருமளவு முதலீடு செய்யவேண்டியிருந்தது. அதற்குப்பின்னர் வந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செல்போன் போன்றவை மக்கள் ஸ்டூடியோவுக்கு சென்று புகைப்படம் எடுக்கவும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு படம் எடுக்க ஆடர் கொடுக்க வேண்டாம் என்றும் முடிவை எடுக்கவைத்தது,” என்றார்.
செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்
எல்லாம் செல்பி மயம்..தினமும் செல்பி எடுத்து தங்களது முகநூல் பக்கங்களில் பதிவிடுபவர்கள் இருக்கும் காலத்தில், ஸ்டூடியோ நடத்துவது என்பது சவாலான ஒன்று என்கிறார் நல்லாப்பிள்ளை ஸ்டுடியோவின் பொறுப்பாளர் ரங்கநாதன்.
”நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோகளை பார்வையிட்டதில் பல ஸ்டூடியோகள்
குடும்ப தொழிலாக இருந்தது தெரியவந்தது. பெண்கள் மட்டுமே நடத்திய
ஸ்டூடியோகள் இருந்தன. புகைப்படங்கள் அறிமுகமான காலத்தில் இறந்தவர்களை
படமெடுக்கும் பழக்கம் வந்தது. இறப்பு நிகழ்வுகளைப் படம் எடுப்பதற்காகவே
பிரத்தியேக புகைப்படக்கலைஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் இறந்தவருக்கு
மூன்றாவது நாள் பூஜையின்போது படம் கொடுக்கவேண்டும் என்பதால் அதிக கட்டணம்
வசூலித்தனர்,” என்றார் ரமேஷ்.bbc






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக