சனி, 16 டிசம்பர், 2017

ஜார்கண்ட் மதுக்கோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை ... சுயேச்சை எம் எல் ஏவாக இருந்து முதலைமச்சர் ஆகி

மதுகோடா
விகடன் ராகினி ஆத்ம வெண்டி மு. `பெரிதினும் பெரிது கேள்' - இதுதான் அவரின் ஒரே கொள்கை, குறிக்கோள், லட்சியம், எல்லாம். எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாமல் நாட்டில் புதிதாக உதயமான ஒரு மாநிலத்துக்கு மூன்றாவது முதல்வராகப் பதவியேற்கிறார். மிகவும் இளம் வயதில் சுயேச்சை எம்.எல்.ஏ-வாகத் தேர்தலைச் சந்தித்த ஒருவர், முதல்வர் ஆன காட்சியை நாடே திரும்பிப் பார்த்தது. அரசியலில் பழுத்த தலைவர்கள்கூட நிமிர்ந்து பார்த்தனர். ஆனால், வேகமான வளர்ச்சி வீழ்ச்சியையே தரும் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமாகிப்போனார் அந்த முதல்வர். அவர்தான் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா.
ஒடிஷா மாநிலத்தில் மலைவாழ் விவசாயி ஒருவரின் மகனாக 1971-ம் ஆண்டு பிறந்த மதுகோடா, படிக்கும் காலத்திலேயே மாணவர் தலைவனாகத் தனது அரசியல் கோலத்துக்கு முதல் புள்ளியை வைத்தார். 2000-ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத திருப்பம் மதுகோடா வாழ்வில் எந்த முகாந்திரமும் இல்லாமல் வந்து நின்றது. பீகார் மாநிலப் பொதுத்தேர்தலில் ஜகன்நாத் தொகுதியில் சுயேச்சை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறுகிறார் மதுகோடா.
அப்போது, நாட்டின் அரசியல் நிர்வாக சாசனத்தில் ஜார்க்கண்ட் என்றொரு மாநிலம் புதிதாகப் பிறக்கிறது. பீகாரிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் உருவாக மதுகோடாவின் தொகுதி புதிய மாநிலமாகிறது. பா.ஜ.க-வின் பாபுலால் மராண்டி தலைமையிலான புதிய ஜார்க்கண்ட் அரசில் `கிராமப்புற பொறியியல்’ அமைப்புக்கு சுயராஜ்ய அமைச்சராகிறார் மதுகோடா. அடுத்தடுத்து ‘பஞ்சாயத்து ராஜ்ய’ அமைச்சர், சுரங்க நிலவியல் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து வளர்ச்சியைக் கண்டவர், 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வரானார். நாட்டின் மூன்றாவது இளம் சுயேச்சை முதல்வர் என்ற சிறப்பு அந்தஸ்தையும் கூடவே சேர்த்துப் பெற்றார் மதுகோடா.
2008-ம் ஆண்டு மதுகோடாவுக்கான முதல் சரிவு `ஜார்க்கண்ட் முக்தி மோச்சா’ கட்சியின் தலைவர் சிபுசோரன் வடிவில் வந்தது. சிபுசோரன் வீசிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மதுகோடா. பின்னர் 2009-ம் ஆண்டு சுயேச்சையாகவே ஜார்க்கண்டின் சிங்பம் தொகுதியிலிருந்து லோக் சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி. ஆனார். அடுத்து விழத் தொடங்கியது அடி. சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது சுரங்க ஊழலில் ஈடுபட்டு பல நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறை என அத்தனை துறைகளும் மதுகோடா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வரிசையாக நிரூபித்தன. 'முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் மதுகோடா ஈடுபட்டார்' என வழக்குப் பாய்ந்தது.
ஜார்க்கண்டின் பிரபல நிறுவனங்களான வினி இரும்பு நிறுவனம், ஜிண்டால் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து மதுகோடா செய்த ஊழல்கள் வெளிவந்தன. பதவி, பெயர் என அனைத்தும் சரிந்து, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மதுகோடாவுக்கு விதிக்கப்பட்டத் தடை அவரது அரசியல் வாழ்க்கையையே அஸ்தமிக்கச் செய்துவிட்டது.

மதுகோடா மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் நீண்டகாலத்துக்குப் பிறகு இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. நேற்று ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட ஆறு பேரைக் குற்றவாளிகள் எனச் சி.பி.ஐ நீதிமன்றம் அறிவித்தது. இன்று குற்றவாளிகள் அனைவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மதுகோடாவுக்கு கூடுதலாக 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது சி.பி.ஐ நீதிமன்றம்.
`ஒரு மனிதனின் சுயரூபத்தை அறிய வேண்டுமானால், அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்' என்ற மேலைநாட்டுப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மதுகோடாவின் பின்னணியை அறிந்தவர்களுக்குப் புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக