வியாழன், 28 டிசம்பர், 2017

20 ரூபாய் நோட்டுகளை வீடுகளில் தேடும் கரைவேட்டிகள் ... யார் எந்த கோஷ்டி என்று தெரியாமல் மக்கள் திகில் !

ஆர்.கே.நகர்ந.பா.சேதுராமன் இடைத்தேர்தல் முடிவுக்குப் பின்னால் ஆர்.கே.நகர் தொகுதியின் பெரும்பாலான மக்கள், பதற்ற மனநிலையில் இருக்கிறார்கள். ரோட்டோர டீக்கடைகளில் ஆரம்பித்து, தெருக்களில் நடந்துபோகும் மக்கள்வரை, அவர்களின் முகத்தில் குழப்ப ரேகை ஓடுவது தெளிவாகத் தெரிகிறது. குழப்பத்துக்குக் காரணம், 20 ரூபாய் நோட்டும் கரைவேட்டிகளும். கடந்த திங்கள் கிழமை காலையிலிருந்தே, இந்தக் கரைவேட்டிகள்  தொகுதியை முழுமையாக ஆக்கிரமித்து வைத்துள்ளன. “இருபது ரூபாய் நோட்டை யார் வைத்திருந்தாலும் அதை உடனே கொடுத்துவிட்டால் தப்பித்துப் பிழைத்தீர்கள்… இப்போது, ‘எங்களிடம் எதுவும் இல்லை’ என்று சொல்லிவிட்டு, 20 ரூபாய் நோட்டுக்கு ஈடாக 10 ஆயிரம் ரூபாயை வாங்கும்போது மாட்டிக்கொண்டால், தர்ம அடியுடன் ஜெயிலுக்கும் போக வேண்டியதுதான்” என்று மக்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறது ஒரு கரைவேட்டிகளின் பிரிவு.
ஆர்.கே.நகர்அந்தக் கரைவேட்டிகள் நகர்ந்ததும், இன்னொரு பிரிவு கரைவேட்டிகள், “அவங்க அப்படித்தான் சொல்வாங்க. இந்த 20 ரூபாய் நோட்டை நாங்கள் உங்களிடம் எப்படிக் கொடுத்தோம், எந்தத் தேதியில் கொடுத்தோம், கொடுத்தது பகலிலா, இரவிலா என்றே கண்டுபிடிக்க முடியாதவர்கள், இதையா கண்டுபிடிக்கப் போகிறார்கள்… நீங்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். இதைவிட உங்களுக்கு இன்னும் என்னென்ன கொடுக்கப் போகிறோம் என்று பொறுத்திருந்து பாருங்கள்” என்று வார்த்தையில் தேன் தடவுகிறார்கள். ”பணத்தைக் கொடுக்கும்போது கையும்களவுமாகப் பிடிக்கத் தவறியதுபோல், 20 ரூபாய் டோக்கன்மீது பணம் கொடுப்பது, வாங்குவது தெரிந்தால் இந்தமுறை விட்டுவிடக் கூடாது”  என்று ஒரு குரூப், தொகுதி முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கிறது.


நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், பிரசாரத்தின் முதல் நாளிலிருந்தே, முக்கிய வேட்பாளர்களின் பிரசாரப் பயணத்தில் தினமும் பல கிலோ மீட்டர் நடந்தனர். பிரசாரத்தின்போது நடக்கும் அத்தனையையும், நிமிடத்துக்கு நிமிடம் ‘தலைமை’ க்குத் தகவல் அனுப்பிக்கொண்டே இருந்தனர். அப்படி அனுப்பிய தகவல்களில் ‘பணப் பட்டுவாடா’ குறித்த தகவலும் இருந்தது. எதிரெதிரே மல்லுக்கு நின்ற கரைவேட்டிகள், ‘ஒரே கரை வேட்டி’ யைக் கட்டிக்கொண்டு சுற்றியதால், ‘எது நம்ம ஆளு’ என்ற குழப்பமும் இதனால் ஏற்பட்டது.
அதேபோல் ஒருபிரிவு கரைவேட்டிகள், பெரும்பாலான மக்களுக்கு முதல் தவணையைப் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது. இரண்டாவது தவணையைக் கொடுக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டு விடவே, அந்தத் தவணைத் தொகை,  20 ரூபாய் நோட்டில் சீரியல் எண்ணுடன் காத்திருக்கிறது. இன்னொரு பிரிவு கரைவேட்டிகள், ஒரு தவணையை மட்டுமே மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது, இரண்டாவது தவணை போவதற்குள் அனைத்துப் பக்கமும் திடீர் அழுத்தம் வந்துவிட நோட்டுகள் முடங்கிப் போய்விட்டன.
இப்போது ஆங்காங்கே முடங்கிப்போய்க் கிடக்கும் நோட்டுகளை யாராலும் இப்போது வெளியில் எடுக்க முடியவில்லை. சீரியல் எண்ணுடன் இருக்கும் 20 ரூபாய் நோட்டுகளின்  மீதான பம்பர் பரிசை (?) யாரும் வாங்கவும் வழி இல்லை என்பதே களநிலவரம்.
’நாங்க நினைக்கிற சின்னத்துக்கு ஓட்டுப் போட்டாலும் பிரச்னை, போடலைனாலும் பிரச்னை… தேர்தல் நடந்தாலும் பிரச்னை, நடந்துமுடிந்த பிறகும் பிரச்னை..இப்படியே போனால் இதற்கு எண்டுகார்டே கிடையாதா?” என்று புலம்புகிறார்கள் தொகுதி மக்கள்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக