வியாழன், 23 நவம்பர், 2017

அன்புசெழியனின் Flashback சுருக்கம்

நக்கீரன் :அசோக் குமார் நேற்று (21-நவம்பர்-17) சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் , தனது அத்தை மகனும், 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிர்வாகியுமான அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணமென, அசோக் குமார் எழுதிய கடிதத்துடன் காவல்துறையில் புகாரளித்துள்ளார் நடிகர் சசிகுமார். ஜிவி 2003ஆம் ஆண்டு மே மாதம்... தன் குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்ற அந்த பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர், சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்டு தான் மட்டும் சென்னைக்குத் திரும்பினார். வந்தவர், தன் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அந்தத் தயாரிப்பாளர் ஜிவி என்று சினிமாவில் அழைக்கப்பட்ட ஜி.வெங்கடேஸ்வரன். இயக்குனர் மணிரத்னத்தின் அண்ணன், மௌனராகம், அக்னிநட்சத்திரம், தளபதி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்தவர்.
கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற போது, திரையுலகமும் மக்களும் அதிர்ந்தனர். அப்போது சத்தமில்லாமல் முனுமுனுக்கப்பட்டது பைனான்சியர் 'மதுரை அன்பு' என்ற பெயர். 'தமிழன்', 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' படங்களின் தோல்வியைத் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட, ஜிவி கடன் வாங்கியிருந்த பைனான்சியர், வட்டி மேல் வட்டி கட்டிய பின்பும், மிக தரக்குறைவாக அவமானப்படுத்தியதாலேயே தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது. அன்புச்செழியன் பின், தயாரிப்பாளர் காஜாமைதீனின் தற்கொலை முயற்சியின் போதும் தொடர்பிருந்ததோ இல்லையோ அந்தப் பெயர் அடிபட்டது.


சினிமா சார்ந்த சட்டப்பூர்வமற்ற கட்டப்பஞ்சாயத்துகளில் அவரது பெயர் அடிபடும். ஆனாலும் எதுவும் முறையான புகாராகவோ, வெளிப்படையான குற்றச் சாட்டாகவோ பதிவாகவில்லை. 2006 ஆம் ஆண்டு, இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' படத்தில் அஜித் நடிப்பதாக போஸ்டர்கள் வெளியாகின. ஆனால், திடீரென்று அவர்களுக்குள் நடந்த பிரச்சனையால் படம் கைவிடப்பட்டது. என்ன பிரச்சனை? பாலாவின் மிக மெதுவான வேலை முறையும் வித்தியாசமான அணுகுமுறையும் பிடிக்காத அஜித், படத்தில் இருந்து விலக முடிவு செய்து அட்வான்ஸை திருப்பிக்கொடுக்க தயாராய் இருந்தார்.

 தயாரிப்பாளர் தேனப்பனுக்கும் சம்பளம் குறையும் என்பதால் இது சம்மதம் தான். ஆனால், கதை விவாதத்துக்கு ஆன செலவை அஜித் தர வேண்டுமென்று, சென்னையில் ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து அஜித்தை பாலா, தேனப்பன் முன்னிலையில் மதுரை அன்பு மிரட்டியதாக அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது. இதன் எதிரொலியாக சாலிகிராமத்தில் இருந்த பாலாவின் அலுவலகத்தை அஜித் ரசிகர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அஜித் தன் ரசிகர்களை இது போன்ற பிரச்சனைகளில் தலையிடக்கூடாதென்று கூறினார்.

 இப்படி, உறுதிப்படுத்தப்படாத ரகசியங்களாகவே அடிபட்டுக் கொண்டிருந்த மதுரை அன்பு என்ற பெயர், 2011 ஆம் ஆண்டில், மதுரையில் தங்கராசு என்ற தயாரிப்பாளர் கொடுத்த புகாரில் வெளிப்படையாக இடம் பெற்றது. 'சுந்தரா ட்ராவல்ஸ்', 'மீசை மாதவன்' 'யுவஸ்ரீ கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்தவர் இவர். அன்புவிடம் இருபது லட்ச ரூபாய் வாங்கியதாகவும், அதற்காக வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறார். வட்டியாக ஒரு கோடிக்கு மேல் கொடுத்தும் கடன் தீராமல் அன்பு தன்னை மிரட்டுவதாக புகார் அளித்தார்.

அப்போதைய மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் இவரை கைது செய்ய உத்தரவிட்டார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் நெருக்கமாக இருந்ததாகவும், பின் அதிமுக மேலிடம் நெருக்கம் எனவும் கூறி தொழிலை நடத்தியுள்ளார். . பெரிய இடங்களின் ஆதரவு இல்லாமல் இத்தனை வருடமாக தொழிலை தொய்வின்றி நடத்த முடியுமா என்ன? ஆண்டவன் கட்டளை வழக்குகள் ஒரு புறம் நடந்தாலும், இவரிடம் கடன் வாங்காத தயாரிப்பாளரே இல்லை எனும் அளவுக்கு இவர் வளர்ந்து கொண்டே தான் இருந்தார்.

மதுரை அன்பு, தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் ஆனார். தனுஷ் நடித்த 'தங்கமகன்', விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார். இயக்குனர் பாலாவுக்கும் இவருக்குமான நட்பு பிரபலமானது. 'சண்டி வீரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், 'பாலா, எந்தப் படம் தயாரித்தாலும் என்னிடம் பேசாமல் தொடங்க மாட்டார், என் கருத்தைக் கேட்பார்' என்று பேசினார் அன்புச்செழியன்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் 'கத்திச்சண்டை' பட இசை வெளியீட்டிலும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார் அன்புச்செழியன். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர் மீதுதான் இன்று, பாலாவின் சீடரான சசிகுமார், தனது அத்தை மகனும், தனது 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிறுவன இணை தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணமென காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

அவருடன், இயக்குனர்கள் அமீர், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். தமிழகத்தில் பல்வேறு வடிவிலும் கந்துவட்டி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன், மற்றொரு பிரபல சினிமா பைனான்சியரான முகன்சந்த் போத்ரா, சினிமாவல்லாத கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்டார். நெல்லையில் எரிந்து போனது சாமானிய உயிர்கள், நடவடிக்கை சற்று மந்தமாகத்தான் இருக்கும். இப்பொழுது போயிருப்பது சினிமா உயிர். அன்புச்செழியனின் துன்புறுத்தல்தான் காரணமென கடிதம் எழுதிவைத்துள்ளார் அசோக். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமா... நடவடிக்கை பாயுமா...நடுவழியில் நிற்குமா என்று பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக