புதன், 15 நவம்பர், 2017

Coup d'etat in Tamilnadu? ஆளுநர் ஆட்சி !. நரிகள் கூட்டம் பின்கதவால் ருசி பார்க்கிறது!

 முதல்வராக மாறிய ஆளுநர் !?நவம்பர் 14. நேரு பிறந்த நாளை ஒட்டி நேற்று காலை சென்னையில் நேருவுக்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட அமைச்சர்கள் சகிதம் மரியாதை செய்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இன்னும் சில மணி நேரங்களில் தங்களுக்குப் பெரிய அதிர்ச்சி தரப் போகிறார் ஆளுநர் என்று அப்போது அமைச்சர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நேற்று காலை 10.20-க்குச் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு, பாரதியார் பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஆளுநர். 582 பேருக்குப் பட்டம் வழங்கிய ஆளுநர் நிகழ்ச்சி முடிந்ததும், கோவையில் இருக்கும் சுற்றுலா மாளிகையான சர்க்யூட் ஹவுஸுக்குச் சென்றார்.
நேற்று மதியம் 2.30 மணியளவில் கோவை கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், புறநகர் எஸ்.பி. மூர்த்தி மற்றும் வருவாய்துறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருக்குச் சுற்றுலா மாளிகைக்கு வருமாறு ஆளுநர் விடுத்த அழைப்புத் தெரிவிக்கப்பட்டது. மளமளவென கையில் கோப்புகளோடு அனைவரும் சுற்றுலா மாளிகைக்குத் திரண்டனர்.

மாலை 3.30 மணிக்கு அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். முதலில் கலெக்டர் அலுவலகச் செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிய, அவர்கள் சுற்றுலா மாளிகைக்கு விரைந்தனர். கொஞ்ச நேரத்தில் ஆளுநர் நடத்தும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் பற்றிய தகவல் பரவியது.
ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியிருந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கோவையில் தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். திடீரென ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டம் பற்றி அவருக்குத் தகவல் தெரியவர குழம்பிவிட்டார்.
இதற்கிடையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆறு பேர் மட்டும் சுற்றுலா மாளிகைக்கு முதலில் வந்தனர். பின் அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் சிலரும் கூடினர். ஆளுநர் மூலமாக தமிழக அரசி்ன் சுயாட்சி பறிக்கப்படுவதைக் கண்டிக்கிறோம் என்றும், ‘கையாலாகாத தமிழக அரசையும் கண்டிக்கிறோம்’ என்று முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுக்க, இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஆனது. இதில் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் கீழே தள்ளப்பட்டனர். பின் அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர்.
இதற்கிடையே 3.30க்கு ஆரம்பித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் பற்றி ஆலோசித்தார் ஆளுநர். இந்தக் கூட்டத்தில் 12க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் தங்கள் துறையில் நடக்கும் திட்டங்கள் பற்றி கணினி வழி பவர் பாயின்ட் வழியாக ஆளுநருக்குப் பல்வேறு திட்டங்கள் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். ஆக, இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்றும் அதை ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்கள் என்றும் கூறினார் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர்.

மேலும் அவர், ‘பொதுவாக ஆளுநர் ஒரு மாவட்டத்துக்கு வருகிறார் என்றால் அம்மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசுவார்கள். ஆனால், இந்தக் கூட்டமோ முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் போல திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது’ என்றார்.
குறிப்பாக, கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள், குற்ற வழக்குகளில் இன்னும் மீட்கப்பட வேண்டிய பொருட்கள், தலைமறைவு குற்றவாளிகளின் எண்ணிக்கை, பிடிவாரன்ட் நிலுவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆளுநர் விசாரித்தார் என்றும்... ரேஷன் அரிசிக் கடத்தலில் பிடிபட்டுள்ள குற்றவாளிகள் எத்தனை பேர், குண்டர் சட்டத்தில் கைதான நபர்கள் எத்தனை பேர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி எவ்வளவு போன்ற தகவல்களைப் பெற்றார் என்றும் தெரியவருகிறது. ஆக தமிழகத்தில் ஒரு முதல்வர் இருக்கும்போது அவரது துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்திருக்கிறார் ஆளுநர்.
தகவல் அறிந்து வேகமாக வந்த அமைச்சர் வேலுமணி கூட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. ஏனெனில் இது முழுக்க முழுக்க அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம்.
ஆனால், தமிழக அரசின் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் வேலுமணி.
“ஆளுநர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தால் மாநிலச் சுயாட்சிக்குப் பாதிப்பு என்பது சரியல்ல. முதல்வர், துணை முதல்வர் நன்றாக செயல்படுகிறார்கள். ஆளுநரும் செயல்படுகிறார். இது ஆரோக்கியமான விஷயம்தான்” என்ற வேலுமணி... “தகவல் கிடைத்து முதல்வர்தான் என்னை இங்கே அனுப்பி வைத்தார்” என்று சொன்னதில் இருந்தே, இதுபற்றி முன்கூட்டியே தகவல் தனக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் மாலை சர்க்யூட் ஹவுஸில் அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன், சிறுதுளி வனிதா மோகன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்துப் பேசினர்.
பின் ஆளுநர் அருகே இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு சர்க்யூட் ஹவுஸுக்கே திரும்பினார்.
நேற்றிரவு அங்கேயே தங்கிய ஆளுநர் இன்று (நவம்பர் 15) மேலும் சில ஆய்வுகளையும் கோவையில் நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் திறந்து வைத்த 1.7 கிலோமீட்டர் தூரம் கொண்ட மேம்பாலத்தையும், அருகே கட்டப்பட்டு வரும் இன்னொரு மேம்பாலத்தையும் ஆளுநர் ஆய்வு செய்கிறார் என்று சுற்றுலா மாளிகையில் இருந்து அதிகாரிகள் நேற்றே தெரிவித்தனர். மேலும் இன்று தூய்மை இந்தியா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் ஆளுநர்.
தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநரே இருக்கிறார்... ரெகுலர் ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று பல கட்சிகள் குரல் எழுப்பின. அதன் அடிப்படையில் வித்யாசாகர் ராவுக்குப் பதிலாக புரோகித் நியமிக்கப்பட்டார். முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்ட புரோகித், மாநில அரசின் அதிகாரத்தில் மூக்கை நுழைக்கிறாரா என்ற விவாதங்கள் இந்த ஆய்வுகள் மூலம் நடந்துகொண்டிருக்கின்றன.
இதற்காகத்தான் தமிழ் கற்கிறீரோ ஆளுநரே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக