வெள்ளி, 24 நவம்பர், 2017

முட்டை நிறுத்தம், சத்துணவு திட்டம் நிறுத்தப்படுவதற்கான முன்னோட்டம்!

thetimestamil : ஆழி செந்தில்நாதன்: சத்துணவுத் திட்டத்தில் முட்டை நிறுத்தம். விரைவில் சத்துணவுத் திட்டமே நிறுத்தம்.
எல்லாம் இப்படித்தான் தொடங்கும். சத்துணவுத் திட்டத்துக்கு முட்டைகளில் கொள்முதல் செய்வதில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது, எனவே முட்டைகள் அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். எல்லாம் இப்படித்தான் தொடங்கும். ரேஷன் கடைகளில் தொடங்கியதைப்போல.
பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பது வெகுவிரைவில் நிறுத்தப்படலாம் என்கிற அச்சம் இந்துத்துவ இந்திய அரசை அறிந்தவர்களுக்கு ஏற்படாமல் இருக்காது.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சத்துணவுதான். அந்த எம்ஜிஆரின் நூற்றாண்டில், அந்த எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சியின் ஆட்சியில், சத்துணவு சத்தற்ற உணவாக ஆக்கப்பட்டிருக்கிறது!
காமராசர் முதல் ஜெயலலிதா வரை ஊட்டிவளர்த்த சத்துணவுத்திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரச் சிந்தனைக்கு ஓர் உலகப்புகழ்பெற்ற எடுத்துக்காட்டு. அதைக் காக்கவேண்டும். எம்ஜிஆரால் புதுமையுடன் அறிமுகப்படுத்தப்பட்டு கலைஞரால் முட்டை சேர்க்கப்பட்டு ஊட்டம் சேர்க்கப்பட்டத் திட்டம் அது.

தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்திய, ஏழை எளிய மக்களின் குழந்தைகளை பள்ளிக்கு வரச்செய்தத் திட்டம். படித்த மேதைகள் எல்லாம் கல்வியறிவை மேம்படுத்த என்னென்னவோ வியூகங்களை வகுத்து தோற்றுக்கொண்டிருந்த மூன்றாம் உலக நாடுகளில், ஒரு பிடி சோறை வியூகமாக ஆக்கி கல்விப் பிரச்சினையையும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைபாட்டுப் பிரச்சினையையும் ஒருசேர எதிர்கொண்ட படிக்காத மேதைகளின் சிந்தனைகளில் உதித்தத் திட்டம் அது. சொல்லப்போனால் சமூக நீதி என்கிற அரசியல் அறத்தால் உருவான திட்டமும்கூட. பிற்காலத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்விப் பெருக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த தொடக்கக்கல்விச் சீர்திருத்தமாகவும் அதைப் பார்க்கமுடியும்.
சத்துணவில் இன்று முட்டையை எடுப்பார்கள். நாளை சத்துணவையே எடுப்பார்கள். வெகுவிரைவில் அரசுப் பள்ளிகளையே இல்லாமலாக்குவார்கள். தமிழ்நாடு ஒரு நூற்றாண்டுக் காலமாக போராடி உருவாக்கிய அத்தனை உரிமைளையும் சமூக உடைமைகளையும் இவ்வளவு வேகமாக இழந்துவருகிறது.
இந்த ஆட்சியாளர்களைத் தூக்கியெறிவதில் நமக்கு வேகமும் விவேகமும் அதிரிக்கவேண்டும்.
(மற்றுமொரு முக்கிய குறிப்பு: முட்டையை மட்டும்தானே எடுக்கிறார்கள், காய்கறி போடுவார்களே என்று கிளம்புவார்கள் பாருங்கள். தங்கள் கட்சியின் கூட்டத்திலேயே பிரியாணியை அகற்றியவர்களின் ஆட்சியில் இது நடப்பதில் வியப்பில்லை. சில
“சமூக ஆர்வலர்கள்” இதை வெறுமனே வெஜ் VS நான்வெஜ் பிரச்சினையாக மாற்றி விவாதங்களில் பேசுவார்கள்.)
நமது கல்வி உள்கட்டமைப்பை ஒழித்துக்கொண்டிருக்கும் ஈபிஎஸ்-ஒபிஎஸ் தமிழர் விரோத ஆட்சியையும் இதை பின்னாலிருந்து இயக்கிக்கொண்டிருக்கும் பாஜக அரசையும் எதிர்த்து இப்போதுகூடப் போர்க்கொடித் தூக்காவிட்டால் எப்போது தூக்குவீர்கள்?
ஆழி செந்தில்நாதன், பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக