வியாழன், 16 நவம்பர், 2017

திவாகரன் :தமிழிசையை முதல்வராக்க ஒத்திகை!

மின்னம்பலம் :கோவையில் தமிழக ஆளுநர் ஆய்வு செய்ததையும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையும், அமைச்சர்கள் வரவேற்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
மயிலாடுதுறைக்குச் சென்ற திவாகரன் அங்கே பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது வருமான வரித் துறையினரின் சோதனை, ஆளுநர் பன்வாரிலாலின் கோவை ஆய்வு முதலானவை பற்றிப் பேசினார். ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதை அமைச்சர்கள் வரவேற்றிருக்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதைப் பார்க்கும்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழிசையை நிறுத்தி முதல்வராக்க ஒத்திகை நடப்பது போலத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் விட்டுக்கொடுத்துவிடுவது போலத் தெரிகிறது” என்றார்.

சமீபத்தில் சசிகலா உறவினர் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்தது. திவாகரனுக்குச் சொந்தமான இடங்களிலும் இது தொடர்ந்தது. இது குறித்து விளக்கமளிக்க, வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது பற்றிக் கூறுகையில், “எங்கள் குடும்பத்தினர் மீது நடந்த வருமான வரிச் சோதனை தோல்வியில் முடிந்துவிட்டது. எங்களை மிரட்டிப் பணியவைக்கவே இந்த சோதனை. எங்களது அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் இப்போதும் எங்களுடனேயே இருக்கின்றனர்” என்றார் நம்பிக்கையோடு.
இன்று திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் திவாகரன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேரில் ஆஜராக அவர் ஒருவார கால அவகாசம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக