சனி, 4 நவம்பர், 2017

கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும்: இந்து மகா சபை உப தலைவர் பண்டிட் அசோக் சர்மா !


மாலைமலர் :இந்து தீவிரவாதம் இனி இல்லை என கூற முடியாது என கருத்து கூறியிருந்த நடிகர் கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும் என இந்து மகா சவை துணை தலைவர் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கூறியுள்ளார். கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும்: இந்து மகா சபை தலைவர் சர்ச்சை பேச்சு
புதுடெல்லி: தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று எழுதியிருந்தார். மேலும், இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறி இருந்தார். கமல்ஹாசன் கருத்துக்கு பா.ஜ.க மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.


இதற்கிடையே, கமல்ஹாசன் மீது உத்தரபிரதேசத்தில் பனாரஸ் போலீசார் வழக்குப்பதிவுசெய்து உள்ளனர். இந்தநிலையில், நடிகர் கமலுக்கு எதிராக இந்து மகா சபையின் தேசியத் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், 'கமல்ஹாசன் மற்றும் அவரைப் போன்ற சிந்தனை கொண்டவர்கள் சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது தூக்கிலிடவேண்டும். மக்கள் நம்பும் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக யாரேனும் அவதூறு கருத்துகள் கூறினால், அவர்கள் இந்தப் புனித மண்ணில் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள். அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைக்கு அவர்கள் மரணமடையவேண்டும்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இந்து மகா சபையின் மீரட் பொறுப்பாளர் அபிஷேக் அகர்வால், 'நம் கட்சியைச் சேர்ந்த அனைவரும் கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நடித்த படத்தை புறக்கணிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்தியர்கள் அனைவரும் கமலின் படத்தை புறக்கணிக்க வேண்டும். இந்து மதத்தைப் பற்றிப் பேசிய யாரையும் மன்னிக்கமுடியாது' இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக