திங்கள், 20 நவம்பர், 2017

ராதிகா ஆப்தே :ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்!

மின்னம்பலம் :பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் திரைத்துறையில் நிறைய துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்!பாலியல் துன்புறுதலால் தங்களுக்கு நேரிட்ட பாதிப்புகளை நடிகைகள் பலரும் வெளிப்படையாக பேசிவருகின்றனர். சமீபத்தில் கூட ஹாலிவுட்டில் ஹார்வீ வீன்ஸ்டீன் செய்த பாலியல் துன்புறுத்தல்கள் அம்பலமாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இதன் காரணமாக பொழுதுபோக்குத் துறையில் நிகழும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் முன்வந்து தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார். தற்போது பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவும் இதுகுறித்து பாலிவுட் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
"பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். நான் குறிப்பாக எனது துறையைப் பற்றி பேசுகிறேன். எனக்குத் தெரிந்தே பல ஆண்களுக்கு அந்த அனுபவம் நேர்ந்துள்ளது. இதை வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள்.
ஆனால் இதுதான் சரியான தருணம்.சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்திருப்பவர்களோ, சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ மட்டும் துறைக்கு வருவதைத் தாண்டி பல தரப்பைச் சேர்ந்தவர்களும் இந்தத் துறைக்குள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இத்தகைய விஷயங்களைப் பற்றிப் பேச ஒரு தளம் முக்கியம்” என்று கூறியுள்ளார்.
அதிகாரத்தை வைத்து மற்றவர்களை பயன்படுத்திக் கொள்பவர்கள் பற்றி வெளியே சொல்ல வேண்டுமென கூறும் அவர், “சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எனவே இது இரு தரப்பிலும் மாற வேண்டிய விஷயம் இது. முதலில் மறுக்க கற்றுக்கொள்ள வேண்டும். தான் சுயநலமாக பயன்படுத்தப்படுகிறோம் என்பதை உணர வேண்டும். திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கண்டிப்பாகக் கிடைக்கும். சிலர் வீட்டிலிருந்து எந்த ஆதரவுமின்றி ஓடி வருகிறார்கள். அவர்களுக்கு இந்தத் துறையில் யார் துணையும் இருக்காது. துறையில் மேம்பட்ட ஒருங்கிணைப்பு, விதிகள், வெளிப்படைத்தன்மை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று திரைமறை விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
“பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களின் பெயரை வெளியே சொல்வதில் இன்னும் பாலிவுட்டில் பயம் இருக்கிறது. ஏனென்றால் இன்னும் பாலிவுட்டை, யாராலும் நெருங்க முடியாத ஒரு மாயாஜாலக் கோட்டை என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. இது வேலை செய்யுமிடம். வேலைக்கான நெறிமுறைகள் அனைத்து நிலைகளிலும் அறிமுகப்படுத்தப்படவேண்டும். எது நடந்தாலும், தைரியமாக வெளியே வந்து பெயர்களைச் சொல்ல வேண்டும். தைரியமாகக் குரலெழுப்ப வேண்டும்" என்று ராதிகா ஆப்தே பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக