புதன், 8 நவம்பர், 2017

யானைக்குட்டி மீது தீ பந்துகள் வீசிய கொடியவர்கள் .. நரகம் இங்குதான்....உள்ளது !

tamilthehindu ;நரகம் இங்குதான் இருக்கிறது' மேற்குவங்கத்தின் பன்குரா மாவட்டத்தில் சில இரக்கமற்ற மனிதர்கள் தார் பந்துகளில் தீ மூட்டி வீசி எறிய; ஒரு தாய் யானையும் குட்டி யானையும் தீப்பற்றிய தேகத்தோடு தப்பி ஓடும் காட்சியை பதிந்த புகைப்படக்காரர் பிப்லா ஹசாரா அந்த கோர சாட்சிக்கு வைத்த பெயர்தான் இது.
இந்த புகைப்படம், இந்த ஆண்டுக்கான சிறந்த வனவிலங்கு புகைபடத்துக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றியைக் கொண்டாட முடியாத வேதனை இது. யானையின் பிளிறல் எப்போதும் கம்பீரத்தையே நினைவுபடுத்தும். ஆனால், அந்த புகைப்படம் நம் கண்முன் வேறு காட்சியை நிறுத்துகிறது.< இது குறித்து பிப்லா ஹசாரா, புகைப்படத்தின் விளக்கமாக எழுதியிருப்பது இதுவே: "தீயின் தாக்கதால் குட்டி யானை பிளிறிக் கொண்டு ஓடுவதும் குழப்பத்தில் தாய் யானை செய்வதறியாது சாலையைக் கடந்து ஓடுவதும் அந்த புகைப்படத்தில் காட்சியாக்கப்பட்டிருந்தது.

யானையின் மெல்லிய தோல் தீயில் கருக அது வேதனையில் பிளிறுகிறது. நெருப்பு உருண்டைகள் காற்றில் வீசி எறியப்படுகின்றன. தூரத்தில் சில 'மனிதர்கள்' சிரிப்பும் கும்மாளமுமாக நிற்கின்றனர்" இவ்வாறு அவர் படவிளக்கம் அளித்திருக்கிறார்.
யானைகளுடனான தீராத மோதல்..
மனிதன் - யானைகள் இடையேயான மோதல் நாடு முழுவதுமே பரவிக்கிடக்கிறது. ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் 70%-க்கும் மேலான யானைகள் இந்தியாவில்தான் இருக்கின்றன. இதில், தமிழகம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் யானைகள் - மனிதன் மோதல் அதிகமாக இருக்கிறது.
மேற்குவங்கத்தில் மட்டும் சுமார் 700 யானைகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அடர்த்தியான வனங்களைக் கொண்ட வடக்கு பகுதியில் 600 யானைகள் இருக்கின்றன. தென் பகுதியில் 140 முதல் 150 யானைகள் மட்டுமே இருக்கின்றன. தென் பகுதி 150 யானைகளை தாக்குப்பிடிக்காது என்பதே யானை நிபுணர் பேராசிரியர் ராமன் சுகுமாரின் கருத்தாக இருக்கிறது. இதனாலேயே அப்பகுதியில் யானை - மனிதன் மோதல் ஏற்படுகிறது என அவர் கூறுகிறார்.
யானைகளின் ஆவேசம் இன்னல்களுக்கான பதிலடியே..
பொதுவாக யானைகள் ஊருக்குள் அட்டகாசம் செய்கிறது என்றால் அதற்குக் காரணம் அது சந்தித்த இன்னலுக்கான பதிலடியாகவே இருக்கும் என்கிறார் கர்நாடக அரசின் கவுரவ வனவிலங்கு பாதுகாவலர் நீரட் முத்தன்னா. மேலும், யானைகளுக்கு மிக துல்லியமான செவித்திறன் இருக்கிறதாம். வெடி சத்தம் யானைகளை மிகுந்த துன்பத்துக்கு உள்ளாக்குவதாகவும் அவர் கூறுகிறார்.
யானைகள் - மனிதன் மோதலைத் தடுக்க நிறைய திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் நடைமுறைக்கு சாத்தியமான ஒரு திட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை. யானைகள் இங்கேதான் வசிக்கும், மனிதர்கள் இங்கு வசிக்கட்டும் என வசிப்பிடங்களை நிர்ணயித்தால் இத்தகைய துர்சம்பவங்களைத் தடுக்கலாம். யானைகள் - மனிதன் மோதல் சிறிதளவேனும் குறையும் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக