வியாழன், 2 நவம்பர், 2017

அரசுக்கும் மணல் இறக்குமதியாளர்களுக்கும் இடையே என்ன நடக்கிறது?

மின்னம்பலம்: தமிழகத்தில் தனியார் சிலர் மலேசியாவில்  இருந்து  மணலைத் தூத்துக்குடி துறைமுகத்துக்கு இறக்குமதி செய்தனர். ஆனால் அந்த மணலை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்து வருவதில் சிக்கல்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.
துறைமுகத்தில் மணல் இருக்கும் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் கட்டிவருவதாக மணலை இறக்குமதி செய்தவர்களின் தரப்பில் இருந்து குமுறல்கள் வெடித்தன. இந்நிலையில் மணல் இறக்குமதியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி இன்று (நவம்பர் 2) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் ஆறுகள் அனைத்தும் மணல் மாஃபியாக்களின் பிடியில் சென்றுவிட்டன.
அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பும் மக்களுக்குப் பயன்படாமல், ஆளும் கட்சியினர் வாரிச் சுருட்டுவதற்குத்தான் வழிகோலியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு சில இடங்களில் இயங்கும் அரசு மணல் குவாரிகளில் ஒரு யூனிட் மணல் ரூ.525க்குக் கிடைக்கும் என்று அரசு அறிவித்தது. ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் மணல் சென்னையில் 4 யூனிட் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு, கொள்ளை நடக்கிறது. அதோடன்றி, தமிழ்நாட்டுக்கு தினந்தோறும் 86 இலட்சத்து 40 ஆயிரம் கன அடி மணல் கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது” என்று சுட்டிக்காட்டியிருக்கும் வைகோ, தூத்துக்குடி துறைமுக விவகாரம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
“ஒரு தனியார் நிறுவனம் மத்திய அரசிடம் உரிய அனுதி பெற்று, மலேசியாவிலிருந்து 53.334 மெட்ரிக் கடன் மணலை இறக்குமதி செய்திருக்கிறது. தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த மணல் புதிய துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்நிறுவனம் அரசுக்குத் தேவையான வரித் தொகையையும் செலுத்தியிருக்கிறது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைத் தனியார் நிறுவனம் விற்பனை செய்வதற்கு தமிழக அரசின் அனுமதி இல்லை என்று அரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால் மலேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைகத்திற்கு வந்த மணல் அக்டோபர் 21ஆம் தேதி முதல் தேங்கிக் கிடக்கிறது.
தமிழகத்தில் மணல் கொள்ளையால் ஆறுகள் முற்றிலும் சீரழிந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கியிருக்கும் மணல் விற்பனையை பரவலாக்குவதற்குத் தேவையான விதிமுறைகளை வகுத்து, இறங்குமதி மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆற்று மணல் சுரண்டலைத் தடுத்து, கட்டுமானப் பணிகளுக்கான மணல் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு வழி ஏற்படும் என்பதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் வைகோ.
இந்த விவகாரத்தில் அரசுக்கும் மணல் இறக்குமதியாளர்களுக்கும் இடையே என்ன நடக்கிறது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தேகம் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக