வெள்ளி, 10 நவம்பர், 2017

எடப்பாடி :நானும் பன்னீர்செல்வமும் கட்சி, ஆட்சியை காப்போம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில்

தேனி அருகே நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை. கட்சியையும், ஆட்சியையும் நானும், துணை முதல்வரும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் காப்போம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தேனி அருகே போடிநாயக்கனூர் விலக்கில் தனியார் ஆலை மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகித்தார். இதில் எம்.ஜி.ஆர். உருவப் படத்தை திறந்து வைத்தும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பழனிசாமி பேசியது:

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். கடும் வறட்சி வந்தாலும் இந்த ஆட்சி கலைக்கப்படும் என்கிறார். மழை பெய்தாலும் கலைக்கப்படும் என்கிறார். ஆக மொத்தம் அவரது மனதில் இருப்பது இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்பதுதான்.
திமுகவினர் இன்று பல கோஷங்கள் போட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் மக்கள் மனதில் இடம்பெற்று ஆட்சி நடத்த முடியாது.
இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலை மாநிலமாக இருக்கிறது என்றால் இதற்கு முன்பு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான் காரணம்.
ஸ்டாலின் ஐந்து ஆண்டுகள் சென்னை மேயர், ஐந்து ஆண்டுகள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். பத்து ஆண்டுகள் சென்னை நகருக்கு அவர் எதுவுமே செய்யவில்லை.
சட்டப் போராட்டம் நடத்தி பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா. திமுகவினர் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எளிதாக நிறைவேற்றியிருக்காலம். ஆனால் காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி செய்யவில்லை.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டபோது இவர்கள்தான் தடையாணை பெற்றார்கள். உள்ளாட்சி தேர்தலை நாங்கள் தடுக்கவில்லை. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இரட்டை குழல் துப்பாக்கிபோல் ஆட்சியையும், கட்சியையும் நானும், துணை முதல்வரும் காப்போம்.
குடிமராமத்து திட்டத்தில் ரூ.400 கோடி எங்கே என்கிறார் ஸ்டாலின். இதுவரை இத்திட்டத்தில் ரூ.100 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் ரூ.300 கோடி செலவிடப்படவில்லை. நீதிமன்றத்தில் திமுகவினர் போடும் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெறுவோம். இரட்டை இலையும் எங்களுக்குதான் கிடைக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக