வெள்ளி, 10 நவம்பர், 2017

மைத்ரேயன்: அ.தி.மு.க ரெய்டு என்பது அரசியல் நோக்கம் கொண்டது ... மன்னார்குடி சாம்ராஜ்யம் முடிவுக்கு வருகிறது?

எஸ்.கிருபாகரன்சசிகலா
விகடன் :எஸ்.கிருபாகரன்: டெங்கு, மழை என அடுத்தடுத்து தமிழகத்தைப் புரட்டிப்போட்ட சமூகப் பிரச்னைகளை 9-ம் தேதி அதிகாலை முதல் பின்னுக்குத்தள்ளிவிட்டது, வருமான வரித்துறையினர் ரெய்டு.  வருமான வரித்துறை ரெய்டு என்பது தமிழகத்திற்கு புதிதல்ல. ஆனால்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்பான இடங்களில் இரண்டு நாளாகத் தொடரும் ரெய்டு, ஆச்சர்யமும் அதிர்ச்சியுமானது. ஆம்,  2000 அதிகாரிகள் 189 இடங்கள் என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல; வருமான வரித்துறைக்கும் இதுதான் முதல்முறை என்கிறார்கள். 'தமிழக அரசியலில் கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் விஷயங்கள், ஒரு பரபரப்பு சினிமாவுக்கே உரிய அம்சங்கள். விறுவிறுப்பான  இந்தப் படத்தின் இறுதிக் காட்சியாகத்தான் இப்போது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் புகுந்திருக்கிறது வருமானவரித்துறை எனக் கூறுகின்றனர். ரெய்டுமூலம் சசிகலா குடும்பத்தினர் மீதான தாக்குதலின் முக்கிய கட்டத்தை பா.ஜ.க எட்டியுள்ளது என்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.>சசிகலா குடும்பத்தை ஏன் குறிவைக்கிறது டெல்லி மேலிடம்..? கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போவோம்....


ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்று ஜெயலலிதா என்ற ஆளுமையின் இடத்தை இட்டுநிரப்புபவராக ஒரே நாளில் அவதாரம் எடுத்தார் சசிகலா.
கட்சியின் சூத்ரதாரியாக இருப்பார் எனக் கருதப்பட்ட அவர், பொதுச்செயலாளராக ஆனது வரை பிரச்னை இல்லை. முதல்வராகும் ஆசை முளைத்தபோதுதான் பிரச்னைகளும் முளைத்தன. ஜெயலலிதாவின் தோழி என்ற முறையில், அவரைப்பற்றி மத்திய அரசுக்குச் சென்ற தகவல்கள் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை. அதனால், கட்சிப்பொறுப்போடு அவரது ஆசையைக் கட்டுப்படுத்திக்கொள்ளும்படி டெல்லி மேலிடம் சொன்னது என்கிறார்கள். ஆனால், தான் முதல்வராவதில் உறுதியாக நின்றார் சசிகலா. சசிகலாவின் முதல்வர் ஆசைக்கு ஓ.பி.எஸ் பலி கொடுக்கப்பட்டார். முதல்வர் கனவு இத்தனை சீக்கிரம் கலைந்துபோனதில் அதிருப்தி அடைந்த அவர், ஜெயலிதாவின் சமாதியில் தியானத்தில் அமர்ந்தார். அதனால், அ.தி.மு.க இரு அணிகளாக உடைய நேர்ந்தது.
சசிகலா
ஓ.பன்னீர்செல்வத்தின் தனி ஆர்வத்தனத்துக்குப் பின்னணியாக பா.ஜ.க இருந்ததாக வெளிப்படையாகப் பேசப்பட்ட அதேநேரம், ஓ.பி.எஸ் அணிக்கு எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் தாவ ஆரம்பித்தனர். எம்.எல்.ஏ-க்கள் தங்கள் அணியிலிருந்து கழன்றுகொண்டிருக்கும் விபரீதத்தை உணர்ந்து, கூவத்துாரில் அவர்களைக் குடிவைத்தார் சசிகலா.
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை தூசுதட்டி வைத்துவிட்டு, கவர்னர் அலுவலகம் நோக்கி  கூவத்துாரிலிருந்து அவரும் அவரது அணியின் எம்.எல்.ஏ-க்களும் படையெடுத்துச் சென்றும் பலன் ஒன்றுமில்லை. சட்டப்படி தனக்குள்ள போதிய ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை நேரில்  தந்தும் மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால், கவர்னர் அந்த மனுக்களைக் கிடப்பில் போட்டார். பதவியேற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுக்காத கவர்னர் மீது வழக்குப் போடலாம் என  பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவுக் குரல்கொடுத்தும் கவர்னர் அசைந்துகொடுக்கவில்லை.
ஆத்திரம் அதிகமான ஒருநாளில், 'எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது' என சசிகலா குரலை உயர்த்திப்பேச, அன்றுதான் அவருக்குப் பிரச்னை எழத் துவங்கியது. இரண்டொரு நாளில் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வரும் என அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
சொன்னபடியே தீர்ப்பு வந்தது. அ.தி.மு.க-வின் தலைமைப்பொறுப்பில் தன் குடும்பம் வரக்கூடாது என்பதில் மத்திய அரசு காட்டும் முனைப்பைப் புரிந்துகொண்டு, முன்னைவிடவும் ஆவேசமாக ஜெயலலிதாவின் சமாதியில் சாபம் விட்டபடி சிறைக்குப் போனார் சசிகலா. முன்னதாக, அக்கா மகன் டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாராகவும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியையும் அறிவித்தார். சிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றார்.
ஜெயலலிதாவின் மறைவினால், ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட, இரு அணிகளும் களத்தில் இறங்கின. சசிகலா ஓ.பி.எஸ்-க்கு தந்த அதிர்ச்சியைப்போன்று தினகரன், 'நான்தான் ஆர்.கே நகர் வேட்பாளர்' என அறிவித்து எடப்பாடிக்கு கிலி கொடுத்தார். ஆனாலும், ஆர்.கே. நகரில் பிரசாரம் செய்தார் முதல்வர்.  இரட்டை இலை சின்னத்தை தமக்கு ஒதுக்கும்படி ஓ.பி.எஸ் அணியும், தமக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று சசிகலா அணியும் கேட்க, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
இரு அணிகளுக்கும் புதிய நாமகரணத்தைச் சூட்டி, ஆளுக்கொரு சின்னத்தை அளித்தது தேர்தல் ஆணையம்.  ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை மின்விளக்கு அளிக்கப்பட்டது, தினகரனுக்கு தொப்பியைக் கொடுத்தது தேர்தல் ஆணையம். ஓ.பி.எஸ் அணிக்கு  இரட்டை இலையை நினைவுபடுத்தும் இரட்டை மின்விளக்கு சின்னத்தை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க இந்தப் பிளவின்  பின்னணியாக இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில், தினகரன் அணியினர் பண்ணத்தை வாரி இறைத்தனர். அதனால், தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது.
அடுத்த சில நாட்களில், இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டார். தினகரன் சிறையில் இருந்த நாட்களில், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் வெளிப்படையாகத் தெரியத்துவங்கின.
இந்தக் காலகட்டத்தில், எடப்பாடி அணி கொஞ்சம் கொஞ்சமாக தினகரன் எதிர்ப்பு அணியாக மாறத்துவங்கியது. இதன் பின்னணியிலும் பா.ஜ.க இருப்பதாகச் சொல்லப்பட்டது. இரு அணிகளின் தலைவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவந்த அதேவேளை, தினகரனுக்கு எதிராக வெளிப்படையான போரைத் துவக்கியது பழனிசாமி தரப்பு.
ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் இருவரும் ஒரேநாளில் தனித்தனியே மோடியை சந்தித்துப் பேசினர். அடுத்த சில நாட்களில், ஓ,பி.எஸ் அணியின் 2 கோரிக்கைகைளை அவசர அவசரமாக எடப்பாடி தரப்பு ஒப்புக்கொள்ள,  இரு அணிகளும் இணைந்தன. ஓ.பி.எஸ் துணை முதல்வரானார். அரசியலமைப்பை கேலிக்குரியதாக்கும் வகையில் ஓ.பி.எஸ் துணை முதல்வராக பதவியேற்றபோது, அவரது கையை எடப்பாடியின் கையோடு இணைத்துவைத்து 'வெற்றிப்புன்னகை' புரிந்தார் கவர்னர் வித்யாசாகர் ராவ். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் சசிகலா குடும்பத்தினரை எதிர்த்து அரசியல் செய்துவந்த வேளையில்தான் இப்போது அதரடி ரெய்டு அரங்கேறியிருக்கிறது.
சசிகலா
சசிகலா குடும்பம் வளைக்கப்படக் காரணம் என்ன..?
இதுபற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கிவரும் ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர், ' சசிகலா  முதல்வர் ஆவதைக்கெடுத்தது முதல் இன்றைக்கு நடந்துவரும் ரெய்டு வரை முழுக்கமுழுக்க பா.ஜ.க-வின் கடைக்கண் பார்வையில்தான் நடக்கிறது. முழுக்கமுழுக்க சசிகலா குடும்பத்தினரை குறிவைத்தே நடத்தப்படும் இந்த வருமான வரித்துறை ரெய்டு, பா.ஜ.க தமிழகத்தில் காலுான்றுவதற்கான 'ஆபரேஷன் சசிகலா ஃபேமிலி' என்றுதான் சொல்ல வேண்டும். திராவிட அரசியலில் ஊறிய தமிழகத்தில், கடந்த காலத்தில் மக்கள் அபிமானம் பெற்ற தலைவர்கள் தலைமை வகித்தும்கூட தேசிய கட்சியான காங்கிரஸ்,  மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. திராவிடக் கட்சிகளைச் சார்ந்தே தேர்தலை எதிர்நோக்கவேண்டியிருந்தது.  இந்த நிலையில்தான்  தமிழகத்தின் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதி உடல்நலம் குன்றினார். ஜெயலலிதா மறைந்தார்.
தமிழகத்தின் அரசியல் களத்தில் ஏற்பட்ட இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப, மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க பயன்படுத்திக்கொள்ள நினைத்தது. கடந்த காலத்தில் திராவிடக்கட்சிகளுடன் கூட்டு வைத்தாலும், பா.ஜ.க-வின் வாக்குவங்கி என்பது தமிழகத்தில் குறைந்த அளவில்தான் இருக்கிறது. இதனால்தான், மோடி தமிழகத்தில் காலூன்ற இது சரியான தருணம் எனக் காய் நகர்த்தத் துவங்கினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க உடைந்து சிதறும் என கணக்குப் போட்டது டெல்லி மேலிடம். இந்த வெற்றிடத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தமிழகத்தில் வலுவுடன் காலுான்ற நினைத்தது பா.ஜ.க. ஆனால், சசிகலா வெற்றிகரமாக அதன் தலைமைப் பதவிக்கு வந்ததுடன், ஜெயலலிதா போன்று கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டதில் ஏமாற்றமடைந்தது. இதன்பின்னரே, சசிகலாவுக்கு எதிராக காய்நகர்த்தலைத் தொடங்கியது டெல்லி மேலிடம்.
ஜெயலலிதா காலத்திலேயே  கட்சியில் மறைமுகமான தலைமையாக இருந்த சசிகலா  மற்றும் அவரது குடும்பத்தினர், எதிர்காலத்தில்  அ.தி.மு.க-வை வலுவாக வைத்துக்கொள்வார்கள் என்ற  தகவல்களை உளவுத்துறைமூலம் திரட்டிய டெல்லித் தலைமை, இப்படி ஓர் குடும்பம் அ.தி.மு.க-வில் தலையெடுப்பது தங்கள் நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும் எனக் கருதியது. முதல்வர் பொறுப்பேற்ற தினம், சசிகலாவின் காலில் விழுந்து ஆசிபெற்ற ஓ.பி.எஸ், ஒன்றரை மாதத்தில் அந்தக் குடும்பம் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என கலகக்குரல்  எழுப்பி வெளியேறியதன் பின்னணி இதுவே என்கிறார்கள்.
தினகரன்
ஆனால், எதிர்பார்த்தபடி ஓ.பி.எஸ் அணிக்கு எம்.எல்.ஏ-க்கள் வராததில் ஏமாற்றமடைந்த பா.ஜ.க, ஆர்.கே நகர் தேர்தல் ரத்து, இரட்டை இலை முடக்கம்,  தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரன் கைது என அடுத்தடுத்து தன் அதிரடிகளைத் தொடர்ந்தது என்கிறார்கள். இந்த நேரத்தில், தினகரனுடன் முரண்பட்ட எடப்பாடி பழனிசாமி, அவருக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார். தினகரனுக்கு எதிராக வெளிப்படையாக அரசியல் செய்யத் துவங்கிய பின்னர், தங்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசுடன் கூடுதல் இணக்கம்காட்டியது எடப்பாடி தரப்பு.
ஆர்.கே நகர் தேர்தல் மற்றும் அடுத்தடுத்து தேர்தல் கமிஷனில் தினகரனுக்கு ஆதரவாகக் குவிந்த ஆவணங்கள், தமிழகம் முழுவதும் வியாபித்திருக்கும் அவர்களது ஆதிக்கம் போன்றவை, சசிகலா குடும்பத்தின் ஆளுமையை மேலிடத்துக்கு  இன்னும் ஒரு முறை அழுத்தமாக உணர்த்தியது.  அதன்பின்னரே இரு அணிகளையும் இணைத்து, சசிகலாவுக்கு எதிராக தன் அடுத்த ஆட்டத்தைத் துவக்கியது பா.ஜ.க. அ.தி.மு. க-வின் ஆயுளைக் கூட்டும் அதிகார பலமும் பொருளாதார பலமும்கொண்ட ஒரு குடும்பம் உயிர்ப்போடு அரசியலில் இருப்பது  தமிழக பா.ஜ.க-வின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதாலேயே உச்சகட்டமாக, சசிகலா குடும்பத்தினரின் பொருளாதார சக்திமீது  பா.ஜ.க இப்போது தன் போரைத் துவக்கியிருக்கிறது என்கிறார்கள்.

கருணாநிதிஇந்த ரெய்டு  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள், நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர் மற்றும் தினகரனிடமிருந்து தள்ளிவைக்கும் முயற்சி. ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொடுக்கப்படும் வழக்குகளில், ரெய்டுக்கு ஆளானவர்கள் இனி சட்டரீதியாகப் போராடவேண்டியநிலை ஏற்படும், எனவே, அரசியலில் கவனம் செலுத்தாமல்போகலாம் அல்லது முற்றாக, அரசியல் களத்திலிருந்து ஒதுங்கிவிடலாம் எனக் கணக்குப்போடுகிறது பா.ஜ.க. சசிகலா குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது ஆதிக்கம் அ.தி.மு.க-விலிருந்தும் அரசியலிலிருந்தும் முற்றாக நகர்த்தப்பட்ட பின், தமிழக அரசியலில் தீவிர கவனம் எடுப்பது மோடியின் திட்டம்.  இந்தச் சுமுகமான சூழல் உருவாவதற்குத்தான் தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.  அநேகமாக பிப்ரவரி மாதத்துக்குள் தன் ஆபரேஷனை முடிக்கத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. அதன்பிறகே உள்ளாட்சித்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளிவரும். பா.ஜ.க-வின் ஆபரேஷனின் முதற்பகுதி இது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் தேர்தல் உடன்பாடு கண்டு, உள்ளாட்சியில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி, தமிழகத்தில் கட்சி வலுவாக காலுான்றிய பின், அது அ.தி.மு.க-வில் மற்றுமொரு ஆபரேஷனைத் துவக்கலாம்” என அதிர்ச்சியாக முடித்தவர், “அதேசமயம் தமிழகத்தில் வலுவாகக் காலுான்றும் இந்த முயற்சியில் தி.மு.க பெரிய அளவில் டஃப் கொடுப்பதாக இருக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகத்தான், சாதுர்யமாக கருணாநிதியைப் பார்க்கும் விசிட்டை வைத்துக்கொண்டார் மோடி. தி.மு.க-வுடன் பா.ஜ.க நெருங்குவதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினால், தி.மு.க-வுடன் தோழமையுடன் உள்ள பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் தி.மு.க-விடமிருந்து தீண்டாமையைக் கடைபிடிக்கும்.  அதனால், தி.மு.க  அடுத்த தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என்பதுதான் அவரது கணக்கு” என்றார்.
பா.ஜ.க-வின் இந்த ரெய்டுகுறித்து அ.தி.மு.க எம்.பி., மைத்ரேயனிடம் பேசினோம்..” அ.தி.மு.க ரெய்டு என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதே அபத்தம்.  2000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 180-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து இரண்டு நாள்கள் ரெய்டு என்பது தமிழகத்துக்குப் புதியது. இத்தகையதொரு ஏற்பாட்டை வருமான வரித்துறை ஓரிருநாளில் திட்டமிட முடியாது. இரு மாதங்களுக்கு முன்பே இது திட்டமிடப்பட்டது.  தகுந்த ஆவணங்கள் இன்றி வருமான வரித்துறை இப்படி ஒரு செயலில் இறங்க முடியாது. வருமான வரித்துறையின் செயலை அரசியலா, இல்லையா என்பதைவிட, சரியா தவறா என்று பார்க்க வேண்டும். சசிகலா தினகரன் குடும்பத்தினர் பற்றி தமிழகத்தில் அனைவருக்கும் நன்கு தெரியும். கடந்த காலத்தில் அவர்கள் மீதான வழக்குகள்குறித்தும் மக்கள் நன்கு அறிவார்கள். அதனால், இது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படவில்லை. ஆவணங்களின் அடிப்படையில் நடக்கும் ஒன்று” என முடித்தார்.
'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக