ஞாயிறு, 12 நவம்பர், 2017

நல்லகண்ணு : கலைஞர் என்னை அடையாளம் கண்டுகொண்டு என் கையைப் பிடித்து வரவேற்றார்”

கருணாநிதியுடன் நல்லகண்ணு சந்திப்பு!
மின்னம்பலம் :சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். ஓராண்டுகளாக எவ்வித நிகழ்விலும் கலந்துகொள்ளாத திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் முரசொலி பவள விழா கண்காட்சியைக் காண வந்திருந்தார். தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, இன்னும் சில மாதங்களில் தொண்டையிலுள்ள குழாய் அகற்றப்பட்டு பேசும் நிலைமைக்கு வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தனது கொள்ளுப்பேரன் மனோரஞ்சித்தின் திருமணத்தையும் நடத்தி வைத்திருந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை வந்த பிரதமர் மோடி, கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்ததோடு, டெல்லியில் வந்து ஓய்வெடுக்க வேண்டுமென நெகிழ்வுடன் கூறிச் சென்றார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று (நவம்பர் 11) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தனர். சந்திப்பின்போது ஸ்டாலின் உடனிருந்தார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, “கலைஞர் கருணாநிதியைச் சந்தித்தது மனநிறைவு அளிக்கிறது. அவரது உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு என் கையைப் பிடித்து வரவேற்றார்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக