திங்கள், 6 நவம்பர், 2017

கலைஞரை சந்திக்கிறார் பிரதமர் மோடி ... மரியாதை சந்திப்பு,,,, ?

தினமனி :  சென்னை: தினத்தந்தி நாளிதழின் பவளவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை மதியம் 12.30 மணியளவில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் இன்று திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள தினத்தந்தி நாளிதழ் பவள விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு விமானப் படையின் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். அந்த இடத்திலிருந்து அவர் கார் மூலம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்துக்கு வருகிறார்.
தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் பங்கேற்று விட்டு, சென்னை சாந்தோமில் நடைபெறும் தில்லியில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் டி.வி.சோமநாதனின் இல்லத் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று விட்டு, ஐ.என்.எஸ். அடையாறு விமானப் படைத் தளத்துக்கு வந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று தில்லிக்கு திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை, பிரதமர் நரேந்திர மோடி மதியம் 12. 30 மணியளவில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இந்த தகவலை பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் அவரது டுவிட்டரில் பக்க பதவில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த முடிவு திடீரென எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு கண்காணிப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக