செவ்வாய், 7 நவம்பர், 2017

பஞ்சமி நிலங்களை மீட்ப்போம்.,,, ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் ,, விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு!

Vadamalai Kandaswamy : பஞ்சமி நிலங்களை மீட்ப்போம். பஞ்சமி நிலங்களை இன்னும் 3 மாதங்களில் பட்டியல் இனத்தவரிடம் ஒப்படைக்காவிட்டால் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம், செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்தார்.
செய்யாறு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், பஞ்சமி நில மீட்பு மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மாநாட்டுக்கு மாவட்டத் துணைச் செயலாளர் எ.குப்பன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் இ.தெய்வசிகாமணி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
பஞ்சமி நிலங்களை மீட்க 10-10-1992-இல் ஜான்சன்தாமஸ், ஏழுமலை ஆகியோர் உயிரை தியாகம் செய்தனர். தமிழகத்தில் 12 லட்சத்து 616 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கர் நிலமும், செய்யாறு வட்டத்தில் 6,962 ஏக்கர் நிலமும்
உள்ளன. இவற்றை மாவட்ட ஆட்சியரும், கோட்டாட்சியரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் 3 மாதங்களில் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இனத்தவரிடம் வழங்காவிட்டால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் முன்பும் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மாநாட்டில், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை இனங்கண்டு பட்டியல் இனத்தவரிடம் வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணைக்குழு ஒன்றை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் நகர ஒருங்கிணைப்பாளர் து.சாண்டில்யன், மாநில நிர்வாகிகள் கவிதா சம்பத், பி.கா.அம்பேத்வளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக