வெள்ளி, 24 நவம்பர், 2017

துப்புரவாளர்கள் வெட்டி கொலை!.. திண்டுக்கல்லில் ஒரே நாளில்

துப்புரவாளர்கள் வெட்டி கொலை!மின்னம்பலம் : திண்டுக்கல்லில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மூன்று துப்புரவு தொழிலாளிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் சோலைஹால் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், வீரா, சரவணன் ஆகியோர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் இன்று (நவம்பர் 24) வேலைக்குச் சென்றுள்ளனர்.
பாலமுருகன் திண்டுக்கல் – சிலுவத்தூர் சாலையிலும், வீரா திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள நாகல்நகர் மேம்பாலம் அருகிலும், சரவணன், என்.வி.ஜி.பி.நகர்ப் பகுதியிலும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் வெவ்வேறு இடங்களில் பணியில் ஈடுபட்டிருந்த மூவரையும் மர்மகும்பல் சிலர் வெட்டி கொலை செய்துள்ளனர். திரைப்பட பாணியில் நடந்த இந்தச் சம்பவம் திண்டுக்கல் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாலமுருகன் மீது ஏற்கனவே கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், வீராவும், சரவணனும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முன் விரோதம் காரணமாக கொலை செய்தனரா? மூவரையும் ஒரே கும்பல் தான் கொலை செய்ததா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவர்களது உறவினர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக