வெள்ளி, 17 நவம்பர், 2017

தினகரன், திவாகரன் ,விவேக்..... இந்தப் பஞ்சாயத்து எங்கே போய் முடியுமோ?’



டிஜிட்டல் திண்ணை!
மின்னம்பலம் :“வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னைக்கு வந்திருந்தார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். வருமான வரித் துறை அலுவலகத்தில் விசாரணை தொடர்பான அலுவல்களை முடித்த பிறகு நேராக மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீட்டுக்குப் போயிருக்கிறார் திவாகரன். அங்கே விவேக் அவரது மாமனார் பாஸ்கர் உள்ளிட்ட குடும்ப உறவுகள் இருந்தார்களாம். விவேக்கிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி இருக்கிறார் திவாகரன்.
‘இதெல்லாம் எதுக்காக பண்றாங்க என்று உனக்கு தெரியும். இப்போ இருக்கிற சூழ்நிலையில் நாம ஆளுக்கொரு பக்கம் பிரிஞ்சு இருந்தா அது எடப்பாடிக்கும் அவரை சார்ந்தவங்களுக்கும் கொண்டாட்டமாக போயிடும். டிடிவி கூட உனக்கு எந்த வருத்தமும் வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம். நீயும் அடிக்கடி அவரோடு பேசு. என்ன செய்யலாம்னு கலந்துகிட்டு முடிவுகளை எடு... நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டீங்கன்னு ஊரெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க.

இது நல்லதுக்கு இல்லை. நாம இனி ஆட்சியை பிடிக்கப் போறோமா இல்லையா என்பதெல்லாம் அடுத்த கட்டம். இப்போ நாம எல்லோருமே நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம். அதை மறந்துடாதே. சசி ஜெயில்ல இருந்து வெளியே வர வரைக்கும் யாரும் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கணும். அதுக்கு நாம எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்’ என்று அட்வைஸ் செய்ததாக சொல்கிறார்கள்.
அதற்கு விவேக், ‘என் வீட்டுல நான்கு நாட்களுக்கு மேல ரெய்டு நடந்துச்சு. கட்சிக்காரங்க சொந்தக்காரங்க என எவ்வளவு பேரு வீட்டு வாசல்ல விடிய விடிய உட்கார்ந்து இருந்தாங்க. டிடிவி இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கலை. அவர் மட்டுமல்ல... அவரோட இருக்கிற எம்.எல்.ஏக்கள் கூட யாரும் வரலை. யாரையும் இங்கே போக வேண்டாம்னு அவரே சொல்லி இருக்காரு. ரெய்டு நடக்கும் போது வர வேண்டாம். ரெய்டு முடிஞ்ச பிறகு வந்து பார்த்து இருக்கலாம்ல... அதுக்கும் வரலை. இப்போ நீங்க மன்னார்குடியில் இருந்து வந்திருக்கீங்க. இங்கே இருக்கிற அடையாறுல இருந்து அவரால வர முடியலை. சரி... நேர்லதான் வரலைன்னாலும் ஒரு போன் போட்டு பேசி இருக்கலாமே... நான் என்ன அவ்வளவு வேண்டாதவனா ஆகிட்டேனா?
என்னோட வீட்டுக்கு வராமல் இருக்கிறது ஒருபக்கம் இருந்தாலும், ஜெயா டிவி பக்கம் கூட அவர் வரவே இல்லை. இப்படி ஒவ்வொன்றும் அவர்தான் பிரிச்சு பார்க்கிறாரு. வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், புகழேந்தி இவங்களை மட்டும் வெச்சுகிட்டு கட்சி நடத்திடலாம்னு அவர் நினைக்கிறாரு. இதெல்லாம் நல்லதான்னு நீங்களே சொல்லுங்க...’ என புலம்பித் தீர்த்துவிட்டாராம். திவாகரனும் அதற்கு சில சமாதானங்களைச் சொல்லி இருக்கிறார். ஆனாலும் விவேக் கோபம் குறையவில்லையாம்.
மகாலிங்கபுரத்தில் சமாதானப் படலத்தில் ஈடுபட்ட திவாகரன் அங்கே இருந்து நேராக அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்குப் போனாராம். தினகரனிடம் நலம் விசாரித்துவிட்டு, விவேக் வருத்தப்பட்டதை சொல்லி இருக்கிறார். அதற்கு தினகரன், ‘அவரு வீட்டுல மட்டுமா ரெய்டு நடந்துச்சு. என்னோட வீட்டுலயும்தான் நடந்துச்சு. அவரு வந்து விசாரிச்சு இருக்கலாமே... 187 இடத்துல ரெய்டு நடத்தினாங்க. நான் யாரு வீட்டுக்குப் போனேன்... இவங்க வீட்டுக்குப் போனேன்... விவேக் வீட்டுக்கு மட்டும் போகலைன்னா நீங்க கேட்கிறது சரி. நான் எங்கேயும் போகவே இல்லை. இது என்ன துக்கம் விசாரிக்கிற காரியமா? எனக்கு எதிராக அவங்க என்னவெல்லாம் செஞ்சுட்டு இருக்காங்கன்னு எனக்கும் தெரியும்.
நான் பார்த்து வளர்ந்த புள்ள அவன்.. சின்னம்மா வெளியே இருந்த வரைக்கும் அவன் எப்படி இருந்தான்... இப்போ எப்படி இருக்கான்னு நான் பார்த்துட்டுதான் இருக்கேன். அவன் பத்து பேரை கூட வெச்சுகிட்டு அவங்க சொல்றதுக்கு தலையாட்டிக்கிட்டு இருக்கான். கட்சியில பெரிய பொறுப்புக்கு அவனைக் கொண்டு வரணும்னு, கூட இருக்கிற ஆட்கள் சொல்லிட்டு இருக்காங்க. ‘விவேக் அரசியல்லதான் இருக்கான். அவனை அரசியலைவிட்டு யாரும் ஒதுக்க முடியாது’ என்றெல்லாம் அவனுக்கு நெருக்கமானவங்களை வெச்சு வெளியே பேச வைக்கிறான்.
அவன் அரசியலுக்கு வரதுன்னா வரட்டும். என்கிட்டயே வந்து பேசி இருக்கலாம். அதைவிட்டுட்டு, என்னை ஏதோ எதிரி மாதிரி டீல் பண்றது நல்லாவா இருக்கு. இதுமட்டுமல்ல... ‘கையெழுத்து போடும் பவர் எனக்குதான் இருக்கு. பணம் வேணும்னா என்கிட்டதான் வரணும்’ என்று பேசி இருக்கான்”என்று கொட்டித் தீர்த்துவிட்டாரம் தினகரன்.
அவரையும் சமாதானப்படுத்த எவ்வளவோ பேசிப் பார்த்திருக்கிறார். ஆனால் தினகரனும் திரும்பத் திரும்ப அதையே பேசியபடி இருந்தாராம். திவாகரன் அங்கிருந்து ஊரைப் பார்க்கக் கிளம்பிவிட்டாராம்” என்று முடிந்தது அந்த நீண்ட ஸ்டேட்டஸ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு, ‘இந்தப் பஞ்சாயத்து எங்கே போய் முடியுமோ?’ என கமெண்ட்டும் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக