வியாழன், 30 நவம்பர், 2017

உயர் நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம் : செவிலியர் போராட்டத்திற்கு தடை ! பார்ப்பன நீதிபதி இந்திரா பானர்ஜி ...

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி :போராட்டத்தை கைவிட்டால் தான் உங்கள் தரப்பு வாதங்களை கேட்க முடியும் என்றும், “ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லாம். ஆனால் போராட்டம் நடத்தக் கூடாது”
வினவு :கடந்த மூன்று நாட்களாக பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிஎம்ஸ் வளாகத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கலைக்க அதிகார வர்க்கமும், போலிசும் என்னவெல்லாம் சதித்திட்டம் தீட்டினர் என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம். நான்காவது நாளாக போராட்டம் தொடரும் என செவிலியர்கள் அறிவித்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த போராட்டத்திற்கு கண்டனதடை விதித்துவிட்டு, செவிலியர்கள் மீது அனுதாபம் காட்டவேண்டாம், செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும், இல்லையென்றால் உடனே பணி நீக்கம் செய்யலாம் என்றும் அறிவித்தது.



செவிலியர்களின் போராட்டத்தால் “ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.” என்கிறது நீதிமன்றம். ஏழைகள் மீது என்ன ஒரு அக்கறை நீதிமன்றத்திற்கு! தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் பற்றாக்குறையால் தனியார் மருத்துவமனையில் மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை கொட்டி அழுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, போதிய ஆட்களை நியமிக்க உத்தரவிடாத நீதிமன்றம், தற்பொழுது செவிலியர்களின் போராட்டத்தால் ஏழைகளின் மீது பாசம் வந்து பேசுவதில் எள்ளளவும் உண்மையில்லை. டெங்கு கொள்ளை நோயாக தாக்கிய நேரத்தில் ஏழை எளிய மக்கள் மடியும் போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் குதூகலித்த அரசை கண்டிக்க நீதிமன்றத்திற்கு வக்கில்லை. தனியார் மருத்துவமனைகள் சிகச்சை அளிக்க மறுத்தது குறித்து குறைந்தபட்சம் கேள்வியெழுப்ப கூட முடியவில்லை. இவர்கள் தான் ஏழைகளை ப்பற்றி கவலை கொள்கிறார்களாம்.




போராட்டத்தை கைவிட்டால் தான் உங்கள் தரப்பு வாதங்களை கேட்க முடியும் என்றும், “ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லலாம். ஆனால் போராட்டம் நடத்தக் கூடாது” என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.  நீதிமன்றம் உளுத்துப் போன ஒரு அமைப்பு என்பதற்கு இதுவே சாட்சி.
“பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது குறைந்தபட்ச ஊதிய விதியைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்று தொடர்ந்த வழக்கில் மாநில அரசுக்கு சாதகமாக அம்மாநில நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தன. இதை எதிர்த்து பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அவ்வழக்கில், நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு “ஒரு பணிக்காக தேர்வு செய்யப்படும் ஊழியருக்கு அதே பணியைச் செய்யும் நிரந்தர பணியாளருக்கு அளிக்கப்படும் அளவுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இதில் மாற்று கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது. வேலை நிறுத்தம் போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கிய காரணமே தாங்கள் கவுரமிக்கவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார உரிமை தொடர்பாக 1966 -ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியில் இந்தியாவும் கையெழுத் திட்டுள்ளது. இதன் விதிமுறைகள் ஏப்ரல் 10, 1979 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.”
இந்திய அரசியலமைப்பு விதி 141 -ல் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஊழியர் நிரந்தரப் பணியாளரா அல்லது தற்காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது. ஊதியம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத அரசை கண்டிக்கவில்லை. சட்ட விதிகளிலேயே அதற்கான சாத்தியம் இருக்கும் பொழுது அதனை அமல்படுத்த உத்தரவிட்டிருக்க வேண்டுமேயொழிய அதற்கு மாறாக வேலையை விட்டு விலகுங்கள் என்று கூறியது ஒன்றும் விசித்திரமானது அல்ல. இது தான் இந்த அமைப்பின் யோக்கியதை.
ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டு இரண்டு மணி நேரத்தில் பணிக்கு திரும்பவில்லை என்றால் அனைவரையும் பணிநீக்கம் செய்யப்படும் என்று மிரட்டியவர்களிடம் நீதி, நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?

சட்டப்பூர்வமாக நமது உரிமைகளை பெற முடியும், நீதிமன்றத்தின் மூலம் நீதியை நிலை நாட்டி விடலாம் என்ற கனவுக்கோட்டையை தகர்த்தெறிந்துவிட்டு, உறுதியான போராட்டத்தின் மூலமே நமது உரிமைகளைப் பெற முடியும் என்பதை செவிலியர்கள் மட்டுமல்ல அனைத்து ஊழியர்களும், தொழிலாளிகளும் உணர வேண்டிய தருணமிது.
மேலும் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக