புதன், 1 நவம்பர், 2017

வடசென்னையை கண்டு கொள்ளாத தமிழக அரசு ... தமீம் அன்சாரி


நக்கீரன் : வடசென்னையை கண்டுகொள்ளாத அரசு, ஜெயக்குமார் கருத்து பொறுப்பற்றது: தமிமுன் அன்சாரி நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி வடசெனையில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
அப்போது நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்த அவர், "வடசென்னை பகுதி அரசினால் கண்டு கொள்ளப்படவில்லை. திரு.வி.க.நகர் பகுதி வெள்ள நீரால் நான்கு நாட்களாக சூழப்பட்டுள்ளது. ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களால் பொதுமக்கள் படுகாயம் அடைந்து வருகின்றனர். மின்சார இணைப்புப் பெட்டிகள் பெருமளவில் ஆபத்தை உண்டாக்கக் கூடிய நிலையில் உள்ளது. ராமசாமி தெரு, டிகாசன் ரோடு, மன்னார்சாமி தெரு இதுபோன்ற இடங்களெல்லாம் மிக மோசமாக உள்ளது. ஆத்துத்தொட்டி பக்கத்தில் உள்ள ஹவுசிங் போர்டு மிகவும் மோசமான நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது. 100 குடும்பத்திற்கு மேலாக அதில் குடியிருந்து வருகின்றனர். அவர்களின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

உடனடியாக அதற்கு அரசு சீல் வைக்க வேண்டும். வெள்ள நீர் உள்ள இடங்களில் மின்சார ஒயர்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. உடனடியாக அதிகாரிகள் திரு.வி.க. நகருக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. அதிகாரிகள் பேச்சை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல், அமைச்சர்கள் நேரடியாக களத்திற்கு வந்து பார்வையிட வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.


 மழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். இன்று கொடுங்கையூரில் தேங்கிய நீரில் விளையாடிய இரண்டு பச்சிளம் குழந்தைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. அதைப் பற்றி...

அமைச்சர் ஜெயக்குமார் கருத்து பொறுப்பற்றது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் என்பது பாமர மக்களுக்கும் தெரியும். அதனை சரிசெய்து கொடுப்பதுதான் அரசாங்கத்தின் பணி. அதற்குத்தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கிறார்கள். மக்களுடைய மனதில் கசப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசுவதை நிறுத்த வேண்டும். உடனடியாக அமைச்சர்கள் எல்லோரும் களத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். வே.ராஜவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக