சனி, 11 நவம்பர், 2017

வீரமணி :பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளில் வெளி மாநிலத்தவர் நுழைந்தது எப்படி?


நக்கீரன் :தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக்குகளுக்கான விரிவுரையாளர்கள் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் இடம் பிடித்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:’’தமிழ்நாட்டில் பாலிடெக்னிக்களில்  விரிவுரையாளர் பணிகளுக்கான 1058 பணியிடங்களுக்கு விளம்பரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 28.7.2017 அன்று வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்வும் 16.9.2017 அன்று நடைபெற்றது. இப்பொழுது அதுபற்றிய முடிவுகள் வெளிவந்துள்ளன. (7.11.2017)இதில் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால் வெளி மாநிலத்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இடங்களைப் பிடித்துள்ளனர் என்பதுதான்.பொதுப் போட்டிப் பிரிவில் (General Turn) இது நடந்திருக்கிறது. இது மத்திய அரசின் வேலை வாய்ப்பல்ல, தமிழ்நாடு அரசின் பணி நியமனம். இதில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பிற மாநிலத்தவர் ஆதிக்கம் எவ்வாறு நிகழ்ந்தது?
தமிழ்நாட்டில் உரிய கல்வித் தகுதியுடன் ஏராள மான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களின் பணி வாய்ப் பினைப் பறித்து, பிற மாநிலத்தவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு என்பது தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் மாபெரும் அநீதி அல்லவா?
பிற மாநிலத்தவருக்குக் கதவு திறக்கப்பட்டது ஏன்?
 பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வாய்ப்பு அறிக்கையின் (Notification) 10ஆம் புள்ளியின் கீழ் வழங்கப்பட்டுள்ள குறிப்பு எண் 2இல் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வழங்கப்பட்டுள்ள ஜாதிச் சான்றிதழ்கள் உடையோர் பொதுப் போட்டியினராகவே கருதப்படுவர். அவர்களுக்கு 69% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு வழங்கப்பட்டுள்ள குறிப்பின் மூலமே பிற மாநிலத்தவர் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது;தேவையானது தானா? மறைமுக அழைப்பு அல்லவா?

;சான்றிதழ் சரிபார்ப்புக்கென 07.11.2017 அன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தேர்வு பதிவு எண்கள் மட்டும் வெளியிடப்பட்டு பெயர்கள் இல்லாத காரணத்தால் உடனடியாக இப்பிரச்சினை வெளிவரவில்லை. ஆனால், அப்பட்டியலில் பொதுப்போட்டியில் (GT  - General Turn) தேர்வு செய்யப்பட்டிருப்போரில் OC (Other Community)  என்று குறிப்பிடப்பட்டிருக்கும் முன்னேறிய பிரிவினரில்தான் முழுக்க தமிழ்நாட்டைச் சாராதோர் திணிக்கப்பட்டுள்ளனர்.


தீக்சித்துகளும், குப்தாக்களும்,சர்மாக்களும்  படையெடுப்பு<
அதாவது பொதுப் போட்டியில் இடம்பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களைத் தவிர பிறர் பட்டியலை மட்டும் தனியே எடுத்துப் பார்த்தால் அதில் மூன்றில் இரண்டு பங்கு வடநாட்டவர்/பிற மாநிலத்தவர் பெயர்கள் தீக்சித், பானிகிரகி, சர்மா, குப்தா, பாண்டே, சிங் என்ற பெயர்களே இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. அதிலும் பெரும்பாலானோர் வடநாட்டுப் பார்ப்பனர்களே!.>பொதுப் போட்டியில் இடம்பெற வேண்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இட ஒதுக்கீடு அல்லாத முன்னேறிய சமூகத்தவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே! அதிலும் இயந்திரவியல் (Mechanical), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE), மின்னணுத் தொடர்பியல் (ECE) போன்ற துறைகளில் முற்றிலும் 95%க்கு மேல் பிற மாநிலத்தவர் ஆதிக்கம்!

;தமிழ் படித்திருக்க வேண்டாமாம்!

;தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் பணியில் சேரவிருக்கும் இந்த பிற மாநிலத்தவர் எல்லாம் தமிழ் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்த் தேர்வு எழுதித் தேறினால் போதுமானது என்ற அடிப்படையில் சேர்க்கப்படுவர். அப்படியென்றால் அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் மொழி என்னவாக இருக்கும்?

 தமிழா? ஆங்கிலமா? அல்லது அவரவர் தாய்மொழியா? தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிற மாநிலத்தவர் அனைவரும் ஆங்கிலத்தில் வகுப்பு நடத்தும் திறமை பெற்றவர்களா?
 இல்லை, அதற்கும் இனி தான் பயிற்சி பெறுவார்களா?

தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் பிறர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பதற்கான சான்றே இந்தப் பட்டியல். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் நடந்த தில்லுமுல்லுகள் அஞ்சல் துறைக்கான தேர்வின் போது அம்பலமாகின.

தமிழே அறியாத அரியானாக்காரர் தமிழ்த் தாளில் அதுவும் இலக்கணப் பாடத்தில் முதலிடம் பெற்றார்.  இப்படி தமிழர்களின் மத்திய அரசுப் பணி வாய்ப்பினைப் பறிக்க தந்திரமான செயல்கள் நடைபெறும் சூழலில், தமிழ்நாடு அரசு வழங்கும் வேலைவாய்ப்பிலும் வடவர் ஆதிக்கம் நடைபெறுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

‘நீட்’ தேர்வில் போலி இருப்பிடச் சான்றிதழ்கள் பிடிபட்டதுபோல், இனி தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத் தேர்வுகளிலும் பிடிபடக் கூடுமோ?

படகிலிடப்பட்ட ஓட்டை மாநில அரசுக்குட்பட்ட கல்வி நிறுவனத்தில் வெளி மாநிலத்தவர்கள் புகுந்திட வழி வகுப்பது எப்படி?
தமிழ் தேர்ச்சி என்பதைக் கட்டாயமாக்காமல் இரண்டாண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி என்பது படகில் பெரிய ஓட்டைப் போட்ட கதை தானே!

இந்த விடயத்தில் கருநாடக அரசைக் கவனிக்க வேண்டாமா?

பின்பற்ற வேண்டாமா?
பிற மாநிலங்களில் தமிழர்கள் இப்படியெல்லாம் நுழைய முடியுமா? தமிழ்நாடு என்பது திறந்த வீடா?

தமிழக அரசைப் பொறுத்த வரையில் அவர்களுக்குள்ள சண்டையே சரியாக இருக்கிறது. தமிழ்நாட்டு உரிமைகள் பறிப் போவதுபற்றி அரசுக்கு என்ன கவலை?
முதல் அமைச்சர் இப்பிரச்சினையில் திட்டவட்டமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். கல்வித்துறை, உத்தியோகத்துறை என்பதில் தமிழ்நாடு எப்பொழுதுமே விழிப்பாக இருந்து வந்திருக்கிறது. அதையெல்லாம்  கோட்டை விடும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது.

இதற்குப் பரிகாரம் தேடப்படவில்லையானால் - கடும் போராட்டங்களை தமிழக அரசு சந்திக்க வேண்டியிருக்கும், எச்சரிக்கை!’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக