திங்கள், 27 நவம்பர், 2017

ஆண்ட பன்னீர் கோஷ்டிக்கும் ஆண்டுகொண்டிருக்கும் எடப்பாடி கோஷ்டிக்கும் தகராறு

எடப்பாடி - பன்னீர் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
மின்னம்பலம் : திருப்பூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி - பன்னீர் கோஷ்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இரட்டை  இலை சின்னத்தை எடப்பாடி - பன்னீர் தரப்புக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், மதுரையில் முதன்முறையாக நடைபெற்ற கொடியேற்று விழாவில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. விழாவுக்கு பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, கொடியேற்று விழா கல்வெட்டில் காலையில் இடம்பெறாத துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயர் மாலையில் இடம்பெற்றது. தொடர்ந்து இரு அணியினரும் ஒற்றுமையுடன்தான் உள்ளோம் என்று அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் வருவதையடுத்து, நினைவு ஊர்வலம் நடத்துவதற்காக நேற்று (நவம்பர் 26) திருப்பூர் மாவட்ட அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பன்னீர்செல்வம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆனந்தனின் ஆதரவாளர்கள் தவறான தகவல்களை முகநூலில் பரப்புவதாக பன்னீர் அணியினர் குற்றம்சாட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆனந்தன் எழுந்து பேச முயன்றார். இதையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி - பன்னீர் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்து வைத்ததால் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
ஏற்கெனவே அணிகள் இணைந்துவிட்டன. ஆனால், மனங்கள் இணையவில்லை என்று பன்னீர் ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், இரு தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள வாக்குவாதம் அதை நிரூபிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “அதிமுகவில் கீழ்மட்டத் தொண்டர்கள் இன்னும் இரு அணிகளாகவே செயல்பட்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக