வியாழன், 9 நவம்பர், 2017

ஐ.டி. ரெய்டும் தலைவர்கள் கருத்தும்!

மின்னம்பலம் :சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் இன்று (நவ.9) வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம் உட்பட 190 இடங்களில் சோதனை நடைபெற்றன.
இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்:
தமிழகத்தில், வருமான வரித்துறை ரெய்டு தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அன்புநாதன், விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி, ராம மோகனராவ் உள்ளிட்ட பலரின் வீடுகளில் இதற்கு முன்பு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இப்படித் தொடர்ந்து நடந்துவரும் ரெய்டுகளின் நிலை என்ன என்பது குறித்துத் தெளிவு இல்லை. தினத்தந்தி ’கன்னித்தீவு’ தொடர் போலத்தான் வருமான வரித் துறை சோதனைகள். இதைப் பற்றிக் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்:
போலி நிறுவனங்கள் மூலம் பொய்யான கணக்கு காண்பித்துள்ளவர்களைக் கணக்கெடுத்து, கறுப்புப் பண ஒழிப்பு அறுவை சிகிச்சையாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஒரு கட்சியை அழித்து முன்னேற வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தினகரன் அணியை எங்களுக்குச் சவாலாகக் கருதவில்லை. 1800 அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் அளவுக்குச் சொத்து சேர்த்துள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:
சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் நடக்கும் வருமான வரித் துறையினரின் சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது. உட்கட்சிப் பூசலைத் தீவிரப்படுத்தும் வகையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனது ஆட்சி நிர்வாகத்தின் தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசு இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்:
தங்கள் அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக வருமான வரித்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. தலைமைச் செயலக சோதனை, சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சோதனை, விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனைகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன என்பது தெரியவில்லை. தங்களுக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:
வருமான வரித் துறை சோதனை என்பது சட்டத்திற்கு உட்டபட்டது செய்கின்ற சோதனை அரசியல் உள்நோக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுமக்கள் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் இந்தச் சோதனை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும். வருமான வரிச் சோதனை குறித்து சந்தேகம் ஏற்பட்டால் அதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
நாஞ்சில் சம்பத் (தினகரன் அணி):
வருமான வரித் துறை சோதனையில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஜெயா டி.வி.யைக் கைப்பற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் வேலை இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக