புதன், 15 நவம்பர், 2017

தமிழ்நாடு புதுவை அல்ல... ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நக்கீரன் : ;தமிழக நிர்வாகத்தை சீர்படுத்த விரும்பும் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க ‘குதிரை பேர’அரசுக்கு உத்தரவிடாமல் அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது. எனவே இது போன்ற ஆய்வுகளை ஆளுநர் உடனடியாகக் கைவிடவேண்டும் என திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றைய தினம் கோவை சர்க்யூட் ஹவுஸில் அமர்ந்து, கோவை மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை அழைத்து ஆய்வு நடத்தியிருப்பது, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட  நடவடிக்கையாக அமைந்து, மாநில உரிமைகளில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் வேதனையளிக்கிறது. அந்த நடவடிக்கையை இன்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் தொடர்கிறார் என்பது கவலையளிக்கிறது.
;அரை நூற்றாண்டுக்கு மேல் மாநில சுயாட்சிக் கொள்கைக்காக தமிழகம் குரல் கொடுத்து வரும் நிலையில், மத்திய பா.ஜ.க. அரசும், ஆளுநரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் இந்த அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முழுக்க முழுக்க மத்திய அரசின் ஏஜெண்டாக, அலங்காரப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் மாநில நிர்வாகத்தில் தலையிட்டு ஆய்வு செய்வது என்பது மத்திய - மாநில அரசுகளிடையே நிலவும் உறவுக்கும் உகந்தது அல்ல. அரசியல் சட்டப்படி உயர்ந்த பதவியில் இருக்கும் மாண்புமிகு ஆளுநருக்கும் ஏற்ற செயல் அல்ல, என்பதை மூத்த அரசியல்வாதியான தமிழக ஆளுநர் அவர்கள் உணர்ந்து கொள்வார் என்று கருதுகிறேன்.
மாநிலத்தில் பொறுப்பான ஒரு அரசு நடக்க வேண்டுமென்றால் உடனடியாக இந்த முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். மாநில அரசு நிர்வாகத்தை முறைப்படுத்த அரசியல் சட்டபூர்வமான அரசு ஆட்சியிலிருந்தால் போதும் என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உணர்ந்து, அதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிர்வாகச் சீர்குலைவு நிச்சயம் ஏற்பட்டிருக்காது.

இந்த அரசின் மீது கொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் புகார்கள், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட மனு உள்ளிட்ட ‘குதிரை பேர’அரசின் மீதான பல புகார்கள் இன்னும் ராஜ்பவனில்தான் நிலுவையில் உள்ளன. அரசியல் சட்டப்படி தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றின் மீது எல்லாம் ‘அறிக்கை’கேட்டிருக்க வேண்டிய மாண்புமிகு ஆளுநர் திடீரென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் போல் அதிகாரிகளை அழைத்து “ஆய்வுக் கூட்டம்” நடத்துவது வருந்தத்தக்கது.

மாநில உரிமைகள் பறிபோவது பற்றியோ, மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது குறித்தோ எவ்வித கருத்தும் சொல்லும் முதுகெலும்பு இல்லாமல், ஊழல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது இந்த ‘குதிரை பேர’ அரசு. எப்படி தலைமைச் செயலகத்திற்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படையுடன் தலைமைச் செயலாளர் அலுவலகத்தை வருமான வரித்துறை ரெய்டு செய்ததைத் தட்டிக்கேட்கத் திராணியில்லாமல், முதலமைச்சர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் ஒட்டிக் கொண்டிருந்தாரோ, அதேபாணியில் இப்போது எடப்பாடி பழனிசாமியும், அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சருக்கு உள்ள தட்டிக்கேட்கும் தைரியம் கூட இல்லாமல், கையறுந்த நிலையில் நிற்கிறார்.

‘குதிரை பேர’ அரசு அகற்றப்படுவதற்குள் மாநிலத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய்விடும் ஆபத்தான சூழலில் தமிழகம் இப்போது இருப்பது கவலையளிக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காத ஒரே காரணத்தால் ஆயுளை நீடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியின் முதலமைச்சருக்கு, மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஆய்வு குறித்து கருத்துக்கூறும் திராணி இல்லை. ஆனால், மாநில சுயாட்சிக் கொள்கையினை நாட்டில் உள்ள மாநிலங்கள் அனைத்திற்கும் கற்றுக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற ‘ஆளுநர் ஆய்வுகளை’ உறுதியாக எதிர்க்கிறது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு என்பது புதுவை அல்ல. மாநில நிர்வாகத்தில் தலையிட புதுவை ஆளுநருக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு இல்லை. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையை அரசியல் சட்டம் உருவாக்கியுள்ளதே தவிர, ஒரு அரசின் அன்றாட நிர்வாகப் பணிகளில் தலையிட்டு அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்க ஆளுநர் பதவி நிச்சயமாக இல்லை. ஒரு ‘பொம்மை அரசை’ இங்கே வைத்துக் கொண்டு ‘ஆளுநர்’ மூலம் மாநிலத்தை நிர்வாகம் செய்திடலாம் என்று ஒருவேளை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கருதுகிறதோ என்று எழுந்த சந்தேகம் ஆளுநர் ஆய்வு மூலம் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“ஆளுநர் பதவி, ஆட்டுக்குத் தாடி எப்படித் தேவையில்லையோ அதைப்போன்றது", என்பது தி.மு.க.வின் நீண்டகாலக் கொள்கையாக இருந்தாலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மதிப்பும், மரியாதையும் அளிக்க வேண்டும் என்பது பேரறிஞர் அண்ணா, கலைஞர் எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடம். ஆகவே, தமிழக நிர்வாகத்தை சீர்படுத்த ஆளுநர் விரும்பினால், இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலில் உத்தரவிட வேண்டும். அதை விடுத்து இப்படி அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது.

ஆகவே, அரசியல் சட்டம் அளிக்காத அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே திக்குத்தெரியாத காட்டில் நிற்கும் அரசு நிர்வாகத்தை மேலும் சிதைத்து, பொறுப்புள்ள அரசு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்குப் பேரிடரை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும், இது போன்ற ஆய்வுகளை உடனடியாகக் கைவிடுமாறும் மாண்புமிகு தமிழக ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக