வியாழன், 9 நவம்பர், 2017

கீழடி அகழாய்வு பொருள்களை கடத்த முயன்ற தொல்லியல் அதிகாரி... சிறைபிடித்த கிராம மக்கள்!

பாலமுருகன். தெ
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களை மத்திய தொல்லியல் துறை அதிகாரி கடத்த முயன்றதால் கீழடி ஊர்மக்கள் திரண்டு அந்த வாகனத்தையும் அதிகாரியையும் சிறை பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு மூன்று கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், நான்காம் கட்ட ஆய்வுப் பணி இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளது சில தினங்களுக்கு முன்பு தமிழக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 7000 பொருள்களை இந்த ஊரில் உள்ள சமூதாயக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. திடீரென நேற்று மதியம் 3 மணியளவில் மதுரையில் இருந்து ராட்சதலாரி மூலம் அங்குள்ள அனைத்துப் பொருள்களையும் கடத்தியுள்ளார் தொல்லியல்துறையின் அதிகாரிகளில் ஒருவரான வீரராகவன்.
அவர் பொருள்களை ஆள்களை வைத்து லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த தகவல் ஊர் மக்களுக்கு காலதாமதமாக தெரிய வந்தது. உடனே ஊரில் இருந்த பொதுமக்கள் திரண்டு லாரியில் ஏற்றிய பொருள்களை எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் என்று முற்றுகையிட்டார்கள்.
இந்தத் தகவல் திருப்புவனம் போலீஸுக்கும் தாசில்தாருக்கும் தெரியவர அவர்களும் ஆஜராகினார்கள். எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் இப்படி அவசர அவசரமாக ஆய்வில் கிடைக்கப்பெற்ற பொருள்களை கொண்டு செல்லவேண்டிய அவசியம் என்ன என்று தாசில்தார் கேட்டதற்கு தொல்லியல் துறை அதிகாரியான வீரராகவன் என்னசொல்வது என்று தெரியாமல் உலற ஆரம்பித்தார். அந்த பொருள்களை பாதுகாப்பதற்காக வாசு என்கிறவர் காவலராக இருக்கிறார். அவருக்குக் கூட இது குறித்து தெரியப்படுத்தவில்லை.
காவலாளியாக இருக்கும் வாசுவிடம் கேட்டபோது, ``கடத்தல் நடக்கும்போது நான் இங்கு இல்லை. எனக்கு போன் போட்டு தகவல் சொன்னார்கள். உடனடியாக வந்து பார்த்தால் பொருள்கள் அனைத்தையும் ஏற்றிவிட்டார்கள். உடனே லாரி சாவியை பிடுங்கிவிட்டேன். அதோடு எங்கள் ஊர் மக்களும் திரண்டுவிட்டார்கள். மதியம் 3 மணியில் இருந்து 7மணி வரைக்கும் பொருள்களை ஏற்றியிருக்கிறார்கள். இவர்கள் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சொல்லிவிட்டு எங்களையெல்லாம் ஏமாற்றப்பார்க்கிறார்கள். எங்கள் மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட எந்த பொருளும் கடத்தப்படுவதை அனுமதிக்கமாட்டோம். உடனடியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்' என்றார் ஆவேசமாக.
-விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக