வியாழன், 16 நவம்பர், 2017

டெல்லி காற்றில் 60 சிகரெட் அளவு புகை மாசு ... மக்கள் மூச்சு திணறல்

tamilthehindu :டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகர அளவுக்குச் சென்றுள்ள நிலையில் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைநகரில் நேற்று முகக்கவசம் அணிந்து பேரணி சென்ற பள்ளி மாணவிகள்.   -  (படம்: ஷிவ்குமார்  புஷ்பகர்) எஸ்.ரவீந்திரன் கடந்த ஆண்டு வெளியான ‘எக்ஸோடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ்’ என்ற ஆங்கிலப் படத்தில் ஒரு காட்சி வரும். இயற்கை சீற்றங்களால் எகிப்து நாட்டு மக்கள் அழிவதைக் காட்டியிருப்பார்கள். முதலில் நைல் நதி சிவப்பு நிறத்துக்கு மாறும். மீன்கள் செத்து மிதக்கும். குடிக்க தண்ணீர் இல்லாமல் போகும். அடுத்து, கால்நடைகள் நோய் வந்து செத்து மடியும். லட்சக்கணக்கில் எங்கிருந்தோ வரும் வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்தும். அதையடுத்து தொடர்ந்து 3 நாட்கள் இருள் சூழ்ந்திருக்கும். யாருமே வீட்டை விட்டு வெளியே வர முடியாது. தொற்று நோய் பரவி மக்கள் கொத்து கொத்தாய் செத்து மடிவார்கள். இதே போன்ற நிலைமைதான் டெல்லியிலும். காரணம் பனிப்புகை. இந்தப் புகை மண்டலத்தால் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) 100 இருந்தாலே அது உடல் நலத்துக்கு கேடு. அப்படி இருக்கும்போது, டெல்லியில் 500 வரை இருக்கிறது தரக் குறியீடு. இது மிகப் பெரிய சுகாதாரக் கேடாகும். குழந்தைகள், வயதானவர்கள், ஆஸ்துமா தொல்லை உள்ளவர்கள் போன்றோரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. அதனால்தான் இந்திய மருத்துவ சங்கம் டெல்லியில் சுகாதார அவசர நிலையை அறிவித்தது. மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தது.
 
பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உ.பி. என வட மாநிலங்கள் அனைத்தும் காற்று மாசு காரணமாக மூச்சுத் திணறி வருகின்றன. இதற்கு, அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், அடுப்புக் கரி என பல காரணங்கள் இருந்தாலும், குறிப்பாக அறுவடை முடிந்தபின் வைக்கோல்களை எரிப்பதுதான் முக்கிய காரணம். வட மாநிலங்களில் கோதுமை வைக்கோலைத்தான் மாட்டுக்குத் தீவனமாகப் பயன்படுத்துவார்கள். அதனால்தான் நெல் வைக்கோலை எரித்து விடுகிறார்கள். பஞ்சாபில் 28 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுவது வழக்கம். இந்த நெல் அறுவடை முடிந்ததும், கோதுமை பயிரிட வேண்டிய நேரம் இது. அதனால்தான் இந்த அளவுக்கு வைக்கோலுக்கு தீவைக்கும் சம்பவங்கள் அதிகரித்து, டெல்லியை பனிப்புகை சூழ்ந்துள்ளது. மொத்தம் 40 ஆயிரத்து 510 தீவைப்பு சம்பவங்கள். வைக்கோலை எரித்தால் ரூ.2500 முதல் 15 ஆயிரம் வரை அபராதம் விதித்தாலும் சம்பவங்கள் குறையவில்லை.
 விவசாயிகளைப் பொறுத்தவரை, அறுவடை முடிந்த பின், வைக்கோலை அகற்றுவது பெரிய வேலை. 15 கி.மீ. தொலைவிலேயே பயோமாஸ் மின்னுற்பத்தி நிலையம் இருக்கிறது. அங்கு வைக்கோலை கொண்டு போய் கொடுத்தால், குவின்டாலுக்கு ரூ.100 தருவார்கள். ஆனால் அதை ஆட்களை வைத்து லாரியில் ஏற்றி இறக்குவதற்கே அதைவிட கூடுதல் செலவாகும். அதனால்தான், வைக்கோலை தீ வைத்து எரித்து விடுகிறார்கள். அதிகம் போனால் அரை மணி நேரம்தான். அத்தனையும் எரிந்து சாம்பலாகி விடும். அது அடுத்த பயிருக்கு உரமாக மாறிவிடும். ஆனால், எரிப்பதால் உருவாகும் புகை, 2 நாளில் 300 முதல் 400 கி.மீ. தூரத்தில் உள்ள டெல்லியை சூழ்ந்து கொள்கிறது.
அடுத்ததாக கரி. உ.பி., ராஜஸ்தான், ஹரியாணாவில் தொழிற்சாலைகளில் பெட்கோக் எனப்படும் கரி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவாக மிஞ்சும் பொருள்தான் பெட்கோக். அதிக வெப்பத்தை தரும் இந்தக் கரி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. காற்று மாசு காரணமாக அமெரிக்காவில் இதைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு, சீனா இதை அதிக அளவில் இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்தது. அங்கும் புகை மாசு ஏற்பட, இறக்குமதி அடியோடு குறைந்து விட்டது. ஆனால் உலக நாடுகளில் இந்தியாதான் இந்தக் கரியை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2011 முதல் 2016 வரையிலான 5 ஆண்டுகளில் இதன் இறக்குமதி 9 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தக் கரியில் கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, மெர்க்குரி, ஆர்சனிக், குரோமியம், நிக்கல் போன்ற நச்சுக்கள் அதிகம். டெல்லியில் 1996-ம் ஆண்டிலேயே இந்தக் கரி தடை செய்யப்பட்டது. ஆனால் சுற்றியுள்ள மாநிலங்களில் கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து தொழில் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், தடையை நீக்க மறுத்துள்ளது நீதிமன்றம்.
புகைக்கு மூன்றாவது காரணம் வாகனங்கள். குருகிராம், நொய்டா நகரங்களில் காலையிலும் மாலையிலும் அகலமான 8 வழிப் பாதையிலும் கார்கள் ஊர்ந்துதான் செல்ல வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு வாகன நெரிசல். இவை வெளியிடும் புகையும் காற்று மாசுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால்தான், சாலைகளில் ஓடும் கார்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்தில் ஒரு நாள் ஒற்றைப்படை எண்களைக் கொண்ட கார்களும் மறுநாள் இரட்டைப் படை எண்களைக் கொண்ட கார்களும் ஓட்டலாம் என டெல்லி அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது.

என்னதான் தீர்வு?

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் வைக்கோலை எரிப்பது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மாநில அரசே வைக்கோலை விவசாயிகளிடம் இருந்து பெற்று, தேவையான மாநிலங்களுக்கு அனுப்பலாம். அல்லது பயோமாஸ் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பலாம். அப்படி செய்தால், எரிப்பது குறையும்.
4000 பேரை பலிகொண்ட லண்டனின் கிரேட் ஸ்மோக்
1952-ம் ஆண்டு டிசம்பர் மாதம். லண்டன் நகரில் இதேபோன்ற புகை மண்டல பிரச்சினை. ஈரப்பதம் நிறைந்த, அதிகம் காற்று வீசாத வானிலையோடு, வாகனப் புகையும் வீட்டில் இருந்து வெளியேறும் புகையும் கலந்தது. இதனால் ஏற்பட்ட பனிப்புகை நகரை சூழ்ந்தது. சாலையில் மட்டுமல்ல, வீடுகளிலும் அலுவலகங்களிலும் கூட புகை சூழ்ந்து முட்டி மோதித்தான் நடமாடும் அளவுக்கு மோசமான நிலைமை. உள்ளேயே இந்த நிலைமை என்றால் வெளியில் சாலைகளில் கேட்கவா வேண்டும்? எங்கு பார்த்தாலும் விபத்துகள். மூச்சுத் திணறல் ஓலங்கள். தொடர்ந்து ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலி எங்கு பார்த்தாலும் ஒலித்தது. முதன்முறையாக லண்டனில் ரயில், பஸ் போன்ற பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த மோசமான நிலைமை முடிவுக்கு வந்தபோது, 4 ஆயிரம் பேர் இறந்து போயிருந்தனர். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக