சனி, 11 நவம்பர், 2017

4 லட்சம் வாகனங்கள் பறிமுதல்! காற்று மாசு காரணம் ..

மின்னம்பலம் : டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக நான்கு லட்சம் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் கொண்டாடிய தீபாவளி பண்டிகையால் டெல்லியின் இயல்பு நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. காற்று மாசுபாட்டால் ஒரு மாத காலமாக திணறிக்கொண்டிருக்கிறது டெல்லி. புகை மூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் அங்குள்ள மக்களுக்கு ஆஸ்துமா, சுவாச கோளாறு போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இதில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனி மூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுவதால் அங்கு புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 10 வருடங்களுக்கு மேலான டீசல் வாகனங்கள், 15 வருடங்களுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் என மொத்தம் 4 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 17ஆம் தேதி பசுமை தீர்ப்பாயம் வழங்கிய நிபந்தனைகள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், டீசல் வகை ஜெனரேட்டர்கள் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காற்று மாசுபாடு காரணமாக இதர வாகனங்களின் செயல்பாட்டை குறைப்பதற்காக, நவம்பர் 13 முதல் 17ஆம் தேதி வரை டெல்லியில் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லோட் நேற்று (நவம்பர் 10) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக