ஞாயிறு, 12 நவம்பர், 2017

ஐரோப்பிய அடைக்கலத்தில் 33 ஆயிரம் பேர் மரணம்..! அதிர்ச்சி புள்ளிவிவரம்

அகதிகள்அகதிகள்அய்லன் குர்திவிகடன் :ஜெ.அன்பரசன்'அய்லான் குர்தி' இந்தப் பெயரை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? கடந்த 2015 ஆம் ஆண்டு துருக்கி கடற்கரையில், படகு விபத்தினால் இறந்து கரை ஒதுங்கிய சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன். 'தான் எதற்காக கடும்குளிரில் கும்பலாக இவ்வளவு நாள் படகில் பயணம் செய்கிறோம்' என்பதுகூட அவனுக்குத் தெரிந்திருக்காது. 'எங்கு செல்கிறோம்...' என்றும் அவனுக்குத் தெரிந்திருக்காது. அதுவரை ஐரோப்பியாவுக்கு அகதிகளாகச் செல்பவரின் ஆபத்துப் பயணங்களைப் பற்றி நம்மில் பலருக்கே தெரியாது. துருக்கியின் கோஸ் கடற்கரையில் அய்லான் குர்தியின் உடல் கரை ஒதுங்கியபோது ஒட்டுமொத்த உலகநாடுகளும் கண்ணீர் வடித்தன. அதன்பின்பே ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளைப் பற்றி பலருக்குத் தெரியவந்தது.

சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடந்துவரும் உள்நாட்டு யுத்தம், தீவிரவாதம், வறுமையின் காரணமாக மக்கள் பாதுகாப்பான நாடுகளில் தஞ்சம் அடைய நினைக்கிறார்கள். அப்படி பெரும்பாலான மக்கள் தஞ்சம் அடைய நினைப்பது ஐரோப்பிய யூனியன் நாடுகளில்தான். அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதால், தங்கள் நாட்டில் குடியேற பல கட்டுப்பாடுகளை விதித்தது ஐரோப்பிய யூனியன். 'ஐரோப்பிய யூனியனுக்கு இப்படி அகதிகளாகச் செல்பவர்களில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்' என்ற அதிர்ச்சி புள்ளிவிவரத்தை பிரபல ஜெர்மானிய பத்திரிகையான der tagesspiegel வெளியிட்டுள்ளது.
சிரியா, ஈராக், மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்குச் செல்ல வேண்டும் என்றால், மத்திய தரைக்கடலின் வழியாகவே செல்லவேண்டும். அதுவும் சட்டத்துக்குப் புறம்பாக திறந்தவெளி படகின் மூலமாகத்தான் செல்ல முடியும். அப்படிச் செல்லும்போது புயல், மழை போன்ற இயற்கைப் பேரிடர்கள் மற்றும் படகு கவிழ்ந்துபோகும் விபத்துகள் ஏற்படுகின்றன. இப்போதுகூட 'ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் வழியில், படகு கவிழ்ந்து மக்கள் பலி' என்ற செய்தியை அடிக்கடி பத்திரிகைகளில் பார்த்துவருகிறோம். 'மத்தியத் தரைகடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை அடையும் முயற்சியில், இந்த ஆண்டு மட்டும் சுமார் 2,500-க்கும் அதிகமான அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்' என்று அகதிகளுக்கான சர்வேதச அமைப்பு கூறுகிறது.
இதேபோல 1993 ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரையிலான  அகதிகளின் மரணம் பற்றிய செய்தியை der tagesspiegel வெளியிட்டுள்ளது. துருக்கியைச் சேர்ந்த பனு செனடக்லு(Banu Cennetoglu ) என்ற பத்திரிகையாளர் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளின்படி இந்த புள்ளிவிவரத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், '1993-லிருந்து தற்போதுவரை 33,293 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது இறந்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார். 'இதுபோன்ற இறப்புகளில், கடந்த ஆறு ஆண்டுகளில் இறந்துபோனவர்களின் விகிதமே உச்சபட்சமாக இருக்கிறது' என்றும் அவர் குறிப்பிடுகிறார். அனைவரும் படகு விபத்துகளில் இறந்தவர்கள் அல்ல; இனவெறி காரணமாகவும் பலர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். 'இப்படி  அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு முக்கியக் காரணமே ஐரோப்பிய யூனியன் விதித்த கட்டுப்பாடுகள்தான்' என்றும் பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக