வியாழன், 23 நவம்பர், 2017

துருவ ராகமௌனிகா(19),, தற்கொலை,,, சத்தியபாமா கல்லூரி மாணவி

தற்கொலைதான் தீர்வா?மின்னம்பலம் : சென்னை சத்தியபாமா பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலையைத் தொடர்ந்து கல்லூரிக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் ராஜா ரெட்டி. இவரது மகள் துருவ ராகமௌனிகா(19). இவர் சென்னை செம்மஞ்சேரி சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு கணினி அறிவியல் பிரிவில் படித்து வருகிறார். அவருடைய சகோதரரும் அதே பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார். இவர் நேற்று (நவம்பர் 22) காலை நடந்த தேர்வில் சக மாணவியின் விடைத்தாளைப் பார்த்து காப்பி அடித்துள்ளார். இதனைக் கண்ட பேராசிரியர் ஒருவர் ராகமௌனிகாவை தேர்வறையை விட்டுவெளியேற்றியதாகவும்,ஆடைகளைக் களையச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, கல்லூரி விடுதிக்கு வந்த மௌனிகா தனியாக இருந்துள்ளார். நண்பகல் வகுப்பு முடித்து வந்த மாணவிகள், மௌனிகா அறையில் தூக்கிட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ராகமௌனிகா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவி தற்கொலையால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி, விடுதிகளில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கினர். மாலை 7.30 மணிக்குப் பிறகு, விடுதி மாணவர்கள் போர்வை, தலையணை, பேப்பர்கள் ஆகியவற்றை விடுதி முன்பாகக் குவித்து தீ வைத்து எரித்தனர். இதனால், அந்தப் பகுதி புகை மண்டலமாக மாறிக் காட்சியளித்தது. நிலையைக் கட்டுக்குள் கொண்டு வரக் கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் ஒத்துழைப்பை நாடியதால், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (நவம்பர் 23) மதியம் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த வன்முறை காரணமாக ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் மீண்டும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. வழக்கமாக டிசம்பர் 6ஆம் தேதிவரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று பிறகு விடுமுறை அளிக்கப்படும். இப்போது வன்முறை காரணமாக முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகமௌனிகாவின் உடல் அவருடைய சொந்த ஊரான நெல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டது. ராகமௌனிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு, பல்கலைக்கழக நிர்வாகமே காரணம் என அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவரது பெற்றோர், “தேர்வறையில் காப்பியடித்ததாகக் கல்லூரி நிர்வாகம் என் மகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர். ராகமௌனிகா இறந்த தகவலை உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. ராகமௌனிகா தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம்” எனக் கூறியுள்ளனர்.
அவரது சகோதரர், “தேர்வறையில் இருந்து வெளியேற்றியதாக எனக்கு ராகமௌனிகா குறுஞ்செய்தி அனுப்பினார். பெண்கள் விடுதிக்கு எளிதில் அனுமதிக்கமாட்டார்கள். என்னால் அங்கு உடனடியாக செல்ல முடியவில்லை. கல்லூரி நிர்வாகம் கால தாமதம் செய்யாமல் இருந்திருந்தால் எனது சகோதரியை காப்பாற்றியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
மாணவியின் தற்கொலை தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செம்மெஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் காரணமாக கல்லூரியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக