ஞாயிறு, 5 நவம்பர், 2017

சென்னை புறநகர் ,,10 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன"

தினதநதி: சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் வெளியேற முடியாததால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஆலந்தூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் கடந்த 5 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியன்பேட்டை ஏரி நிரம்பி வருவதால் அதன் அருகே உள்ள நெசவாளர் நகர், பல்லவன் நகர், ஏரிக்கரை தெரு பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதந்தன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் ஏரியின் கரையில் ஒரு பகுதியில் உடைத்து தண்ணீரை வெளியேற்றியதால் தண்ணீர் வெளியேறி சாலைகளில் ஓடியது. இதனால் தங்கள் பகுதிகளில் உள்ள தண்ணீர் வடிந்துவிடும் என அப் பகுதியினர் தெரிவித்தனர்.


ஆலந்தூர் கண்ணன் காலனியில் உள்ள அனைத்து தெருக்களிலும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை சுற்றி முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. கீழ்த் தளங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டதால் தில்லைகங்கா நகரில் மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் வெளியேறாமல் இருந்தது. மடிப்பாக்கம்-புழுதிவாக்கம் ராம்நகர் வடக்கு பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியிருக்கிறது.

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் அருகில் உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீநகர், காந்திநகர், லட்சுமி நகர், எல்.ஐ.சி. நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை சூழ்ந்தது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வரமுடியாத வகையில் இடுப்பு வரை தண்ணீர் தேங்கியது. இதனால் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்கள் மட்டும் நண்பர்களின் வீடுகளுக்கும் சென்றனர். தற்போது ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி, நேதாஜி, டான்சி நகர், பேபி நகர், உதயம் நகர், தரமணி பாரதி நகர் பெருங்குடி கல்லுக்குட்டை போன்ற பகுதிகளில் இடுப்பு அளவு வெள்ளம் தேங்கியிருந்தது. வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாயினர். தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வெண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

கோவிலம்பாக்கத்தில் எல்.ஐ.சி.நகர், என்ஜினீயர்ஸ் அவென்யூ, காகிதபுரம், உண்மை நகர், ராஜேஸ்வரி நகர், பாக்கியலட்சுமி, ராஜா நகர் உள்பட 3000-க்கும் அதிகமான வீடுகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.
இந்த பகுதிகளில் பொக்லைன் எந்திரங்களை கொண்டு தண்ணீர் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். நன்மங்கலம் வீரமணி நகரில் உள்ள 500-க்கும் அதிகமான வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியிருக்கிறது. இந்த நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருக்கிறது.

பரங்கிமலை போலீஸ் நிலையம் முன் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி உள்ளது. இவற்றை மின்மோட்டார் மூலம் அகற்றும் பணியில் போலீசார் ஈடுப்பட்டு உள்ளனர். பரங்கிமலையில் ராணுவ குடியிருப்பு பகுதியில் மழைநீர் கால்வாய் அடைக்கப்பட்டதால் அருகில் உள்ள கருணாநிதி நகர், காமராஜர் தெரு, அண்ணா தெரு, ராஜாஜி தெரு பகுதிகளில் வீடுகளை சுற்றி தண்ணீர்் தேங்கியது.

இதை கண்டதும் அப்பகுதியினர் ராணுவ குடியிருப்பில் அடைக்கப்பட்ட கால்வாயை உடைக்கச் சென்றனர். உடனே ராணுவ குடியிருப்பில் இருந்த ராணுவ வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் போலீசார் வந்து சமரசம் செய்து அடைக்கப்பட்ட கால்வாயை அகற்றி தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
மேற்கண்ட புறநகர் பகுதிகளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக