சனி, 14 அக்டோபர், 2017

பிரணாப் முகர்ஜி : ஜெயேந்திரர் கைது என்னை கோபப்படுத்தியது ... அசல் பாப்பானின் ஒப்புதல் வாக்குமூலம்!

ஜெயேந்திரர் கைது: பிரணாப் உடைத்த ரகசியம்!மின்னம்பலம் : ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டது கோபத்தை ஏற்படுத்தியது என்று முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். ‘கூட்டணி ஆட்சி ஆண்டுகள்:1996-2012’ என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள சுய சரிதை நூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் நேற்று (அக்.13) வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். சங்கர மடம் மற்றும் ஜெயேந்திரர் ஆகியோருக்கு எதிராகத் தொடர்ந்து சங்கரராமன் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தநிலையில் தான் இந்தக் கொலை நடைபெற்றது. எனவே இதன் பின்னணியில் ஜெயேந்திரர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து நவம்பர் 11, 2004 தீபாவளி தினத்தன்று ஆந்திராவில் இருந்த ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவரது கைது இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கடராமன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்தக் கைது சம்பவத்தைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் இந்த வழக்கைப் பொறுப்புடன் அணுக வேண்டும் என ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழக அரசிடம் தெரிவித்திருந்தார். பின்னர், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி புதுச்சேரி நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜெயேந்திரர் உட்பட 24 பேரை விடுதலை செய்தது.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு 13 தீபாவளிகள் கடந்த நிலையில், அப்போது மத்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்தத் தீபாவளி சமயத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘கூட்டணி ஆட்சி ஆண்டுகள்:1996-2012’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுய சரிதை நூலில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இதில், ஜெயந்திரர் கைது தொடர்பாக அவர் குறிப்பிடும்போது, ‘சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அந்நேரத்தில் மொத்த இந்தியாவும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்தது. அவர் கைது செய்யப்பட்ட நேரம் குறித்து நான் மிகவும் கோபமடைந்தேன். அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசின் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கைகள் இந்துத் துறவிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதா? ஈத் பெருநாளின்போது இஸ்லாமியத் தலைவரை மாநில அரசால் கைது செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினேன். பிரதமருக்குச் சிறப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் எனது கருத்துடன் உடன்பட்டார். இதையடுத்து, ஜெயேந்திரரை உடனடியாக பெயிலில் விடுதலை செய்யுமாறு நான் அறிவுறுத்தினேன்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தியுடனான சந்திப்பைப் பற்றியும் ஒரு முக்கியமான தகவலை அவர் எழுதியுள்ளார். ‘சோனியா காந்தி என்னை அழைத்து, ஜனாதிபதி பதவிக்கு நீங்கதான் பொருத்தமானவர். அதேவேளையில்,அரசாங்கத்தின் செயல்பாட்டில் நீங்கள் எந்தளவு முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதையும் மறக்காதீர்கள். எனவே, வேறு யாரையாவது பரிந்துரைக்க முடியுமா எனக் கேட்டார். எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மன்மோகன் சிங்கை சோனியா தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது என எண்ணினேன். அவ்வாறு மன்மோகனை ஜனாதிபதி பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்தால் என்னைப் பிரதமர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுப்பார் எனவும் எண்ணினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

2008 மும்பை தீவிரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்கை நான் சந்தித்தேன். அப்போது அவர், ’சிவராஜ் பட்டேல் உள்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். நீங்கள் அந்தப் பதவியை ஏற்க வேண்டும்’ என சோனியா காந்தி விரும்புவதாகத் தெரிவித்தார். அந்நேரத்தில் நான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தேன். அப்போதைய நிலையில், என்னை மாற்ற வேண்டாம் என சோனியாவிடம் மன்மோகன் தெரிவித்ததையடுத்து உள்துறை அமைச்சராகச் சிதம்பரம் நியமிக்கப்பட்டார் என்றும் புத்தகத்தில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக