செவ்வாய், 31 அக்டோபர், 2017

கேரளாவை சேர்ந்த, தமிழக, ஐ.பி.எஸ்., அதிகாரி, ஷபீர் கரிம் ஐ.ஏ.எஸ்., தேர்வில் காப்பியடித்து கைது!

 ஐ.ஏ.எஸ்., தேர்வு, காப்பியடித்த  ஐ.பி.எஸ்.,   கைதுதினமலர் :சென்னை, சென்னையில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சினிமா பட பாணியில், ஐ.ஏ.எஸ்., தேர்வில் காப்பி அடித்த, தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி கைது செய்யப்பட்டார். மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான, யு.பி.எஸ்.சி., இந்த ஆண்டு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில், 985 காலியிடங்களை நிரப்ப, ஜூன், 18ல், முதல் நிலை தேர்வை நடத்தியது. இதில், 13 ஆயிரத்து, 350 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கான மெயின் தேர்வு, அக்., 28ல் துவங்கி, நவ., 3 வரை நடக்கிறது. சென்னை உட்பட, நாடு முழுவதும், 24 முக்கிய நகரங்களில் தேர்வு நடக்கிறது.


112வது இடத்தில் தேர்ச்சி

அக்., 28ல், சென்னை எழும்பூரில் உள்ள, அரசு
பெண்கள் மேல்நிலை பள்ளியில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, தமிழக, ஐ.பி.எஸ்., அதிகாரி, ஷபீர் கரிம், 30, தேர்வு எழுதினார்.
பொறியியல் பட்டதாரியான இவர், 2014ல், யு.பி.எஸ்.சி., தேர்வில், 112வது இடத்தில்தேர்ச்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., தகுதி பெற்றார். ஆனால், ஐ.பி.எஸ்., அதிகாரியாக விருப்பம் தெரிவித்து, பயிற்சிக்கு பின், நெல்லை மாவட்டம், நாங்குநேரி, சப் - டிவிஷன், உதவி எஸ்.பி.,யாக
பயிற்சி பெற்று வந்தார்.

'புளூடூத்' கருவி


கேரளாவில், பல பெயர்களில், மனைவியுடன் சேர்ந்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்களையும் நடத்தி வருகிறார். இதனால், மீண்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முயற்சித்துள்ளார்.
அதற்காக, விடுமுறை எடுத்து படித்து வந்த, ஷபீர் கரிம், தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் கண்ணில் மண்ணை துாவி, அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, மொபைல் போன் மற்றும் சிறிய வகை,'புளூடூத்' கருவியை எடுத்து சென்று உள்ளார். அதன் வாயிலாக, ஐதராபாதில் இருந்த, மனைவிக்கு கேள்விதாளை அனுப்பி, 'புளூடூத்' கருவி வழியாக பதிலை பெற்று, தேர்வு எழுதி உள்ளார்.இவரது தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்த, தேர்வு மைய கண்காணிப்பாளர், ஷபீர் கரிமை, எழும்பூர் போலீசில் ஒப்படைத்து உள்ளார். அவரிடம், நேற்று, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர், சாரங்கன், இணை கமிஷனர், மனோகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது, நடிகர் கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சினிமா பட பாணியில், ஷபீர் கரிம் காப்பி அடித்து, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர் மீதும், அவரது மனைவி மீதும் மோசடி வழக்கு பதிந்துள்ளனர். நேற்று ஹபீர் கரிமை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த, அவரது மனைவி ஜாய்சி என்.ஜியாவையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக