செவ்வாய், 24 அக்டோபர், 2017

தமிழக பார்ப்பன பெண் முதல்வர் சிறைக்கு போவதிலும் இறப்பதே மேல் என்று அவாள் முடிவு எடுத்தாளா?

வினவு: அப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள் !
ஜெயலலிதாவைக் குற்றத்திலிருந்து விடுவிக்கவியலாது என்ற இக்கட்டில் சிக்கியிருந்தது உச்சநீதி மன்றம். செத்துப்போவது ஒன்றைத் தவிர சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை என்பதுதான் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா எதிர்கொண்டிருந்த சூழல். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு வேறு ஒரு கோணத்திலும் பொருள் இருக்கிறது. செத்தாலும் ஜெயலலிதா, ஜெயலலிதாதான்.
தான் உயிர் வாழ்ந்த காலம் வரையில், ஜனநாயகத்தின் கவுரவமிக்க பதவிகள் என்று கூறப்படும் அனைத்தின் மீதும் காறித்துப்பியது மட்டுமல்ல, அப்படித் துப்பினால் துடைத்துக் கொள்வதற்கும் அதனை சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், கவர்னர், மத்திய அமைச்சர்கள், நீதிமன்றம், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரையும் பழக்கப்படுத்தி வைத்திருந்தவர் ஜெயலலிதா. இப்போது கல்லறையிலிருந்தும் அம்மா காறித்துப்புவதையும் மேற்படி கனவான்களின் முகத்தில் எச்சில் வழிந்து கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். ஜெயா மரணம் குறித்து சசிகலாவை விசாரிப்பதற்கு முன், அரசு அதிகாரிகளை விசாரிக்கக் கோரும் டி.டி.வி. தினகரன்
இட்லி விவகாரம் மன்னார்குடி மாபியாவைத் தாக்கும் என்று பா.ஜ.க. குருநாதர்கள் எதிர்பார்த்திருக்கக் கூடும். மாறாக, அது எடப்பாடி-பன்னீர் கும்பல் மீது பூமராங்காகத் திரும்பியிருக்கிறது. “அப்போலோ மருத்துவமனையில் நடந்தது என்ன? ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு அமைச்சர்களைக்கூட அனுமதிக்காதது ஏன்?” என்று டி.டி.வி. தினகரனிடம் ஒரு தொலைக்காட்சி சானலில் கேள்வி எழுப்ப, அவர் சொன்னார்: “உங்கள் கேள்வி நியாயமானது. ஆனால், இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியே அல்ல. முதலமைச்சரை யார் சந்திக்கலாம், சந்திக்கக் கூடாது என்று முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர், முதல்வரது தனிச் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், முதலமைச்சர் பன்னீர், மருத்துவமனையின் நிர்வாகிகள் ஆகியவர்கள்தான்.
இவர்கள் அனைவரும் அப்போலோவில்தான் இருந்தார்கள். அவர்களிடம்தான் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும். தாங்கள் முதல்வரை பார்க்க முயன்றதாகவும் சசிகலா தடுத்துவிட்டதாகவும் அவர்கள் சொல்லட்டும், அப்புறம் என்னிடம் வந்து கேளுங்கள்” என்றார்.
அக்யூஸ்டு – 1 : கதாநாயகி, அக்யூஸ்டு – 2 : வில்லி என்கிற விசித்திரக் கதை !  
சசி குடும்பத்தைக் கொலைக்கஞ்சாத கொடியவர்களாகவும், ஜெயலலிதாவைப் பரிதாபத்துக்குரிய பலிகடாவாகவும் சித்தரிப்பதன் மூலம் தங்களுடைய திருட்டுத்தனங்களை மறைத்துக் கொள்ளலாம், அரசியல் ஆதாயமும் தேடலாம் என்பது எடப்பாடி, பன்னீர் கும்பல் மற்றும் அவர்களை இயக்கும் சங்க பரிவாரங்கள் தயாரித்திருக்கும் திரைக்கதை. இது துக்ளக் குருமூர்த்தியின் சொந்த சரக்கல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவரது குருநாதர் சோ உருவாக்கித் தந்த சரக்கு.
1991 – 96 ஆட்சிக்காலத்தில் அன்புச் சகோதரிகள் அடித்த கொட்டத்தின் விளைவாக மக்களின் கோபத்துக்கு ஆளாகி, ஆட்சியிழந்து, வழக்குகளால் அச்சுறுத்தப்பட்ட சூழலில், அவற்றிலிருந்து ஜெயலலிதாவை அரசியல்ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் காப்பாற்றும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட  கதை இது. போயஸ் தோட்டத்தில் இருந்து கொண்டே, தனக்குத் தெரியாமல் மன்னார்குடி மாபியா பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஒரு கதையை மக்கள் நம்பச் செய்வதற்குத்தான் சசிகலாவுடனான ஊடல், கூடல் நாடகங்களை ஜெயலலிதா அரங்கேற்றினார். பல்வேறு கிசுகிசு செய்திகள் மூலம் இந்தக் கதைக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்தும் வேலையைப் பார்ப்பன ஊடகங்கள் சிரமேற் கொண்டு செய்தன.

ஜெயாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சாக்கில் மிக்சர் பன்னீரை வளைத்துப் போட்டுக் கொண்ட பிரதமர் மோடி
இந்த தந்திரத்தையே கொஞ்சம் வேறு விதமாகச் செய்தார் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. -வுக்கு உள்ளேயே பல கோஷ்டிகளைப் பராமரிப்பதன் மூலம், குற்றங்களுக்கான பொறுப்பை அவர்கள் மீது தள்ளிவிட்டு, தன்னைத் தவறுகளுக்கு அப்பாற்பட்ட புனிதனாகக் காட்டிக்கொள்வது என்பது எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த உத்தி. “ஐயா நல்லவர், தர்மப்பிரபு ; கணக்குப்பிள்ளைதான் அயோக்கியன்” என்ற நிலப்பிரபுத்துவ அடிமைக் கருத்தியலில் ஊறியிருந்த தனது வாக்குவங்கிக்குப் பொருத்தமான திரைக்கதையாக இது எம்.ஜி.யாருக்குப் பயன்பட்டது.
கோடிக்கணக்கான மக்களின் வாயில் புகுந்து புறப்பட்ட ஒரே காரணத்தினால் உண்மையாக மாறிவிட்ட இந்த வதந்தியையே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வாதமாக நீதிமன்றத்தில் வைத்தார் ஜெயலலிதா. தனக்கும் சசிகலா பெயரில் உள்ள சொத்துக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற ஜெயலலிதாவின் வாதத்தை எள்ளி நகையாடித் தூக்கியெறிந்தார் நீதிபதி குன்ஹா. ஊழல் சொத்துக்கு பினாமியாகப் பயன்படுத்துவதற்காக அல்லாமல் வேறு எந்த உயர்ந்த நோக்கத்துக்காகவும் நீங்கள் சசிகலாவை போயஸ் தோட்டத்தில் தங்க வைத்துக் கொள்ளவில்லை என்று குன்ஹாவை வழிமொழிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது உச்சநீதி மன்றம்.
ஒருபுறம் குன்ஹாவின் அசைக்க முடியாத தீர்ப்பு, இன்னொருபுறம் குமாரசாமியின் அபத்தமான உளறல்கள் என்ற கிடுக்கிப்பிடியில் சிக்கியிருந்தார் ஜெயலலிதா. தீர்ப்பைத் தள்ளிப்போட இயலுமேயன்றி, ஜெயலலிதாவைக் குற்றத்திலிருந்து விடுவிக்கவியலாது என்ற இக்கட்டில் சிக்கியிருந்தது உச்சநீதி மன்றம். செத்துப்போவது ஒன்றைத் தவிர சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை என்பதுதான் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா எதிர்கொண்டிருந்த சூழல்.
அம்மாவை அப்போலோவுக்கு அனுப்பிய சூழல்!
செப். 22 ஆம் தேதியன்று அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கான சூழலைப் பற்றியும், டிசம்பர் – 5 ஆம் தேதி வரை அவருக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சையைப் பற்றியும் நீதிபதி ஆறுமுகசாமி கமிசனை விசாரிக்கச் சொல்லியிருக்கிறது எடப்பாடி அரசு. இதுதான் அந்தச் சூழல்.
இந்தச் சூழல் அ.தி.மு.க.வினர் அறியாததல்ல. அதனால்தான், நம் அனைவரின் பாவங்களுக்காகவும்தான் சின்னம்மா சிலுவை சுமக்கிறார் என்றும், அம்மாவுக்காகத்தானே சின்னம்மா சிறையில் இருக்கிறார் என்றும் உருக்கமாக மிரட்டல் விடுக்கிறார் தினகரன். அதனால்தான் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என்று சீனிவாசன் சொன்னால், எல்லோரும் பார்த்தோம் என்று வேறு சில அமைச்சர்கள் பேசுகிறார்கள்.

அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே, ஜெயாவின் உடல்நிலை குறித்து பேட்டியளிக்கும் ஜெயா-சசி கும்பலின் முன்னால் ஏஜண்ட் வெங்கய்யா நாயுடு
“நேற்று வரை சின்னம்மா காலில் விழுந்து கிடந்தவன்தானே நீ?” என்ற வசனத்தையும், “நீங்கள்தான் முதல்வராயிற்றே. அப்போலோவில் நீங்கள் அம்மாவைப் பார்ப்பதைத் தடுப்பதற்கு உங்களை விட பெரிய ஆள் அங்கே யார் இருந்தார்கள்?” என்ற வசனத்தையும் ஒரே நேரத்தில் பன்னீரை நோக்கிப் பேசுகிறார் தினகரன். முதல் வரி உண்மை. இரண்டாவது வரி சட்டப்படி உண்மை.
“சசிகலாவை மீறி பன்னீரோ வெந்நீரோ உள்ளே போயிருக்க முடியுமா?” என்பதல்ல கேட்கப்படவேண்டிய கேள்வி. அவ்வாறு மீறிப் போகவேண்டும் என்று யாரேனும் மனதாலும் நினைத்திருப்பார்களா என்பதுதான் விசயம்.
அப்போலோவில் என்ன நடந்திருக்கும் என்பது ஊகிக்கக் கடினமானதல்ல. அடி முதல் நுனி வரை அங்கே நடந்தது அனைத்தும் முறைகேடுதான். காவிரி பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஜெ. நடத்தியதாக கூறப்படும் ஆலோசனையில் தொடங்கி கைரேகை, கையெழுத்து உள்ளிட்ட அனைத்துமே பித்தலாட்டம்தான்.
இந்த பித்தலாட்டங்கள் அனைத்தும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளரான ‘மணல்’ ராமமோகன ராவ், சுகாதாரத்துறை செயலரான மாட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், இசட் பிளஸ் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகள், கவர்னர், ஜெயாவின் டில்லி கணக்குப் பிள்ளைகளான வெங்கையா நாயுடு, ஜெட்லி, கவர்னர், அருமை நண்பர் மோடி, அப்போலோ நிர்வாகம் ஆகிய அனைவரின் ஒத்துழைப்புடன்தான் அரங்கேறியிருக்கின்றன.

ஜெயா இட்லி சாப்பிட எபிசோட்டின் கதாசிரியர் சீனிவாசன்
அன்று இது குறித்து கேள்வி எழுப்பிய தி.மு.க. தலைவர் கருணாநிதியை அ.தி.மு.க. மட்டுமின்றி, பார்ப்பன ஊடகங்களும் வசை பாடின. சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியினர் எனப்படுவோரில் பலர், அப்போலோ வாசலில் நின்று கொண்டு பேட்டியளித்து இந்தப் பித்தலாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கினர்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கிறாரா, சுய நினைவுடன் இருக்கிறாரா என்பது அவர்களது சொந்தப் பிரச்சினையோ, அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரமோ அல்ல. இருந்த போதிலும், இது குறித்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்ததன் மூலம் சென்னை உயர்நீதி மன்றமும் இந்த மோசடி நாடகம் தொடர அனுமதித்தது.
கவர்னர் இட்லி, மோடி இட்லி, ஜெட்லி இட்லி கடைசி இட்லிதான் சீனிவாசன் இட்லி!
அரசமைப்பின் அத்தனை நிறுவனங்களும், ஆகப்பெரும்பான்மையான ஊடகங்களும் இந்த முறைகேட்டுக்கு ஏன் துணை போயின? சசிகலாவின் மீதான பயமா? சசிகலாவுக்கு பன்னீர் பயப்படலாம், மோடியும் ஜெட்லியும் கவர்னரும் ஏன் பயப்படவேண்டும்?
ஏனென்றால், இது வெறும் பயம் குறித்த பிரச்சினை அல்ல. நடந்த முறைகேடுகள் அப்போலோவில் திடீரென்று உருவானவையும் அல்ல. அமைச்சர்கள், அதிகாரவர்க்கம், மைய அரசு, நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் ஜெயலலிதாவின் முறைகேடுகளுக்குப் பழகியவர்கள். அவற்றை அங்கீகரித்தவர்கள், நியாயப்படுத்தியவர்கள். அந்த முறைகேடுகளுள் ஒன்றுதான் சசிகலாவின் அதிகாரம்.
ஆகவே, விசாரிக்கப்பட வேண்டியது, ஜெயலலிதாவின் கீழ் சட்டத்தின் ஆட்சி எப்படி செத்துப்போனது என்பதுதானே தவிர, ஜெயலலிதா எப்படி செத்துப்போனார் என்பதல்ல. ஏற்கனவே கேட்பாரின்றி நடைபெற்று வந்த முறைகேடுகளின் இயல்பான தொடர்ச்சிதான் அப்போலோவில் அரங்கேறியிருக்கிறது.
அப்போலோவிற்குச் செல்வதற்கு முந்தைய நாட்களில், தலைமைச் செயலகத்துக்கு வராமலேயே ஜெயலலிதா வந்ததாகக் காட்டி வெளியிடப்பட்ட புகைப்படங்களும், பங்கேற்றதாகக் கூறப்பட்ட திறப்புவிழா நிகழ்ச்சிகளும் போட்டோஷாப் செய்து வெளியிடப்பட்டவை என்று அம்பலமான பின்னரும், கவர்னர் முதல் தலைமைச்செயலர் வரையிலான அனைவரும் அந்த மோசடிக்குத் துணை நிற்கவில்லையா? இந்த திறப்பு விழா இட்லிகள், திண்டுக்கல் சீனிவாசனின் இட்லிக்கும் முந்தையதில்லையா?
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஆலோசகர்கள் என்ற பெயரில் ஷீலா பாலகிருஷ்ணனும், ராமானுஜமும் அரசாங்க முடிவுகள் அனைத்தையும் எடுத்தார்களே, அது சசிகலாவின் அதிகாரத்துக்கு இணையான அதிகார முறைகேடில்லையா? வளர்ப்பு மகன் திருமணத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் எடுத்த சாம்பார் வாளிகள், இட்லி கதையில் சேராதவையா?
ஆர்.கே. நகர் வாக்குச்சாவடியொன்றில் வாக்காளர் எண்ணிக்கைக்கு மேல் வாக்குகள் பதிவான பின்னரும், தேர்தலை ரத்து செய்யாமல் அம்மா பெற்றது வெற்றிதான் என்று தேர்தல் ஆணையம் சாதித்ததே, அது சீனிவாசன், சி.ஆர்.சரஸ்வதி முதலானோர் எடுத்துவிட்ட இட்லி கதையைக் காட்டிலும் அருவெறுப்பானதில்லையா?
கன்டெயினர் கருப்புப் பணம் 520 கோடியை, வங்கிப் பணம்தான் என்று சாதித்ததே மோடி அரசு, அந்தக் கன்டெயினரை விடவா பெரியது சீனிவாசனின் இட்லி?
சென்ற சட்டமன்றத் தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கு வாழ்த்துக் கூறினாரே பிரதமர் மோடி, அந்த வெற்றியும் சீனிவாசனின் இட்லியும் வேறு வேறானவையா?
எம்.ஜி.ஆர். சமாதியிலும், அரசாங்க சிற்றுந்துகளிலும் காணப்படுவது இரட்டை இலை அல்ல என்று ஜெ. அரசு சொன்ன இட்லிக் கதையை நம்பி ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தார்களே மாண்புமிகு நீதியரசர்கள், அவர்களை திண்டுக்கல் சீனிவாசனுக்கு இணையான அப்பாவிகள் என்று மதிப்பிடுவது பொருட்குற்றமாகுமா?
அம்மாவை மரணத்துக்குத் தள்ளிய சட்டத்தின் ஆட்சி!
அம்மாவின் உடல்நிலை சீர்குலையக் காரணம் பெங்களூரு சிறைவாசம்தான் என்று எழுதி குன்ஹாவை ஒரு அக்யூஸ்டாகவே ஆக்கியது தினமணி. ராம் ரகீமின் ஆட்கள் சிர்சாவில் நடத்திய கலவரத்துக்குப் பொறுப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதிதான் என்று கூறிய அமித் ஷாவின் பேச்சுக்கும் தினமணி தலையங்கத்துக்கும் வேறுபாடும் இருக்கிறதா?
தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா என்று குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்த் திரையுலகம் நடத்திய போராட்டத்துக்கும், சிர்சாவில் ராம் ரகீமின் பக்தர்கள் செய்த காலித்தனத்துக்கும் வேறுபாடு உண்டா?
மொத்தத்தில் சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்படுவதை லேசாக நிலைநாட்டினாலும் அது அம்மாவின் உடம்புக்கும் உள்ளத்துக்கும் எப்போதும் ஒத்துக்கொண்டதில்லை. சட்டவிரோதக் கும்பலின் சர்வாதிகாரம்தான், அம்மாவின்  ஆரோக்கியத்துக்கும் அரசியலுக்கும் எப்போதுமே உகந்ததாக இருந்திருக்கிறது.
சசிகலாவைப் பொருத்தவரை, அக்காவின் நலனுக்கு எது உகந்ததோ அதை மட்டுமே செய்து பழகியவர். அதனால்தான் சட்டவிரோத கும்பலாட்சியை உத்திரவாதப் படுத்துவதன் வாயிலாக, அக்காவின் உடல்நலத்தை இத்தனை நாளும் அவர் பேணி வந்தார்.
மற்றபடி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தப் பாடுபடுவதாக, சசிகலா எந்த கவர்னர் மாளிகையிலும் சத்தியப் பிரமாணம் செய்ததில்லை. அவ்வாறு அரசமைப்பு சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மத்திய மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும், கவர்னர், நீதியரசர்கள் முதலானோரும்தான். சட்டமீறலை இனம் கண்டு தண்டிப்பதுதான் நோக்கமென்றால், விசாரிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்தான்.
ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்பது மட்டுமே கமிசனின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், சட்டமீறல்கள் மூலம் அக்காவின் ஆரோக்கியத்தைப் பேணியது மட்டுமின்றி, அந்த சேவைக்காக இன்று சிறையில் இருக்கும் தியாகியான சசிகலாவை ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பொறுப்பாக்குவது உண்மைக்கு எதிரானது. நீதிக்கும் புறம்பானது.
-மருதையன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக