வெள்ளி, 20 அக்டோபர், 2017

நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!


நக்கீரன் : கடந்த  ஒரு  வாரத்திற்கு முன்பு திண்டுக்கல் அரசு தலைமை
மருத்துவமனையை ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டெங்குகாய்ச்சலுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் யாரும் பலியாகவில்லை. வைரஸ் காய்ச்சலுக்குத்தான் சிலர் பலியாகியுள்ளனர் என்று கூறினார். இதற்கு முன்னாள் தி.மு.க. அமைச்சரும், கழக துணைப்பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியோ டெங்கு காய்ச்சலுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் பலர் இறந்துள்ளனர் என்ற ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இது டாக்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில்தான் பழனிக்கு வந்த வனத்துறை அமைச்சரோ டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு குறித்து டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். பழனியில் பாலாறு, பொருந்தலாறு அணை தண்ணீரை விவசாயத்திற்காக திறந்துவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டார். அதன்பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சீனிவாசனோ... தற்போது பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து 834 ஏக்கர் பாசன வசதி பெற்றும் வகையில் வினாடிக்கு 200 கன அடி வீதம் 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


இந்த தண்ணீரை விவசாயிகள் முறையாகவும், சிக்கனமாகவும் பயன்டுத்திக் கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் கூறி இருந்தேன். இதற்கு பல்வேறு தரப்பினர் டெங்குவால் உயிரிழப்பு நடந்துள்ளது என்று கூறினர்.

மாவட்ட நிர்வாகமும் நலப்பணிகள் இணை இயக்குனரும் தெரிவித்த கருத்தையே நான் கூறினேன். நான் டாக்டர் அல்ல ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை பரிசோதனை செய்து என்ன காயச்சல் என்று தெரிவிக்க முடியாது. எந்த காய்ச்சலால் உயிரிழந்தனர் என்பதை டாக்டர்கள் தெரிவிக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வாறு மருத்துவ குழுவினர் தெரிவித்த கருத்தையே நான் தெரிவித்தேன் என்று கூறினார்.

ஆனால் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகவில்லை என்று கூறிய அமைச்சர் திடீரென டாக்டர் கூறியதைத்தான் நான் கூறினேன் என்று ஒரு அமைச்சரே பல்டி அடித்து பதில்சொல்லி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக