இது தொடர்பாக எம்ஏஎம் ராமசாமியின் சகோதரர் மனைவி குமாரி ராணி மீனா முத்தையாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்தையா தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
குமார ராணி மீனா முத்தையா, தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு அரண்மனையின் உள்ளே சுமார் 39 கிரவுண்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் வசித்து வருகிறார். இதற்காக 2015-ம் ஆண்டு எனது தந்தையுடன் (மறைந்த எம்ஏஎம் ராமசாமி) அவர் ஒரு குத்தகை ஒப்பந்தம் போட்டு அதை மயிலாப்பூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளார். அந்த சொத்தையும் சட்டப்படி நானே நிர்வகிக்க வேண்டியிருப்பதால், மயிலாப்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் குமாரி ராணி மீனா முத்தையா பெயருக்கு பதியப்பட்டுள்ள ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமி – சிகப்பி ஆச்சி தம்பதியினர் தன்னை வளர்ப்பு மகனாக 1996-ம் ஆண்டு தத்து எடுத்துக் கொண்டதாகவும், அவர்களது மறைவுக்குப் பிறகு அவர்களின் சொத்துகள், தொழில்களை தானே முன்நின்று நிர்வகித்து வருவதாகவும், அதன்படி குமாரி ராணி மீனா முத்தையா வசித்து வரும் விருந்தினர் மாளிகையும் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார். அவர் இந்த சொத்தில் தனக்குரிய பங்கை பிரித்துக் கேட்காமல், அதிபுத்திசாலித்தனமாக உரிமை மட்டும் கோரியுள்ளார்.
எம்ஏஎம் ராமசாமியின் இறுதி காலகட்டத்தில் மனுதாரருக்கும், அவருக்கும் சுமூகமான உறவு இல்லை. எம்ஏஎம் ராமசாமி உயிருடன் இருந்தபோதே, சொத்துகளை உரிமை மாற்றம் செய்ய வேண்டும் என கீழ் நீதிமன்றத்தில் முத்தையா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் முத்தையாவை தனது வளர்ப்பு மகனாக தத்து எடுத்ததே நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூக வழக்கம், கோயில் மரபுப்படி செல்லாது என எம்ஏஎம் ராமசாமியே பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த உண்மைகளை முத்தையா மறைத்துள்ளார்.
ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட உயிலின்படி அந்த விருந்தினர் மாளிகையில் வசிக்க குமாரி ராணி மீனா முத்தையாவுக்கு அனைத்து உரிமைகளும் சட்டப்படி உள்ளன. தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் இந்த வழக்கு நேர்மையற்ற முறையில் தொடரப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது. எனவே, மனுதாரர் முத்தையா, முதலில் தன்னை சட்டப்படியான வாரிசு என்பதை நிரூபித்துவிட்டு அதன்பிறகு சொத்துக்காக வழக்கு தொடரட்டும் என கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக