திங்கள், 30 அக்டோபர், 2017

இளங்கோவன் :பிரதமர் பெயரே தெரியாத அதிமுக அமைச்சர்கள் செய்தியாளர்களை தவிர்க்கலாம்!


 செய்தியாளர் சந்திப்பை அமைச்சர்கள் தவிர்க்கலாம்!மின்னம்பலம் :பிரதமர் பெயரே தெரியாத அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க முதல்வர் அறிவுறுத்தலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சில நாட்களுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி என்பதற்கு பதிலாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். இதேபோலவே பல்வேறு அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய விதத்திலேயே ஊடகங்களில் பேசிவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று (அக்டோபர் 30) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "பிரதமர் பெயரே தெரியாத அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க முதல்வர் அறிவுறுத்தலாம், பிரதமர் பெயரை மாற்றிப் பேசுகின்ற அறிவாளிகளாகத்தான் அமைச்சர்கள் உள்ளனர். ஜெயலலிதா இருந்தவரை ஏன் அமைச்சர்களை பேசவிடவில்லை என்பது தற்போதுதான் தெரிகிறது.

தமிழகத்தின் மகாராணி போல செயல்படும் தமிழிசை சவுந்தரராஜன், மற்றவர்களை வசைபாடுகிறார், அவர் இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும். நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் மக்களால் விரும்பப்படுபவர்கள். அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்க வேண்டாம் என்பது எனது கருத்து. பொது விநியோகத் திட்டத்தினைப் பிரதமர் மோடி சீர்குலைத்த விளைவுதான் சர்க்கரை விலை உயர்வு" என்றார்.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விநியோகம் செய்யவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றும் இளங்கோவன் கூறினார். பேரம் படியாத காரணத்தினால் குறைந்த விலை மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக