திங்கள், 30 அக்டோபர், 2017

"தன்னாட்சித் தமிழகம்" கூட்டியக்கமாக உருவாகிறது. திருச்சியில் முதல் கூட்டம்,

Aazhi Senthil Nathan : தமிழகத்தின் தன்னாட்சியை வென்றெடுப்பதற்கான
கூட்டியக்கமாக தன்னாட்சித் தமிழகம் உருவாகிறது. திருச்சியில் முதல் கூட்டம்,
நவம்பர் 1 சென்னையில் அறிமுகம்
அனைவருக்கம் வணக்கம்,
நெடுங்கால எண்ணம் ஒன்று வடிவம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்துக்கு தன்னாட்சியை வென்றெடுப்பதற்கான மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்குவதற்காக பல தோழர்கள் எடுத்த முயற்சியின் விளைவாக தன்னாட்சித் தமிழகம் என்கிற கூட்டியக்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை உருவாக்குவதற்கான முன்மொழிவின் மீதான கலந்துரையாடல் நேற்று திருச்சியி நடைபெற்றது. பலருடைய ஒப்புதலோடும் உற்சாகமான ஆதரவோடும் அது உருவாகியிருக்கிறது.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்கள் தோழர்கள் அரங்க. குணசேகரன், கண.குறிஞ்சி, வீ.ந.சோமசுந்திரம், அரசெழிலன் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.ஷெரீஃப், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலர் தோழர் பெரியார் சரவணன், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் தோழர் செல்வமணியன், சோஷலிச மையத்தின் தோழர்கள் துரை. தங்கபாண்டியன், செல்வி, மக்கள் இணையத்தின் தோழர்கள் ஆழி செந்தில்நாதன், ஸ்டாலின் சமதர்மன், வே. தாண்டவமூர்த்தி, பெ.பழநி, ஆதித்தமிழர் பேரவை தோழர் இரா.முல்லையரசு, தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் தோழர் மா.சேகர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் தோழர் சீனி.விடுதலையரசு, திராவிட விடுதலைக் கழகம் தோழர் புதியவன், இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தோழர் உமர், எழுத்தாளர் சுதீர் செந்தில், களச்செயல்பாட்டாளர்கள் கி. நா. பனசை அரங்கன், வழக்கறிஞர் கரூர் இராசேந்திரன், தென்னன் மெய்ம்மன், தைப்புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் இரா. கவிதா, நா. தினேஷ் குமார், மதுமிதா. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் தோழர் தமிழ்க்கவி, சாமானிய மக்கள் நலக்கட்சி தோழர் ந.சண்முகம் உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள், நேற்று சந்தித்து பேசி இதற்கான முன்மொழிவை ஏற்றனர்.
வேறு பல தோழர்கள் தொலைபேசி அழைப்புகளின் வழி தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர். தமிழக அளவில் ஓர் ஒருங்கிணைப்புக்குழுவும் மண்டல அளவில் ஒருங்கிணைப்புக்குழுக்களும் உருவாக்குவதற்கான பணியையும் தொடங்கியிருக்கிறோம். தொடர்ச்சியாக சென்னை, கோவை, மதுரை என பல மண்டலங்களில் ஒருங்கிணைப்புக்குழுக்களை விரிவுபடுத்தி தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஒருமுகமாக தன்னாட்சித் தமிழகம் திகழவேண்டும் என்கிற திட்டத்தை நோக்கி நகர்கிறோம்.
கூட்டியக்கத்தின் நோக்கம், திட்டங்கள் குறித்த அறிமுகத்தை இவ்வாரம் நவ.1 – தமிழர் காயகத் திருநாள் அன்று – சென்னையில் ஊடகவியலர் சந்திப்பு ஒன்றின் மூலமாக வெளியிடவுள்ளோம்.
தமிழகத்தின் உரிமை நாடும் மேலும் பல இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், தனிநபர்களும் இதில் இணைவார்கள். ஒரு மாபெரும் பரப்பியக்கமாக – மக்கள் உணர்வியக்கமாக – இது உருவாகும் என நம்புகிறோம்.
தமிழக அளவிலும் மண்டல, மாவட்ட அளவிலும் இணைந்து பணியாற்ற விரும்பும் தோழர்கள் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
தொடர்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக