ஞாயிறு, 22 அக்டோபர், 2017

திரைப்பட கதை விவாதங்களில் பாஜகவையும் அழைக்கவேண்டுமா?

தீக்கதிர் :விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்திற்கு பாஜக-வினர் விடுத்துள்ள மிரட்டலை, தமிழ்த் திரைக் கலைஞர்கள் பலரும் தங்களின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கண்டித்து பதிவிட்டுள்ளனர்.‘மெர்சல்’ படத்திற்கான மிரட்டல் மூலம் ‘பேச்சு சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது’ என்று ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கூறியுள்ளார்.வரிகளை ஒன்றாக்கியதன் மூலம் நாட்டிற்கு மக்களின் பங்களிப்பு என்ன என்பதை ஜிஎஸ்டி உணர வைத்துள்ளது என்றும், இந்நிலையில் மக்கள் தங்களுக்கு செய்ய வேண்டியதை அரசாங்கத்திடம் கேட்கத்தான் செய்வார்கள்; அதில் என்ன தவறு? என்றும் நடிகர் அரவிந்த்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அரசாங்கம், அரசியல்வாதிகள், கொள்கைகள், சினிமா என பொதுவில் இருக்கும் அனைத்தும் கேள்வி கேட்கப்படும், விமர்சிக்கப்படும். அதை தடுக்க நினைப்பது வெட்கக்கேடானது என்று நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.

ஒரு நடிகர் இயக்குநர் எழுதிய வசனத்தையே பேசுவார்; இதுவே உலக நியதி. அதற்கு அந்த நடிகரிடம் மட்டும் விளக்கம் கேட்பதில் எந்த நியாயமுமில்லை என்று நடிகை ஸ்ரீப்ரியா குறிப்பிட்டுள்ளார்.பட விவாதத்தின் போது, கட்சியைச் சேர்ந்த ஒருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று விதி விதிப்பார்கள் போலிருக்கிறது என்று நடிகர் சிபிராஜ் சாடியுள்ளார்.மெர்சல் நல்ல மெஸேஜை சொல்லியிருக்கும் ஒரு படம்; அதை யாரும் வெட்டக்கூடாது; முட்டாள்தனமான செயலை நிறுத்துங்கள் என்று நடிகை ஸ்ரீதிவ்யா கூறியுள்ளார்.மெர்சல் படம் மிக நன்றாக உள்ளது. சமுதாயத்திற்கு தேவையான பல கருத்துகள் உள்ளன; மெர்சலை பார்த்து மத்திய, மாநில அரசுகள் மிரண்டு போயுள்ளன என்று இயக்குநர் அன்பழகன் கூறியுள்ளார்.ஜிஎஸ்டி குறித்த மக்களின் கருத்துகளை தைரியமாக பேசியதற்கு விஜய் அண்ணாவுக்கும், மக்களின் குமுறலை எழுதிய இயக்குநர் அட்லிக்கும் என் வணக்கங்கள். மற்ற மாநிலங்களை விட, ஒரே ஒரு மாநில மொழியைச் சேர்ந்த ஒரு படம், ஒட்டு மொத்த தேசத்துக்காகப் பேசியுள்ளது. பெருமையான தமிழன் நான். என்பெயர் சாம். நான் ஒரு இந்தியன் என்று இயக்குநர் சாம் ஆண்டன் கூறியுள்ளார்.
சில அரசியல்வாதிகள் உருவாக்கிய சர்ச்சைகளுக்கு நன்றி. மெர்சல் படம் பற்றி முழுப் பக்க செய்திகள் நாளிதழில் வந்திருக்கின்றன என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் சென்சார் செய்வதை விட மீண்டும் தேர்தல் வைத்தால் அது நமக்கு நல்லதை செய்யும் என்று விநியோகஸ்தர் சக்திவேலன் தெரிவித்துள்ளார்.இந்த ஆட்சியில் கருத்து சுதந்திரம் இருக்கு என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி என்று நடிகர் சிரிஷ் மிகக் கடுமையாக சாடியுள்ளார்.முழு கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்! இந்தியா மிக சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன். மறு தணிக்கை செய்ய தேவையில்லை என்று ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.
(தீக்கதிர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக