வியாழன், 12 அக்டோபர், 2017

கடனில் மூழ்கும் இந்திய வங்கிகள்!

மின்னம்பலம் : ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு 4.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.9.5 லட்சம் கோடியாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளிடம் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கடனாளிகள் பலர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாவதும் வாடிக்கையாகிவிட்டது. கடனை வசூலிக்க அரசு தரப்பிலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், வங்கிக் கடன் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, 2017ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு 4.5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் வாராக் கடன் அளவு 5.8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தனியார் வங்கிகளை விடப் பொதுத்துறை வங்கிகளிலேயே வாராக் கடன் பிரச்னை அதிகமாக உள்ளது. குறிப்பாக ஸ்டீல் மற்றும் உள்கட்டுமானம் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படும் கடன்கள் அதிகமாக வாராக் கடன்களாகின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, மார்ச் மாதம் வரையில் புதிய கடன்கள் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளன. சிறு நிறுவனங்கள் மற்றும் சில்லறை வர்த்தகத் துறைக்குக் கடன் வழங்கும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது. வாராக் கடன்களை வசூலிக்கக் கொள்கைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் விதித்துவந்தாலும், கடன் சுமை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக