சனி, 21 அக்டோபர், 2017

திமுக ஆட்சியில் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த சினிமாக்காரர்கள் !

Don Ashok-  Ashok R :   கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சி. தலைமைச்செயலாளர், குண்டுவெடிப்பு மிரட்டலை முதல்வரிடம் தெரிவிப்பார். அதற்கு கலைஞர் குரலில், கலைஞர் பேச்சுத்தொனியில், “தேர்தல் நேரம். எதுவும் நடக்காம பாத்துக்கங்க,” எனப் பதில் வரும்.
இத்தனைக்கும் கமலுக்கு கலைஞானி எனப் பட்டமளித்தவர் கலைஞர். ஆனாலும் கலைஞரை குறைத்து மதிப்பிடும் வண்ணம் கமல் இப்படி ஒரு காட்சியை கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதே வைத்திருப்பார். படத்தில் கோபாலபுரம் வீடும் காட்டப்படும்.

இந்த அளவிற்கான கருத்து சுதந்திரம் என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே சாத்தியப்படும் விஷயம். அங்குதான் ஜனாதிபதியை எப்படி வேண்டுமானாலும் சினிமாவில் காண்பிப்பார்கள். எனக்குத்தெரிந்து இந்தியாவில் எந்த முதலமைச்சரையும் இப்படி சினிமாவில் காட்டிவிட்டு தப்பிக்கமுடியாது. காட்டினால் யாருமே சும்மா இருக்க மாட்டார்கள்.
குறிப்பாக ஜெவை ஏதாவதொரு சினிமாவில் இப்படி சித்தரித்தால் என்னவெல்லாம் கொடுமைகள் நடக்கும் என்பது தமிழகத்தில் ஒரு சிறுபிள்ளைக்கும் கூடத் தெரியும். அவ்வளவு ஏன், இப்போதுள்ள ஜெ ஆட்சியில் அரசை சின்னதாக விமர்சித்து ஏதாவது வந்தாலே வரிவிலக்கு கிடையாது. ஆனால் ஆட்சியில் சகல அதிகாரங்களுடன் இருந்தாலும் சினிமாவிற்கான, கலைஞர்களுக்கான கருத்து சுதந்திரத்தை முழுதாக அனுமதிப்பவர் கலைஞர்.
கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கூட எட்டிப்பார்த்த இருவர் திரைப்படம் அவர் ஆட்சியில் தான் வெளிவந்தது. எல்லாவற்றுக்கும் மேல் கமல் மேல் எந்த வன்மமும் இல்லாமல் விஸ்வரூபம் விவகாரத்தில் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் கலைஞர்.
மேடையிலேயே கலைஞருக்கான பாராட்டுவிழாவுக்கு வருமாறு நடிகர் சங்கத்தில் வற்புறுத்துகிறார்கள் எனப் பேசிய அஜீத் தன்னிடம் விளக்கம் கொடுத்ததும், சரத்குமாரையும், ராதாரவியையும் அழைத்து விழாவுக்கு வரவேண்டும் என யாரையும் வற்புறுத்தாதீர்கள் என கடிந்துகொண்டவர் கலைஞர்.
வடிவேலு என்ற நடிகன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு வாய்ப்புகளே கிடைக்காமல் செய்து தமிழகத்தில் ஐந்தாண்டுகள் சிரிப்புப்பஞ்சம் ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.
தமிழ்திரைப்பட உலகின் 100வது ஆண்டுவிழாவில் கலைஞரின் பெயரையே தவிர்த்ததோடு, ரஜினி, கமல், மகேந்திரன் போன்றவர்களை மேடையில் நாற்காலிகளே கொடுக்காமல் நிற்கவைத்து ரசித்தவர் அடைந்தவர் ஜெயலலிதா.
வன்மத்தைத் துப்புகிறவர்கள் கலைஞரின் மேல் ஆயிரம் குறைகளைச் சொல்லலாம், நாளொரு மேனியாக, பொழுதொரு வண்ணமாக பொய்களைக் கட்டவிழ்த்து விடலாம். ஆனால் கலைஞர் மட்டும்தான் இந்தியாவில் இருக்கும் ஒரே ஜனநாயகவாதி என்பதையும், கருத்து சுதந்திரத்திற்கு கட்டற்ற சுதந்திரம் அளிக்கும் ஒரே அரசியல்வாதியும் அவர்தான் என்பதையும் அவரது எதிரிகளால் கூட மறுக்க முடியாது.
கருத்து சுதந்திரம் இருந்தால் தான் ஒரு அரசின் மீதான விமர்சனங்களை பயமின்றி எடுத்துவைக்க முடியும். எடுத்துவைக்க முடிந்தால்தான் அது ஜனநாயகம். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அது ஜனநாயக ஆட்சி. இல்லையேல் அது அவதூறு வழக்குகளின் ஆட்சி.
-Don Ashok

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக