வெள்ளி, 6 அக்டோபர், 2017

கேரளா கோவில்களில் தலித் மற்றும் இதர சாதியினர் குருக்களாக நியமனம்..


கேரளாவில் தலித்துகள் குருக்களாக நியமனம்!
மின்னம்பலம் : கேரளாவில் 6 தலித்துகள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்கள் குருக்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை கோயில் உட்பட 1240 கோயில்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகிக்கிறது. இந்தக் கோவில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ஆகமவிதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனப் பிரமாணர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு, 6 தலித்துகள் உட்படப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 36 பேரை இந்து ஆலய மதகுரு பணிக்காகத்தேர்வு செய்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 62 பேரின் பெயர்ப் பட்டியல் கடந்த வியாழன் (அக்டோபர் 5) அன்று வெளியிடப்பட்டது. அவர்களில் இருந்து நேர்காணல் மூலம் 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பணிகளுக்கு இருக்கும் இட ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் கேரளாவில் கோவில் மதகுரு பணிகளுக்கான தேர்வு நடைபெறுவது இதுவே முதன்முறை. எஸ்சி / எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளுக்கு மொத்த இடஒதுக்கீடு 32% ஆகும். தேர்வு செய்யப்பட்டவர்கள் திருவிதாங்கூர் தேவசம் பொர்டின் கீழ் இயங்கும் ஆலயங்களில் பணியாற்றுவார்கள்.
இந்த நடவடிக்கை திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் வரும் சபரிமலை கோவிலில் பிராமணரல்லாதோர் குருக்களாக நியமனம் செய்யப்பட வழி வகுக்கும் என்றாலும், தற்போதைய விதிகள்படி, பிராமணர் மட்டுமே முக்கியப் பொறுப்பில் இருக்க அனுமதிக்கப்படுவார். தலித் மதகுருமார்களை நியமிக்கும் கோரிக்கை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், மதகுருவாக விரும்பும் ஒருவரின் தகுதி என்பது சடங்குகள், மரபுகள் குறித்த அவருடைய அறிவைப் பொறுத்தது; அவருடைய சாதியைப் பொறுத்தது அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எர்ணாகுளத்தில் இருக்கும் நீரிக்கோடு சிவன் கோவிலில் தலைமை குரு பதவியை ஈழவர் ஒருவர் ஏற்கும் வாய்ப்பு வந்த நிலையில் அது மறுக்கப்பட்டது. இதனால், கே.எஸ். ராகேஷ் என்பவர் இது குறித்துப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீப்பை வழங்கியது.
2015ஆம் ஆண்டு, மங்களூர் காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன் பூஜாரே குட்ரோலி கோகர்நாத் கோயிலின் அர்ச்சகர்களாக விதவைகளை நியமித்தார். 2016ஆம் ஆண்டு ஒரு படி மேலே சென்று தலித் பெண்ணைப் பூசாரியாக நியமித்தார். கோகர்நாதேஸ்வரா கோயில் குட்ரோலி ஸ்ரீ கோகர்நந்தா ஷேத்ரம் எனவும் அழைக்கப்படும் இந்தக் கோயில் கர்நாடகா மங்களூர் குட்ரொலி பகுதியில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக