செவ்வாய், 17 அக்டோபர், 2017

கோயில் மரண கிரிவலம் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்னம்பலம் : திருச்சியில் பக்தர் ஒருவர் 3,200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து, கோயில் பிராகாரத்தை சுற்றிவருவதைத் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் நேற்று (அக்டோபர் 16) கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் தாத்தையங்கார்பேட்டை அருகே தலைமலை வனப் பகுதி உள்ளது. அந்த வனப் பகுதியில் இருந்து 3,200 அடி உயர மலையில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. விசேஷ தினங்கள் மற்றும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்
திருச்சி முசிறியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் (38) புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை (அக்டோபர் 14) என்பதால் சஞ்சீவிராய பெருமாள் கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, பக்தர்கள் சிலர் கோயில் பிராகாரத்தைச் சுற்றிவந்து வழிப்பட்டனர். கோயிலின் பின்புறம் நடக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய இடம் மட்டுமே உள்ளது.

இந்த நிலையில், திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் ஆறுமுகமும் கோயில் பிராகாரத்தைச் சுற்றிவர முடிவு செய்துள்ளார். அவர் இரண்டு முறை மிகக்குறுகிய இடத்தில் கோயிலின் விளிம்பைப் பிடித்து பிராகாரத்தைச் சுற்றி வந்தார். மூன்றாவது முறை சுற்ற முயன்றபோது, கால் தவறி 3,200 அடி பள்ளத்தில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். கோயில் பிராகாரத்தை சுற்றி வருபவர்களை பொதுமக்கள் சிலர் தங்கள் செல்பேசியில் வீடியோ எடுத்தபோது ஆறுமுகம் தவறி விழுந்தது பதிவாகியிருந்தது. ஆறுமுகம் தவறி விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி, ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆறுமுகத்தின் மனைவி தாரா (36) மற்றும் கோயில் நிர்வாகத்தினர் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நாமக்கல் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் அழகப்பன், நிலைய அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மற்றும் நாமக்கல் வனத்துறையினர், காவல்துறையினர் இணைந்து அன்று மாலை வனப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் ஆறுமுகத்தில் உடலை மீட்க முடியாமல் திரும்பி விட்டனர்.
அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (அக்டோபர் 15) அதிகாலை உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் கோயில் பகுதியிலிருந்து வனப் பகுதிக்குள் இறங்கி தேடத் தொடங்கினர். மதியம் 12 மணி அளவில் கோயில் அமைந்துள்ள இடத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் ஆறுமுகத்தின் உடல் கிடைத்துள்ளது. அவரின் உடலை மீட்டத் தீயணைப்பு படையினர் இரவு மலையடிவாரத்துக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பொதுமக்கள் சிலர், “பக்தர்கள் ஆபத்தான நிலையில் கோயில் பிராகாரத்தைச் சுற்றி வருகின்றனர். கோயில் பிராகாரத்தை சுற்றி வரும் வகையிலான வசதியை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். அல்லது கோயில் பிராகாரத்தை சுற்றிவருவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக