திங்கள், 2 அக்டோபர், 2017

ரஜினி, கமலைவிட ஏ.ஆர்.முருகதாஸ் ஆபத்தானவர்!

thetimestamil.com  : இரா.முருகவேள் ரஜினியை விட கமலை விட ஏ.ஆர்.முருகதாஸ்தான் தமிழ் சினிமாவின் மூலம் படுமோசமான அரசியலைப் பரப்புபவர் என்று தோன்றுகிறது.  இப்போது வந்திருக்கும் ஸ்பைடர் படத்தில் மக்களின் போன் பேச்சுக்களை உளவு அமைப்பு ஒட்டுக் கேட்கிறது. அதற்கு சில விதிகள் உள்ளன. கதாநாயகன் அதை மீறி செயல்பட்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கிறான். உதவுகிறான். மலையையே புரட்டுகிறான். மக்கள் பரவசத்தில் புல்லரித்து கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். Central monitoring system என்பது குடிமக்களின் போன், இணையத் தொடர்புகளை  வேவுபார்க்க காங்கிரஸ் அரசு உருவாக்கிய திட்டம். 2009லிருந்து நடைமுறையில் இருக்கிறது. பழைய டெலிகிராப் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த ஒட்டுக்கேட்கும் திட்டம் அனைத்து மக்களையும் சந்தேகத்துக்கு இடமானவர்களாகப் பார்க்கிறது, அந்தரங்கமாக உரையாடும் உரிமையைப் பறிக்கிறது, தவறாகப் பயன்படுத்தப்பட்டு யாரை வேண்டுமானாலும் எந்த விவகாரத்தில் வேண்டுமானாலும் கோர்த்து விட இந்த எப்போதோ ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் பயன்படக்கூடும்.
அனைத்து ஜனநாயக குடி உரிமைகளுக்கும் எதிரானது இது என்று பலதரப்பைச் சேர்ந்த அறிவுஜீவிகளாலும் அமைப்புகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது..

இதற்கு எதிராகத்தான் மேற்கு நாடுகளில் ஸ்னோடன், அஸாஞ்சே, செல்ஷியா போன்றவர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர்.
முருகதாஸ் முன்பு ஒரு படத்தில் சீனாவால் இந்தியா முற்றுகையிடப்படுகிறது என்று பீதியைக் கிளப்பினார். உலகமயமாக்கலுக்குத் திறந்து விடப்பட்ட இந்தியாவை ஏன் முற்றுகையிட வேண்டும் என்று புரியவில்லை. இந்த இரண்டு பேருமே நாடுகளைக் கூறு போட்டு விற்பவர்கள். கொள்ளைக் கூட்டத்துக்கும் மாபியாவுக்கும் என்ன வித்தியாசம்?
இந்தப்படத்தில் சுடுகாட்டில் பிறக்கும் சுடலை அழுகுரலை கேட்டு ரசிக்கும் சாடிஸ்ட் என்ற திமிர்த்தனம் வேறு. இவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் அல்லவா? முருகதாஸுக்கு பிஜேபி சார்ப்பு இருக்கலாம் போலத் தெரிகிறது. ஆனால் அவர் அதிகார வர்க்கத்தின் (Bureaucracy) படுமோசமான பாசிசத் தன்மை வாய்ந்த ஏதோ ஒருபிரிவுக்கு பிரச்சாரப் படங்கள் எடுக்கிறார்.
இரா. முருகவேள், நாவலாசிரியர்; மொழிபெயர்ப்பாளர்.  /thetimestamil.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக