வெள்ளி, 27 அக்டோபர், 2017

தமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு ! தமிழின் தொன்மையைக் ... சமஸ்கிருதத்தினின்று தமிழ் வந்ததென்று சொல்ல மாட்டார்.

abrahamin pandithar 350/keetru.com  மு.ஆபிரகாம் பண்டிதர் எழுதிய "கருணாமிர்த சாகரம்" நூல் வெளியாகி நூறாண்டுகள் நிறைவேறியதையட்டி அந்நூற் தொகுப்பின் முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் ஒரு பகுதி இங்கே வெளியிடப்படுகிறது.
Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. (4.)
“It is to be observed that though the long list of names mentioned in the Pooranas are all Sanskrit, these are only book names. The names of the country reported or ascertained by Aryan travellers and settlers wereinvariably translated into Sanskrit by the literary caste of the Aryans. It is a very common error to suppose that because none but Sanskrit names are found in the ancientliterature of the country, it was therfore a country occupied by an Aryan people, and that all the places mentioned were founded by the Aryans. But in fact as the Aryan visitors to India had the monopoly of literature, the indigenous names could only appear in a Sanskrit form; and no argument is to be thence deduced in one direction or another as to the extent of Aryan coloizations. In later times Aryan influence has undoubtedly given current names to geographical places even in Southern India. * * * It will be seen from the next note that Greek literature is analogous to Sanskrit in presenting indigenous Indian names in such a Greek dress that they are not easily recognisable; but the Greeks did not at all to the same extent actually translate Indian names.”
“புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிற நீண்ட அட்டவணைப் பெயர்களெல்லாம் சமஸ்கிருதப் பெயர்களாயிருந்தபோதிலும் அவைகளெல்லாம் புஸ்தகப் பெயர்களே யொழிய உண்மையான பெயர்களல்ல. ஆரியரான பிரயாணிகளும் புதுக்குடியேறு வோர்களும் தாங்கள் கண்டதாக அல்லது கேள்விப்பட்டதாகச் சொல்லும் தேசங் களின் பெயர்களெல்லாம் ஆரிய வித்வான் களால் தப்பாமல் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. இந்து தேசத்தின் பழமை யான நூல்களிலெல்லாம் சமஸ்கிருதப் பெயர்களே காணப்படுவதால் அந்தத் தேசம் ஆரியரால் குடியேறப்பெற்ற தேசமென்றும் அதில் சொல்லியிருக்கும் இடங்களெல்லாம் ஆரியரால் ஸ்தாபிக்கப்பட்டவையென்று நினைப்பது மிகவும் சாதாரணமான தப்பா யிருக்கிறது.

 உண்மை என்னவென்றால், இந்தியாவுக்கு வந்த ஆரியர்தான் இந்திய நூல்கள் சமஸ்தத்தையும் எழுதினவர்களான தால் அங்கங்குள்ள இடப்பெயர்கள் சமஸ் கிருதத்தில் மாத்திரம் இருக்கும்படியாயிற்று. இந்தப் பெயர்களை வைத்துக்கொண்டு ஆரியர் குடியேறின நாடுகளைப் பற்றி இப்படி யாவது அப்படியாவது யாதொன்றை ஸ்தாபிக்க முயலுவது தப்பு. ஆனால் பிந்திய காலங்களில் ஆரியருக்குண்டான செல் வாக்கினால்தான் தென்னிந்தியாவில்கூடத் தற்காலம் வழங்கிவரும் இடப்பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. பின் சொல்லப்போகும் விஷயத்தினால், சமஸ்கிருதம் போலவே கிரேக்க நூல்களும் இந்தியபேர்களை கிரேக்கப் பேர்கள்போல மாற்றிச் சொல்வதினால் அவைகள் இந்திய பேர்கள் என்ற உருவே தெரியாமல் போகின்றன என்ற சங்கதி வெளியாகும். ஆனாலும் ஆரியர் செய்தது போல கிரேக்கர் அவ்வளவு தூரம் இந்திய பேர்களைக் தங்களுடையவை போல் மாற்றிக்கொள்ளவில்லை.”
மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில் தமிழ் மொழிகள் ஆரியரால் சமஸ்கிருதத்தில் மாற்றப் பட்டுப் புராணங்களில் எழுதப்பட்டதாகவும் தாங்கள் கட்டாத பட்டணத்திற்குங் குடியிராத வீட்டுக்கும் சமஸ்கிருதப் பெயர் வைத்துக் கேள்விப் பட்டதைமாத்திரங்கொண்டு புராணக்கதைகள் கட்டுவதில் சிலர் தேர்ந்தவர்கள் என்பதாகவும் தெரிகிறது. தாங்கள் கேள்விப்பட்டதை மாத்திர மல்ல, உத்தேசமாய் நினைப்பதையும் உள்ளது போல் எழுதிவைக்கும் சாமர்த்தியம் ஆரியருக்குச் சுபாவமாகவே அமைந்திருக்கிறது. அவர்களிற் சிலர் நூதனமாய் உலகத்தில் ஒன்று உண்டானால், அதுவும் எங்கள் பழைய புராணங்களிலிருக்கிற தென்று சொல்லக்கூடிய விதமாய் கற்பனை செய்து வைப்பார்கள்.
இந்தக் கற்பனைகளுக்குள் இந்தியர்கள் கட்டுப்பட வழக்கப்பட்டு விட்டார்கள். நூதனமாய் இந்தியாவில் பிரவேசித்த ஆரியர், இதன்முன் இந்தியாவில் வசித்த ஜனங்களையும் அவர்கள் பாஷையையும் அப்பாஷையிலுள்ள நூல்களையும் அங்குள்ள ராஜாக்கள் பெரியோர் களின் சரித்திரங்களையும் முற்றிலும் மறைத்து, தங்கள் பாஷையையும் தங்கள் நூலையும் தங்கள் பெரியோரையுமே சொல்ல ஆரம்பித்தார்கள். இந்தியாவிற்கு வந்த கிரேக்கர்கள் இந்தியாவிலுள்ள சில பெயர்களைத் தங்கள் பாஷையில் மாற்றிய போது அவைகள் இந்தியபெயர்களென்று உருவே தெரியாமல் போயிற்றென்றும் அதைப் பார்க்கிலும் அதிகமாய் ஆரியர்கள் இந்தியபெயர்களைச் சமஸ்கிருதத்தில் மாற்றினார்களென்றும் சொல்லுகிறார். இந்தியா ஆரியராலேயே குடியேற்றப்பட்ட தேசமென்றும் அதிலுள்ள இடங்கள் எல்லாம் ஆரியரால் ஸ்தாபிக்கப்பட்டனவென்றும் நினைப்பது மிகவும் சாதாரணமான தப்பாயிருக்கிறதென்று மக்லீன் பண்டிதர் சொல்லுகிறதுபோலவே, சமஸ் கிருதத்திலிருந்து தமிழ் உண்டானதென்றும், சமஸ்கிருத வார்த்தைகள் கலவாமல் தமிழ்ப் பாஷை வழங்கமுடியாதென்றும் சொல்வதும் தப்பென்று சொல்லவேண்டியதாயிருக்கிறது.
முதல் ஊழியில் முதல் தமிழ்ச்சங்கமும் அச்சங்கத்திற்குரிய நூல்களும் அத்தேசமும் அழிந்துபோனபின் அதில் தொல்காப்பியம் ஒன்றே மிஞ்சினதாகக் காணப் படுகிறது. அதன்பின் இடைச்சங்கத்தார் காலத்து உண்டாகிய பல நூல்களும் இரண்டாவது ஊழியில் அழிந்துபோயின. அவற்றில் மிஞ்சியிருந்த சில நூல்களும் சமஸ்கிருத மொழிக்கலப்பாலும் சமஸ் கிருதத்திலிருந்து வந்ததென்று சொல்லும் வசனத் தாலும் கறைப்படுத்தப்பட்டிருக்கின்றனவென்று பின்வரும் வசனங்களில் தெரிகிறது.
தமிழ்ப் பண்டிதர் சூரியநாராயண சாஸ்திரியார் B.A., எழுதிய தமிழ் மொழியின் வரலாறு, பக்கம் 14, 15.
“வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களையுணர்ந்து அவற்றிற்கேற்ப வட மொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர் களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயுமிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர்.
‘முற்படைப்பதனில் வேறாகிய முறைமைபோல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்!
என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவலையுங் காண்க. இன்னும் அவர் தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதி காரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும் வடமொழி யினின்றுமே தமிழிற்கு அவை வந்தனபோலவும் காட்டினர்.
தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளுமியல் புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி, தமிழிலி பியையொட்டிக் ‘கிரந்தம்’ என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்; தமிழரை வசீகரிக்கு மாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப்புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாரா யினார்.”
மேற்காட்டிய வசனங்களைக் கவனிக்கையில் சமஸ்கிருத பாஷையிலேயே மிகுந்த பற்றுள்ள ஒரு ஆரியர் சொல்வதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்து தமிழர் அறியுமுன்னமே அவற்றைத் தாம் அறிந்தன போலவும் வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தனபோலவும் காட்டினாரென்று சொல்வதை நாம் கவனிக்கையில், தமிழிலுள்ள பல நூல்கள் வடமொழியில் மாற்றப்பட்டதாகவும் தற்காலம் வழங்கும் தமிழ் நூல்களில் சமஸ்கிருதத்திற்குப் பின்னே இவைகளுண்டானவையென்று தோன்றும் படி சில தித்துப்பாடுகள் அங்கங்கே செய்த தாகவும் நினைக்க இடந்தருகிறது. வடமொழிச் சம்பந்தமுள்ள சில பேரகத்தியச் சூத்திரங்களும், தொல்காப்பியச் சூத்திரங்களும், சில வைத்திய, வாத, யோக, ஞான, சோதிட நூல்களும் சில சித்துப்பாடுகளையுடையனவாயிருக்கின்றனவென்று சொல்லத்தக்கதாக அங்கங்கே சில வார்த்தை களும் சூத்திரங்களும் காணப்படுகின்றன. அகத்தி யருடைய மாணாக்கரில் ஒருவராகிய கழாரம்பர் இயற்றியதாக வெளிவந்திருக்கும் பேரிசைச் சூத்திரம் என்னும் நூலை நாம் கவனிப்போமானால், இவ் வுண்மை நன்கு புலப்படும். அப்புஸ்தகத்தில் முதலாவது ஒலி வடிவாயிருந்த காலமென்றும் இரண்டாவது அட்சரகாலமென்றும் மூன்றாவது இலக்கண காலமென்றும் நாலாவது சங்ககால மென்றும் நாம் ஐந்தாவது மடாதிபதிகளின் ஆதீன காலமென்றும் ஆறாவது சமணகாலமென்றும் ஏழாவது புராணகாலமென்றும் எட்டாவது அதம காலமென்றும் ஒன்பதாவது திருவிளையாடற் காலமென்றும் பத்தாவது தற்காலமென்றும் சொல்லுகிறார். இவ்வொழுங்கைச் சுமார் 34 வருஷங்களுக்கு முன் வீரசோழியத்திற்கு பதிப்புரை எழுதிய சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வசனங்களில் காண்கிறோம். ஆகையால் விசு வருஷத்திற்குப் பின்னே இப்பேரிசைச் சூத்திரம் புதிதாக எழுதப்பட்டிருக்கவேண்டும். அதிலும் ஐந்தாவது அநாதாரகாலமென்று தாமோதரம் பிள்ளை அவர்கள் சொன்னதை மாற்றி
“சித்தெலா நிறைந்து சித்தா யமர்ந்த
தேசிகர் மரபில் சிறந்து விளங்கும்
மடாதி பதிகளா மாண்பமை ஞானியர்
அளவிற் படுவதவ் வதீன காலம்.”
என்னும் சூத்திரம் ஐந்தாவதாக எழுதப்பட்டிருக் கிறது. இவைகளை நாம் கவனிக்கையில், அகத்தி யருடைய மாணாக்கர் பன்னிருவருள் கழாரம்பர் எழுதியிருக்க மாட்டாரென்று திட்டமாய்த் தெரிகிறது. தமிழ் நடையும் அதை ருசுப்படுத்துகிறது. மேலும் அகத்தியர் காலத்திலிருந்த கழாரம்பர் தற்காலம் வரைக்கும் தமிழ்ப் பாஷையின் கால வர்த்தமானத்தை எப்படிச் சொன்னார்? அப்படிச் சொன்னது உண்மையானால் தற்காலத்துக்கு மேல் வரும் பிற்காலத்தைப்பற்றி ஏன் யாதொன்றும் சொல்லவில்லை? இது சமஸ்கிருதத்தில் பேரபிமான முள்ள ஒருவர் கற்பனையே என்போம். இது போலவே போகத்திய சூத்திரங்களிலும் தொல் காப்பியச் சூத்திரங்களிலும் தமிழ் வடமொழிக்குப் பிந்தியதென்று காட்டும்படி செய்திருக்கும் சில எழுத்து மாறுதல்களையும் வார்த்தை மாறுதல் களையும் சூத்திரமாறுதல்களையும் இது முதற் கொண்டாவது தமிழ் மக்கள் ஊன்றிப்பார்ப் பார்களாக. இப்படியே தமிழில் வழங்கிய சங்கீத நூலும் அதாவது இசைத்தமிழும் ஆதியில் சமஸ் கிருதத்திலிருந்தே தமிழருக்கு வந்ததென்று யாவரும் எண்ணும் படியாகிவிட்டது. ஆனால் சமஸ்கிருத நூல்களில் வழங்கிவரும் சங்கீத முறைக்கும் தென்னாட்டில் வழங்கும் கர்நாடக சங்கீத முறைக்கும் மிகுந்த வித்தியாசமிருக்கிறதென்று அறிவாளிகள் காண்பார்கள். வடபாஷையில் எழுதப்பட்ட சுருதி முறைகளுள்ள கானம் தென்னாட்டில் வழங்காமல் போனாலும் வட பாஷையிலுள்ள பெயர்களே சங்கீதத்தில் வழங்கி வருகின்றன. இவ்விபரம் யாவும் இதன்பின் பார்ப் போம். மேலும் கடைச்சங்க காலத்தில் தோன்றிய ஜைனராலும் ஆரியராலும் சமஸ்கிருத வார்த் தைகள் தமிழ் மொழியோடு கலக்க ஆரம்பித்த தென்றும் தமிழ் மொழிகள் மற்றப்பாஷைகளோடு கலந்ததென்றும் பின்வரும் வசனங்களால் தெரிகிறது.
Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. (41-42.)
“The greater number of the Sanskrit and Pracrita words in the Dravidian languages were introduced by the Jaina writers. Some tatsamas, however, were introduced by the three comparatively modern philosophic schools: the sheiva Siddhaunta, the School of Sankaracharya and the School of Ramanoojacharya. Sanskrit words are said to have been introduced even before the time of the Jains, but it is doubtful whether these are not ancient words common to both Aryan and Dravidian languages.”
“திராவிடபாஷைகளில் வரும் சமஸ்கிருத பிராகிருத வார்த்தைகளில் மிகுதியானவை ஜைன வித்துவான்களால் முதல் முதல் திராவிட பாஷை களில் உபயோகிக்கப்பட்டன. ஆனாலும் சில தற் சமயங்கள் சிறிது காலங்களுக்கு முன்னேற்படுத்தப் பட்ட சைவசித்தாந்தம் சங்கராசாரியம் ராமானு ஜாசாரியம் என்ற மூன்று சமயவாதிகளாலும் முதல் முதல் இப்பாஷைகளில் உபயோகிக்கப் பட்டன. ஜைனருடைய காலத்துக்கு முன்னேயே சமஸ்கிருத வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் அவைகள் ஆரிய திராவிட பாஷைகளுக்குப் பொதுவான வார்த்தைகளாயிருக்கப்படாதோ என்று சந்தேகிக்க இடமிருக்கிறது.”
இதில், அக்காலத்தில் வழங்கி வந்த சில மொழிகள் ஆரிய திராவிட பாஷைகளுக்குப் பொதுவான வார்த்தைகளாயிருக்கப்படாதோ வென்று சந்தேகிக்க இடமிருக்கிறதென்கிறார். சமஸ்கிருத பாஷையில் மிகுந்த வைராக்கியமுள்ள ஆரியர் தாங்கள் செல்லுமிடங்களிலுள்ள பாஷை களில் வழங்கும் வார்த்தைகளையும் கருத்துக் களையும் புதிது புதிதாக அமைத்து நூல் உண் டாக்கினார்கள். ஆகையினால் தமிழ்மொழிகளும் சமஸ்கிருதத்தில் பல சேர்க்கப்பட்டதென்று தெளிவாகத் தெரிகிறது. சமஸ்கிருத பாஷை யோடு சேர்ந்து பூர்வ கலோகங்களில் அமைந்த பின் அவ்வார்த்தைகள் இரண்டுக்கும் பொதுவா யிருக்கலாமோவென்று சந்தேகிக்க இடந்தருவது கால இயல்புதானே. இரவல் வாங்கினதைத் திரும்பக் கொடுக்கக்கூடாதென்ற எண்ணம் வந்தபின் அதை இனந்தெரியாமல் பண்ணுவது உலக இயற்கை தானே. ‘இரவல் உடைமை, எனக்கிசைவாயிருக்கிறது, என் அப்பா ஆணை நான் கொடுக்க மாட்டேன்’ என்றதுபோல இதுவுமாயிற்று. இப்படித் தமிழ் மொழிகள் பலவும் சமஸ்கிருதத்தில் கலந்த பின்பும், அநேக தமிழ் நூல்கள் சமஸ்கிருதத்தில் திருப்பப் பட்டபின்பும்தான், சமஸ்கிருதத்திலிருந்தே தமிழ் மொழிகள் பலவும், நூல்கள் பலவும் வந்தன வென்று சொல்லத் துணிந்தார்களென்பதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.
Dravidian Comparative Grammar by Bishop Caldwell, P. 34.
 “Professor Wilson observes that the spoken languages of the South were cultivated in imitation and privalry of the Sanskrit, and but partially aspired to an independent literature; that the principal compositions in Tamil, Telugu, Canarese, and Malayalam are translations of paraphrases from Sanskrit works; and that they largely borrow the phraseology of their originals. This representation is not perfectly correct, in so far as the Tamil is concerned; for the compositions that are universally admitted to be the ablest and finest in the language, viz., the Cural and the Chintamani, are perfectly independent of the Sanskrit, and original in design as well as in execution.”
“தெற்கே பேசப்படுகிற பாஷைகள் சமஸ் கிருதத்தைப் பார்த்து அதற்கு மாறாக உண்டாக்கப் பட்டவைகளென்றும், அவைகள் சுய கிரந்தங் களை உண்டாக்கப் பிரயத்தனம் பண்ணியும் பலிக்க வில்லையென்றும், தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள பாஷைகளிலுள்ள முக்கியமான நூல் களெல்லாம் சமஸ்கிருத நூல்களின் மொழி பெயர்ப்புகளேயென்றும், அவைகள் சமஸ்கிருத மொழிகளையும் தொடர்மொழிகளையும் வாசகப் போக்கையும் நடையையுமுடையவைகளாயிருக் கின்றனவென்றும் உவில்சன் பண்டிதர் கூறு கிறார். இப்படி அவர் கூறுவது, தமிழ்ப்பாஷையின் விஷயத்தில் முற்றிலும் சரியல்ல. ஏனெனில்,
அந்தப் பாஷையில் மிகவும் நேர்த்தியானவை களும் சிறந்தவைகளுமென்று உலகத்திலுள்ள அறிஞர்கள் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிற திருக்குறளும் சிந்தாமணியும் சமஸ்கிருதக் கலப்பே யின்றி முழுதும் தமிழ்மயமாகவே விளங்குகின்றன.”
மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், சமஸ்கிருத பாஷையே முந்தியுண்டானதென்றும் அதற்கு எதிரிடையாகத் தமிழும் தமிழைச்சேர்ந்த பாஷைகளுமுண்டாக்கப்பட்டனவென்றும் திராவிட நூல்கள் சமஸ்கிருத பாஷையின் மொழி பெயர்ப்புகளாயிருக்கின்றனவென்றும் அவற்றின் நடை சமஸ்கிருதத்தின் நடையையே ஒத்திருக்கிற தென்றும் உவில்சன் பண்டிதர் சந்தேகிக்கிறார். இதுபோலவே தற்காலத்திலுள்ள சமஸ்கிருத பண்டிதர் ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்ளு கிறார்கள். ஆரிய பாஷையின் வார்த்தைகள் கலந்த பின்பும் தமிழ் மொழிகளை ஆரியபாஷை வார்த்தை களாகச் சேர்த்துக்கொண்ட பின்பும் சமஸ்கிருதத்தி லிருந்தே தமிழ் வந்ததென்று சொல்லாமல் வேறே என்ன சொல்வார்கள்? சென்ற 800 வருஷங் களுக்குள் பல புராணங்களும் சில வேதாந்த நூல் களும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மையே. ஆயினும் அதுகொண்டு அதற்கு முன்னுள்ள தமிழ் நூல்களெல்லாம் சமஸ்கிருதத்திலிருந்தே வந்தன என்று சாதித்தல் எங்ஙனம் பொருந்தும்? சமஸ்கிருத பாஷைகளெல்லாம் முழுதும் தமிழ் வார்த்தைகளால் அமைந்திருப்பதற்குத் திருக்குறளும் சிந்தாமணியும் இங்கே உதாரணமாகக் காட்டப் படுகின்றன. இவற்றில் வழங்கிவரும் சில தமிழ் வார்த்தைகளைச் சமஸ்கிருத வார்த்தைகளென்று சொல்லும் பேதைகளுமுண்டு. திருக்குறள் தமிழ் நாடும் தமிழ் வேந்தரும் பலவிதத்திலும் சீர் குலைந்து-தேய்ந்தகாலம் செய்யப்பட்டதென்று நாம் அறிவோம். இதிலும் மேலானவைகளாக இயல் இசை நாடகமென்னும் முத்தமிழுக்கும் எழுதிய நூல்களும் நீதி நூல்களும் முதற் பிரளயத் தாலும் இரண்டாம் பிரளயத்தாலும் அழிந்து போய்விட்டன. ஆரியரும் சமணரும் தமிழ் நாட்டில் கலந்த பின்பும் மூன்றாவது தமிழ்ச் சங்கத்தின் இறுதியிலும் திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் வெளிவந்தன. அதன் முன்னுள்ள தமிழ் மொழிகள் மிகச்சிறந்தவகையென்றும் கலப் பற்றவையென்றும் சிறந்த இலக்கணமுடையவை யென்றும் தொல்காப்பியத்தால் அறிவோம். தமிழ் மொழியின் தொன்மையைக் கவனித்தறிந்த எவரும் சமஸ்கிருதத்தினின்று தமிழ் வந்ததென்று சொல்ல மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக