செவ்வாய், 17 அக்டோபர், 2017

புத்தகச் சுமை: மாணவி மரணம்!

 புத்தகச் சுமை: மாணவி மரணம்!
மின்னம்பலம்:  தெலங்கானா மாநிலம் கரிமாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று (அக்டோபர் 16) காலை மாணவி ஒருவர் புத்தகச் சுமை தாங்காமல் பள்ளி வளாகத்திற்குள்ளே கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரங்கல்லைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷிதா என்ற மாணவி கவுடில்யா உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார். வழக்கம்போல் நேற்று காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்த ஸ்ரீவர்ஷிதா மாடிப்படியில் சென்றுகொண்டிருந்தார். மூன்றாவது மாடியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மாட்டியிருந்த புத்தகப்பை சரிந்ததில் அவர் கீழே விழுந்தார். இதில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மூக்கில் இருந்து இரத்தம் வழிந்துகொண்டே இருந்தது.
ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். மாணவிக்குக் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளதால் அவரை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி இறந்துவிட்டார்.

தங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதால்தான் அவள் இறந்தாள் என பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த மாணவியின் பெற்றோருடன் சேர்ந்து பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பள்ளி முதல்வர் கே. ஸ்ரீதர் கூறுகையில், நாங்கள் உடனடியாகத்தான் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மாணவி குறைந்த ரத்த அழுத்தம், குறைந்த நீர்ச்சத்து காரணமாகத்தான் இறந்தார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக