திங்கள், 16 அக்டோபர், 2017

சின்னத்தை முடக்க வேண்டும்: தினகரன் தரப்பு வாதம்!

மின்னம்பலம் : இரட்டை இலைச் சின்னத்தைப் பெறக் கட்சியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சின்னத்தை முடக்க வேண்டும்: தினகரன் தரப்பு வாதம்!அணிகள் இணைந்த நிலையில், தங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் வேண்டும் என்று ஒருங்கிணைந்த அணியினர் தரப்பிலிருந்தும், தினகரன் தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆவணங்களை தாக்கல் செய்ய கடைசி நாள் என்று செப்டம்பர் 29ஆம் தேதியை அறிவித்து அக்டோபர் 6ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட தினகரன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் விசாரணை நடைபெறும் நாளான அக்டோபர் 6ஆம் தேதி இறுதி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய தினத்தின் விசாரணை தாமதமாகத் தொடங்கியது.

விசாரணையில், இரு அணிகள் தரப்பிலிருந்தும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலில் வாதங்களை எடுத்து வைத்த ஒருங்கிணைந்த அணிகள் தரப்பு, "சசிகலா, தினகரன் கையில் அதிமுக சென்றால்,அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். எங்கள் தரப்புக்குத்தான் பெரும்பாலானோர் ஆதரவு உள்ளது. அணிகள் இணைந்துள்ள நிலையில் பிரச்சினை தீர்ந்துவிட்டது எனவே எங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னத்தை வழங்க வேண்டும்" என்று தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தனர். இதையடுத்து அக்டோபர் 13ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தினகரன் தரப்பு அவகாசம் கோரியதால் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் இரட்டை இலை தொடர்பாக இறுதி விசாரணை தொடங்கப்பட்டது. ஒருங்கிணைந்த அணிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார் ஆகியோரும், தினகரன் தரப்பிலிருந்து அஸ்வினி குமாரும் ஆஜராகினர்.
தினகரன் தரப்பில் ஆஜரான அஸ்வினி குமார் "நாங்கள் எதிர்தரப்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள குளறுபடிகளை நிரூபிக்க முன்பு அவகாசம் கேட்டிருந்தோம். ஒருங்கிணைந்த அணியினர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 6 பேரின் கையெழுத்துக்கள் பொருந்தவில்லை, நாங்கள் குளறுபடிகளை நிரூபிக்கத் தயாராக உள்ளோம்" என்ற வாதத்தை முன்வைத்தார்.
ஆனால் இதை நிராகரித்த தேர்தல் ஆணையம் '"பிரமாணப் பத்திரங்களில் உள்ள கையெழுத்து குறித்து யாரையும் நேரில் வரவழைத்து விசாரணை செய்ய இயலாது, எழுத்துபூர்வமான ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்தது.
இதையடுத்து தனது வாதத்தைத் தொடர்ந்த அஸ்வினி குமார், "செப்டம்பர் 29ஆம் தேதிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. ஒருவரே பலமுறை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இரட்டை இலை சின்னத்தைப் பெற,கட்சியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும்." என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதையடுத்து ஒருங்கிணைந்த அணியினர் சார்பில்,"நாங்கள் இதுவரை 1,877 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுப் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளோம். அவற்றில் எதுவுமே போலியானவை அல்ல. பெரும்பான்மை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எங்களுக்கே உள்ளது.எங்கள் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் போலி உள்ளது என்றால், உரிய பொதுக்குழு உறுப்பினர்கள் புகார் அளிக்காதது ஏன்?" என்ற கேள்வியை முன்வைத்தனர்.
“திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றன. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையே தினகரன் தரப்பு முன்வைப்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று பதில் வாதத்தை எடுத்துரைத்தனர். சுமார் இரண்டு மணி நேரம் காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அஸ்வினி குமார் தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரையும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. விசாரணையின் இடையில் இரு தரப்புக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக