புதன், 25 அக்டோபர், 2017

சாருநிவேதிதா : அட பதர்களா!... பாதிக்கப்பட்டவனின் மனநிலை ஏன் புரியவே மாட்டேன் என்கிறது தெரியுமா?

முகநூலில் எழுதும் 99 சதவிகிதம் பேர் திருநெல்வேலியில் குழந்தைகளை எரித்துத் தன்னையும் மனைவியையும் எரியூட்டிக் கொண்ட மனிதன் உங்களைப் போலவே யோசிக்க வேண்டும், மனிதாபிமானமாக நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்றெல்லாம் எழுதும் போது அது அந்த பாதிக்கப்பட்டவனின் மீது செலுத்தப்படும் எத்தகைய கொடூரமான வன்முறை என்று புரியவில்லையா? உங்கள் அனைவரையும் பார்த்து பரிதாபப்படுகிறேன். வாழ்வே போய் விட்டது; பாதுகாக்க வேண்டிய போலீஸே மிரட்டுகிறது; கலெக்டரோ புல் புடுங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆயிரம் மனுக்கள் வரும். அவர் பிஸி. இதெல்லாம் போலீஸ் செய்ய வேண்டிய வேலை. இப்படி எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில், போலீஸும் மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த மனிதன் என்னய்யா செய்வான்? தன் குழந்தைகளையும் தன்னையும் தானே எரித்துக் கொள்வான். தன்னை முழுமையாகக் கைவிட்டு விட்ட இந்த சமூகத்தை எப்படி ஐயா அவன் எதிர்கொள்வான்? ஏன் உங்களுடைய மிடில்கிளாஸ் ---- இலிருந்தே யோசிக்கிறீர்கள்? பாதிக்கப்பட்டவனின் மனநிலை ஏன் உங்களுக்குப் புரியவே மாட்டேன் என்கிறது தெரியுமா? மாத முடிவில் உங்களுக்குக் கிடைக்கப்போகும் சம்பளம். அடுத்த வேளை சோறு கிடைக்கும் என்ற தைரியம்.
தலைக்கு மேலே குண்டுகள் பொழிந்து கொண்டிருக்கும் போது, பதுங்கு குழியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்து கொண்டிருக்கும் போது உங்கள் மனம் இப்படி யோசிக்குமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கும் மெர்சலில் விஜய் சினிமா படுதாவிலேயே தீர்வு சொல்கிறார் பாருங்கள், அவருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. நாலைஞ்சு ப்ரைவேட் மருத்துவமனை முதலாளிகளைக் கொன்று விட்டால் எல்லோருக்கும் இலவச மருத்துவம் கிடைத்து விடும். அட பதர்களா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக